KALVISOLAI TNPSC

Monday, 17 October 2016

தேர்வுக்கு திட்டமிட சரியான தருணம்

தேர்வுக்கு திட்டமிட சரியான தருணம்

 

பலருக்கும் தேர்வு நெருங்க நெருங்க ஆர்வமும், பதற்றமும் ஏற்படுவது இயல்பு. ஆரம்பம் முதலே திட்டமிட்டுப் படித்தால் தேர்வுகள் இப்படி அச்சுறுத்தாது. இன்னும் பொதுத்தேர்வை எதிர்கொள்ள போதிய அவகாசம் உள்ளது. காலாண்டுத் தேர்வு முடிவின் அடிப்படையில் இறுதித் தேர்வை எழுத திட்டம் வகுக்கலாம். அதன்படி படித்தால் நிச்சயம் அபார சாதனைகளை படைக்கலாம். தேர்வுக்குத் தயாராக சில பயனுள்ள டிப்ஸ்களை பார்ப்போம்..

* எப்போதுமே அடித்தளம் திட்டமிடல்தான். காலாண்டுத் தேர்வின் மதிப்பெண்களை சுயபரிசோதனை தேர்வாக கருதிக் கொள்ளுங்கள். எந்தெந்த பாடத்தில் நிறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறீர்கள்? எந்தெந்த பாடத்தில் மதிப்பெண் குறைவாக உள்ளது? முழு மதிப்பெண் பெற வழிகள் உள்ளதா? மதிப்பெண் குறைந்ததற்கான காரணம் என்ன? எந்தெந்த பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்பது போன்ற வினாக்களை எழுப்பிக் கொண்டு, பாடவாரியாக ஒரு கால அட்டவணை உருவாக்குங் கள்.

* திட்டப்படி பாடத்திட்டங்களை படித்திடுங்கள். அன்றைய பாடங்களை அன்றே படிப்பதுடன், புரியாத பகுதிகளை ஆசிரியரிடமும், சிறந்த மாணவர்களிடமும் கேட்டு விளங்கிக் கொள்ளுங்கள். இப்படி கேள்வி பதில் முறையில் பகிர்ந்துகொண்ட பாடங்கள், எளிதாக நினைவுத்திறனுக்கு வரும் என்பதால் தேர்வில் உடனே பதிலளிக்க உதவியாக இருக்கும்.

* எளிதில் புரியாத ஆங்கிலம், அறிவியல், கணிதப் பாடங்களை காலை எழுந்தவுடன் படித்து, பயிற்சி செய்து மனதில் நிறுத்தலாம்.

* பசுமையான, அமைதியான இடத்தை படிப்பதற்கு தேர்வு செய்யுங்கள். ஒவ்வொரு பாடத்தை படித்தபின்பும் சிறிது ஓய்வு எடுத்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.

* பாடங்களை புரிந்துகொண்டு, கவனத்துடன் படித்தால் பொதுத்தேர்வில் மதிப்பெண்களை குவிக்கலாம். மாதிரி தேர்வுகளை உதாசீனப்படுத்தாமல் எதிர்கொண்டு திறனை மேம்படுத்துங்கள்.

* தமிழ் தேர்வில் செய்யுள், உரைநடை, கதைப்பகுதி, இலக்கணம் போன்றவை முக்கியமான பகுதிகள். எழுத்துப் பிழைகள் மதிப்பெண் குறைக்கும். பதற்றமின்றி எழுதினால் பிழையின்றி எழுதலாம். அழகான கையெழுத்து கூடுதல் மதிப்பெண் பெற உதவும். போதிய இடைவெளிவிட்டு, வாக்கியப்பிழை தவிர்த்து, அடித்தல், திருத்தல் இல்லாமல், விடை அமைப்பு சிறப்புற இருந்தால் நிச்சயம் நிறைய மதிப்பெண் பெறலாம்.

* ஆங்கிலம் கஷ்டமானது என்ற மனநிலையை தவிர்த்து ஆங்கில தேர்வை எதிர்கொள்ளுங்கள். உரைநடை, வினாவிடை பகுதிகளில் பலரும் நிறைய மதிப்பெண் பெற்றுவிடுகிறார்கள். இலக்கணப் பகுதியே பலருக்கும் சரிவைத் தருகிறது. ஆனால் இலக்கணத்திற்கு சிறிது முக்கியத்துவம் கொடுத்துப் படித்தால் ஆங்கிலத்திலும் அசத்தி அதிக மதிப்பெண்களை அள்ளிவிடலாம்.

* கணக்கில் மனப்பாடத்திற்கு வழிகள் இல்லை. சில வாய்ப்பாடுகளையும், தேற்ற முறைகளை மட்டுமே மனதில் கொள்ள முடியும். அடிக்கடி கணக்கு வழிமுறைகளை போட்டுப் பார்த்து பயிற்சி பெறுபவர்கள் சுலபமாக 'சென்டம்' (முழுமதிப்பெண்) வாங்கலாம்.

* அறிவியல் பாடத்தை பொறுத்தவரை ஒரு மதிப்பெண் வினாக்கள் நிறைய மதிப்பெண்களுக்கு கேட்கப்படுவதால் அனைவரும் அச்சமின்றி தேர்ச்சி பெற்றுவிடலாம். தெளிவான கையெழுத்து, சரியான விஞ்ஞான விளக்கங்கள், பளிச் படங்கள் முழு மதிப்பெண்கள் பெற கைகொடுக்கும்.

* சமூக அறிவியல் பாடம், அதிக சிரமமின்றி புரிந்துகொள்ளக்கூடிய பாடம்தான். வரலாற்றுப் பகுதியில் மட்டும் ஆண்டுகளையும், பெயர்களையும் மறக்காமல் குறிப்பிட வேண்டும். மற்ற பகுதிகளுக்கு துணை தலைப்புகள் இட்டு, படிப்படியாக விடை அளித்திருந்தால் முழுமையான மதிப்பெண் பெறலாம்.

* தேர்வுக்கு முந்தைய தினம் அனைத்துப் பகுதிகளையும் 'திருப்புதல்' செய்யுங்கள். இரு பரீட்சைகளுக்கு இடையேயான ஓய்வுப்பொழுதை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

* தேர்வை பயமின்றி எதிர்கொள்ளுங்கள். பதற்றமின்றி பதிலளியுங்கள். சந்தோஷமான மனநிலையுடன் தேர்வை துவங்குங்கள். வினாக்களை புரிந்து கொண்டு, சரியான விடையை தெளிவாக எழுத வேண்டும். அதுவே மதிப்பெண்களை வாரி வழங்கும்.

* இப்போது பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு மதிப்பெண் பெறும் முறை குறித்த சி.டி. தகடுகள் கல்வித்துறையால் வழங்கப்படுவது பயனுள்ளதாக இருக்கும்.

திட்டமிட்டு தேர்வை எதிர்கொண்டு வெற்றித் திலகம் சூட வாழ்த்துக்கள்!

No comments:

Post a comment