KALVISOLAI TNPSC

Tuesday, 18 October 2016

ஆங்கிலத்திலும் மதிப்பெண் குவிக்கலாம் -பிளஸ் டூ ஆங்கிலம் முதல் தாள் - தேர்வுக்குத் தயாரா?

ஆங்கிலத்திலும் மதிப்பெண் குவிக்கலாம் -பிளஸ் டூ ஆங்கிலம் முதல் தாள் - தேர்வுக்குத் தயாரா?

 

தமிழ் வழிக் கல்வியில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் பதற்றம் கொள்ளும் தேர்வு ஆங்கிலம். உண்மையில், தன்னம்பிக்கையுடன் திட்டமிட்டுப் படித்து, படித்ததை எழுதிப் பார்த்து, தேர்வில் அடித்தல் திருத்தல் இன்றித் தெளிவாக எழுதினால் ஆங்கிலத்திலும் அதிக மதிப்பெண்களை எளிதாக அள்ளலாம். பிளஸ் டூ வரையிலான ஆங்கிலமே, அடுத்த கட்ட உயர் கல்விக்கும் அடிப்படை. ஆங்கிலப் பாடத்தை ஆண்டின் தொடக்கத்திலிருந்தே படிப்பது நல்லது. அன்றாடம் பாடத்தைக் கவனிப்பது, சந்தேகங்களை அப்போதைக்கப்போது போக்கிக்கொள்வது, படித்ததை எழுதிப்பார்ப்பது, கடினமாகக் கருதும் பகுதிகளுக்குக் கூடுதல் கவனம் தருவது ஆகியவை அவசியம். ஆங்கிலத்தைப் பொறுத்தவரைத் தயாரிப்புக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை எழுதும் விதத்துக்கும் அளிக்க வேண்டும். எளிய வாக்கிய அமைப்பைப் பயன்படுத்தி விடையளித்தால், பொதுவான பிழைகளைத் தவிர்க்கலாம். முடிந்த வரை வினா வரிசையை மாற்றாமல் பதிலளிக்க வேண்டும். வினாத்தாளில் கேட்டதை விட அதிக எண்ணிக்கையில் விடைகள் தருவது, மதிப்பெண்ணைக் குறைக்கும் நிலைக்கு இட்டுச்செல்லலாம். அதே போல வார்த்தைகளின் எண்ணிக்கையில் சற்றே அதிகமாக விடை அமையலாமே தவிர பக்க அளவில் விடைகளை இழுக்கக் கூடாது. முக்கிய மேற்கோள்களை அடிக்கோடிடுவது நல்ல பழக்கம். ஆனால், எழுதிய விடையில் எழுத்துப் பிழை நேர்ந்திருக்கலாம் என்கிற சந்தேகம் இருந்தால் அடிக்கோடிட்டுத் தவறுகளைப் பளிச்சென காட்டாமல் இருப்பது நல்லது. பொதுத் தேர்வுக்கான பதற்றத்தைத் தவிர்க்க, பருவத் தேர்வுகளுக்கு மட்டுமன்றி மாதிரி, திருப்புதல் மற்றும் வகுப்புத் தேர்வுகளுக்கும் அதே அளவுக்குக் கவனம் தர வேண்டும். இம்மாதிரியான தேர்வுகளுக்குப் பின்னர் ஆசிரியர் உதவியுடன் தவறுகளை அடையாளம் காண்பது கைகொடுக்கும். திருப்புதலுக்கான முக்கிய வினாக்களைப் பிரத்யேகமாகத் தொகுத்து வைத்துக்கொண்டு அவற்றைத் தொடர்ந்து படிக்கலாம். குறிப்பாக விடையளிப்பதற்கு உதவும் keywords பட்டியல், essay, paragraph type போன்றவைக்குச் சுயமான வார்த்தைகளில் எழுதலாம். சுயமாக எழுதுவது என்பதும் பாடப் பகுதி வரையறைக்கு உட்பட்டே அமைய வேண்டும்.

கவனக் குறிப்புகள்

Vocabulary and Lexical Competency (வினா எண் 1-23) பகுதியில் சிறப்பாகப் பதிலளிக்கப் பாடத்தின் பயிற்சி வினாக்களையும் Glossary பகுதிகளையும் நன்றாகப் படிக்க வேண்டும். இவ்வகையில் Synonyms, Antonyms கேள்விகளில் குறைந்தது 8 மதிப்பெண்கள் பெறலாம். இப்பகுதியின் வினாக்களில் Singular Plural, Homophones, Blending, Syllabification, American English, Prefix/Suffix, compound words ஆகியவற்றில் எளிதில் மதிப்பெண் எடுக்கலாம் என்பதால், கூடுதல் கவனம் தேவை.

Grammatical competency (வினா எண் 24-33) பகுதியில் பெரும்பாலானோர் மதிப்பெண்களைத் தவறவிடுவதால், அவற்றை மனதில் கொண்டு பயிற்சி பெற வேண்டும். தினசரி பாடக் கவனிப்பு, பாடத்தின் பின்பகுதி வினாக்களில் ஆசிரியர் வழங்கிய Keywords உதவியுடன் பயிற்சி, முந்தைய ஆண்டு வினாத்தாள்களை அடிப்படையாகக் கொண்ட திருப்புதல் ஆகியவை இப்பகுதிக்கு மிகவும் உதவும். வினாவில் Semi modal என்பதை Quasi Modal என்றும் கேட்பதுண்டு. வினா எண் 31-32, sentence pattern, kinds of passive voice ஆகியவை பதிலளிக்க எளிமையானவை.

இதே பகுதியின் வினா எண் 34 Report the Dialogue- மாணவர்கள் கடினமாகக் கருதுவதால், இதில் கூடுதல் பயிற்சி வேண்டும். வினா எண் 35, Inversion மெல்லக் கற்போரும் எளிதாகப் பதில் அளிக்கக்கூடியது. இதற்கு ஆசிரியர் பரிந்துரைக்கும் சுலபமான வழிமுறைகள் உதவும். 36-38 வினாக்களுக்கு, பாடநூலின் 294-297 பக்கங்களில் உள்ள பயிற்சிகளில் தேறினாலே உரிய 6 மதிப்பெண்ணைப் பெற்று விடலாம்.

Reading Competency (வினா எண் 39-48) பகுதியில் தெரிந்த வினாக்கள் முதலில், அதைத் தொடர்ந்து ஐயமுள்ள வினாக்கள் என்ற வரிசையைப் பின்பற்றுவது, குழப்பம் மற்றும் நேர விரயத்தைத் தவிர்க்கும். இவ்வினாக்களுக்கு Computer, Education, Sports, Agriculture, Commerce, Weather, Nutrition and Dietetics துறைகளை உள்ளடக்கிய வாக்கிய உதாரணங்களில் பயிற்சி அவசியம். இதே பகுதியின் Comprehension (வினா எண் 44-48) தயாரிப்பில் Keywords அடிப்படையில் பதிலை அடையாளம் காணலாம்.

Writing Competency (வினா எண் 49-54) பகுதிக்கு Paragraph மற்றும் Essay வினாக்களைப் படிப்பதோடு எழுதியும் பார்ப்பது அவசியம். Essay படிக்கும்போதே அதில் அடங்கிய Paragraph- தனியாகக் குறித்துக்கொள்ள வேண்டும். மெல்லக் கற்கும் மாணவர்கள் முதல் 2 பாடங்களை முழுமையாகப் படித்தாலே, இப்பகுதிக்கான மதிப்பெண்ணில் பாதிக்கும் மேல் எடுக்கலாம். கூடுதல் மதிப்பெண்ணுக்கு ஏனைய பாடங்களின் முக்கிய வினாக்களையும் படிப்பது அவசியம்.

Literary Competency-Poetry (வினா எண் 55-69) பகுதியில், வினா எண் 55-60 உள்ளடக்கிய Poem Appreciation வினாக்களுக்கு, முந்தைய தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளைக் குறித்துவைத்துப் படிப்பது உதவும். அனைவரும் சுலபமாகப் பதிலளிக்கக்கூடிய Poetic Device (வினா எண் 61-63) பகுதியை, தேர்வின் நிறைவாகச் சரிபார்ப்பது அவசியம். ERC (வினா எண் 64-66) பகுதியில், நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட வினாத்தாளை முறையாக வாசித்து உரிய poem- அடையாளம் காணத் தவறுகிறார்கள். இதற்கு வினாவை நன்றாக வாசித்து Keywords அடிப்படையில் அடையாளம் காணப் பயிற்சி பெறலாம். ECR-க்கு Comment எழுத வேண்டுமா என்பது பலரின் ஐயம். Comment-க்கு எனத் தனியாக மதிப்பெண் கிடையாது. ஆனால், அதை எழுதுவதன் மூலம் உச்ச மதிப்பெண் விரும்பும் மாணவர்கள் நன்மதிப்பு பெறுகிறார்கள். Poetry Paragraph (வினா எண் 67-69) பகுதியில் உரிய பாடல் வரிகளை மேற்கோள்காட்டுவதன் மூலம் முழு மதிப்பெண் பெறலாம். முதல் 3 Poems- முழுமையாகப் படிப்பதன் மூலம் மெல்லக் கற்போரும் நல்ல மதிப்பெண் பெறலாம்.

கட்டுரைக்கான முக்கியக் குறிப்புகளை வழங்கியவர்: முனைவர் இரா. அருணாசலம், முதுகலை ஆங்கில ஆசிரியர், பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு மாவட்டம். முனைவர் இரா. அருணாசலம்

No comments:

Post a comment