SCROL

Monday, October 10, 2016

வளங்கள் பெருக்கி நல்வாழ்வருள்வாள் வசூரிமாலா! : கொடுங்களூர்

வளங்கள் பெருக்கி நல்வாழ்வருள்வாள் வசூரிமாலா! : கொடுங்களூர்

ஒரு காலகட்டம் வரை சேர நாட்டின் தலைநகரமாக கொடுங்களூர் விளங்கியது. சிலப்பதிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது கொடுங்களூர். கண்ணகி மதுரையை எரித்த பிறகு கொடுங்கல்லூரை நோக்கிச் சென்றாள் என்றும்; இளங்கோ அடிகள் மூலம் கண்ணகியின் வரலாற்றைக் கேட்ட சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கொடுங்கல்லூரில் ஒரு கோயில் கட்டினான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது. ஆம்; கொடுங்கல்லூரில் பகவதியாக இருப்பது கண்ணகியே என்றும் கூறுகிறார்கள். பல ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது கொடுங்களூர் பகவதி கோயில். கோயிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் நாம் தரிசிப்பது க்ஷேத்ர பாலகர் சந்நதியை. சுமார் பன்னிரண்டு அடி உயரமுள்ள கற்சிலையாக காட்சி தருகிறார் க்ஷேத்ர பாலகர். இவ்வளவு பெரிய தோற்றத்தில் வேறு எந்தக் கோயிலிலும் க்ஷேத்ர பாலகரைக் காண முடியாது.

சிலப்பதிகாரத்தில் வரும் சதுக்க பூதமே இந்த க்ஷேத்ர பாலகர் என்றும் சிலர் கூறுகின்றனர். அடுத்ததாக அமர்ந்த கோலத்தில் காணப்படும் "வசூரிமாலா'வைத் தரிசிக்கிறோம். இது பகவதியின் இன்னொரு தோற்றம். இந்த பகவதியைத் தரிசிக்க வரும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் மஞ்சள் பொடியையும் சுண்ணாம்பையும் கலந்து பகவதியின் மேல் தூவுகிறார்கள். அம்மை நோயைக் குணப்படுத்தும் சக்தி இந்த பகவதிக்கு உண்டு என்றும் கூறுகிறார்கள். மேற்கூரை இல்லாத மண்டபத்தில் இவள் காணப்படுகிறாள். (சேரர்களின் குலதெய்வமான "கொற்றவை'க்கும் மேற்கூரை கிடையாதாம்.) வெயிலின் உஷ்ணம் தகிக்கும் கோடை காலத்தில் மாரியம்மன் கோயில்களில் கருவறையைச் சுற்றிலும் நீர்க்கட்டு அமைப்பதைக் கவனித்திருக்கலாம். அந்த நேரத்தில்தான் அம்மை போன்ற உஷ்ண சம்பந்தமான நோய்கள் பரவும். அந்த நேரத்தில் ஆலயம் தோறும் விசேஷமான வைபவங்களை நடத்தி, அன்னையின் அருள் வேண்டுவதும் வழக்கம்.

தமிழகத்தில் மாரியம்மனுக்கு விழா எவ்வளவு விசேஷமானதோ, அதேபோன்று கேரளத்தில் வசூரிமாலா என்ற இந்த தேவிக்கு விழா கொண்டாடுகிறார்கள். வலது காலை மடித்து, இடது காலை தொங்க விட்ட கோலத்தில், இரு கரங்களையும் தன் முழங்காலில் பதித்தவளாகக் காட்சி தரும் இந்த தேவியின் சிலை மிகவும் புராதனமானது. பிற்காலத்தில் தோன்றிய சிற்ப அமைதி கொண்டு பார்த்தால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தொன்மையானது என்பதை அறிய முடியும். பிரசித்திமிக்க சக்தித் தலமான கொடுங்களூர் என்ற கொடுங்களூர் பகவதி கோயிலில் காட்சி தருகிறாள் இந்த தேவி. தனிச்சந்நதியில் தரிசனம் அருளும் இந்த தேவியை, தொற்று நோய்களோ, பிற துன்பங்களோ அணுகா வண்ணம் காக்க வேண்டும் என்று வேண்டி பக்தர்கள் நாடிவருகின்றனர். இந்தத் தேவியின் திருவுரு மீது மஞ்சள் பொடியைத் தூவி, அதில் சிறிது பிரசாதமாக எடுத்து வழங்கப்படுகிறது. அந்தப் பிரசாதம் எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த இடத்தினுள் எந்தத் துன்பமும், தொற்று நோய்களும் புகாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேற்கூரையில்லாத சின்னஞ்சிறு மூல ஸ்தானத்தில் துலங்கும் தேவியின் வரலாறு பற்றி ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. தாருகாசுரனுடன் கடும் போர், காளிதேவியின் பேராற்றலைத் தாங்கமுடியாமல் தடுமாறுகிறான் தாருகாசுரன். தாருகாசுரனின் மனைவி மனம் கலங்கினாள். தன் கணவன் மாய்க்கப்படுவான் என்று அஞ்சினாள். பார்வதியைச் சரண் புகுந்து தன் மாங்கல்யம் நிலைக்குமாறு அருள் வேண்டினாள். தன்னை அடிபணிந்த பக்தையின் வேண்டு கோளை ஏற்ற உமையவள், தன் வியர்வைத் துளிகளை அவளிடம் தந்து, கணவனைக் காப்பாற்றிக் கொள்ளுமாறு சொன்னாள். அவள் வருவதற்குள், காளிதேவி தாருகனின் தலையைக் கொய்து விட்டாள். அதனால் சினந்த தாருகாசுரனின் மனைவி, அந்த வியர்வைத் துளிகளை காளிதேவியின் மீது வீசினாள். அவை தேவியின் உடலெங்கும் கொப்புளங்களாயின. அதிலிருந்து மீண்ட காளிதேவி, தாருகனின் மனைவியைக் குருடாக்கினாள் என்றாலும், தன் கணவனைக் காக்க வேண்டும் என்று போராடிய பதிபக்தியை மெச்சி, அவளுக்கு வசூரிமாலா என்ற பெயருடன் தனிச்சந்நதி வழங்கினாள்.

அவளை வழிபடுபவர்களை எந்தத் துன்பமும் அணுகாது என்று வரமளித்தாள். அதன்படியே, கொடுங்களூர் பகவதியை வழிபட வரும் அன்பர்கள் இந்த வசூரிமாலாவையும் மஞ்சள் தூவி வழிபடுகிறார்கள். மங்கலப் பொருளான மஞ்சள் பொடியை ஏற்று, தன் பக்தர்களின் வாழ்விலும் மங்கலம் பொங்கச் செய்பவளாக, கேரளத்தில் விளங்கிக் கொண்டிருக்கிறாள் வசூரிமாலா. இதுவரை தரிசிக்காதவர்கள், அடுத்த வாய்ப்பு அமையும் போது, அவசியம் இந்த தேவியை தரிசியுங்கள். உங்கள் வாழ்விலும் மங்கலம் பெருகும். அடுத்து கொடுங்களூர் பகவதியின் கருவறையை நோக்கிச் செல்கிறோம். தாருகனை வதைத்த பத்ரகாளியின் வடிவத்தோடு தேவியின் திருவுருவம் காணப்படுகிறது. எட்டு கரங்களில் வாள், திரிசூலம், மணி, சிலம்பு போன்றவை காணப்படுகின்றன. சுமார் ஆறடி உயரமுள்ள திருமேனி. இது பலா மரத்தினால் செய்யப்பட்ட திருவுருவம் என்றும் கூறுகிறார்கள். கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறாள், அன்னை.

மூலவிக்ரகத்திற்கு அபிஷேகம் கிடையாது. பக்தர்கள் செந்நிற ஆடைகளை காணிக்கையாகத் தருகிறார்கள். புஷ்பாஞ்சலி மிகவும் முக்கியமான வழிபாடு. பெரும்பான்மையாக செந்நிற மலர்களே உபயோகப்படுத்தப்படுகின்றன. கர்ப்பக்கிரகத்தின் அருகில் ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரம் இருக்கிறது. இந்த ஸ்ரீசக்ரத்திற்கும் பூஜை உண்டு. கேரளத்தில் பரசுராமர் நிறுவிய காளி கோயில்களில் இதுவும் ஒன்று, தற்சமயம் பகவதி கோயில் இருக்கும் இடத்திலிருந்து சற்று தூரத்தில் இருந்ததாகவும்; கண்ணகிக்கு கோயில் எழுப்பிய சேர மன்னன் காளிகோயிலில் இருந்த விக்ரகத்தையே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ததாகவும்; காளியின் ரூபத்திலேயே கண்ணகி வழிபடப்படுவதாகவும் கூறப்படுகிறது. சந்தனமும், மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த சாந்தும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. சுற்றி வரும்போது கணபதியைத் தரிசிக்கலாம். சிவலிங்க சந்நதியும் உண்டு. இங்கே இரண்டு உற்சவங்கள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.

ஒன்று தாலப்பொலி என்னும் உற்சவம். இது நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மகரசங்கராந்தியன்று இவ்விழா தொடங்குகிறது. நாம் போகியன்று வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்களைத் தெருவில் போட்டு எரிப்பதைப்போல, மகரசங்கராந்திக்கு முன்தினம் கோயிலில் இருக்கும் வேண்டாத பொருட்களையெல்லாம் கோயில் வளாகத்தில் போட்டு எரிக்கிறார்கள். மகர சங்கராந்தி தினத்தன்று மாலையில் தாலப்பொலி உற்சவம் தொடங்குகிறது. பகவதியின் உற்சவ விக்ரகத்தை (இதை திடம்பு என்கிறார்கள்) அலங்கரிக்கப்பட்ட யானைமீது வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்கிறார்கள். அந்த யானையின் இரு பக்கமும் வேறு சில யானைகளும் வருகின்றன. எல்லா யானைகள் மீதும் நன்கு அலங்கரிக்கப்பட்ட முத்துக்குடைகள் இருக்கும். திடம்பு விக்ரகத்தைத் தாங்கிச் செல்லும் யானையின்மேல் ஒரு பெரிய தாம்பாளம் காணப்படும். அதில் அரிசி, தேங்காய், உதிரிப் பூக்கள், பாக்குப் பூங்கொத்து காணப்படும்.

இதனைத் தொடர்ந்து கேரளத்துப் பாணியில் செட்டு முண்டு உடுத்திய ஏராளமான பெண்கள், பாக்குப் பூங்கொத்து, உதிரிப்பூக்கள், அரிசி, தேங்காய் அடங்கிய தட்டையும் தீபம் ஏற்றப்பட்ட குத்துவிளக்கையும் எடுத்துக் கொண்டு அணிவகுத்துச் செல்வார்கள். பார்க்க மிகவும் ரம்யமாக இருக்கும். செண்டை, பாண்டி மேளம், வாண வேடிக்கை போன்றவையும் உண்டு. இரண்டாவது, பரணி உற்சவம். இது ஏழு நாட்கள் நடைபெறும். மலையாள மாதமான கும்பத்தில் (பங்குனி) பரணி நட்சத்திரத்தன்று கொடியேற்றுவார்கள். இந்த உற்சவத்தின் முதல் நாளன்று, கோயிலின் வடக்கு நுழைவாயிலின் அருகே புதைக்கப்பட்டிருக்கும் இரண்டு வட்ட வடிவமான கற்களை எடுத்துப் பூஜை செய்து, அவற்றிற்கு சிவப்பு நிறப் பட்டுத் துண்டு சாத்தி, அந்தக் கற்களை மீண்டும் பூமியில் புதைக்கிறார்கள். இதற்கு "கோழிக்கல்லு மூடுதல்' என்று பெயர். ஒரு காலகட்டம் வரை இந்தக் கற்களின் மீது கோழியின் ரத்தத்தை ஊற்றி காளிக்குச் சமர்ப்பித்ததாகவும், தற்சமயம் அது நிறுத்தப்பட்டு சிவப்புநிற பட்டுத்துண்டு சாத்தப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

இந்தச் சமயத்தில் நடக்கும் இன்னொரு சடங்கு காவு தீண்டல். இந்தச் சடங்கில் கலந்து கொள்ள கேரளத்தின் பல பாகங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு குழுவையும் தலைமை தாங்கி ஒரு வெளிச்சப்பாடு (ஆணோ, பெண்ணோ) அழைத்து வருகிறார். அனைவரும் செந்நிற ஆடையே அணிந்திருப்பர். இந்த வெளிச்சப் பாடின் கையில் ஒரு நாந்தகம் வாள் (வாளின் நுனி பிறைச் சந்திரன்போல காணப்படும்) இருக்கும். அந்த வாளின் பல இடங்களிலும் சிறிய சிறிய சலங்கைகள் கொத்து கொத்தாகக் கட்டித் தோரணமாக்குகிறார்கள். அந்த வெளிச் சப்பாடு அடிக்கடி வாளை தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்து வாளை ஆட்டும்போது சலங்கைகளின் நாதம் கேட்கும். அந்த வெளிச்சப்பாடின் இடுப்பிலும் ஒலிஎழுப்பும் சிறிய மணிகள் கட்டப்பட்டிருக்கும். அனைவரும் கால்களில் சிலம்பு அணிந்திருப்பர்.

இந்த உற்சவத்தில் பங்கு கொள்ளும் பக்தர்கள்- தெறிப்பாடல் எனப்படும் பாடல்களைப் பாடிக்கொண்டு கோயிலின் வெளிப்புறத்தைச் சுற்றி ஆவேசம் வந்ததுபோல மூன்று முறை ஓடுகிறார்கள். ஒருசிலரின் கைகளில் இரண்டு சிறிய கழிகள் காணப்படுகின்றன. அந்தக்கழிகளினால் கோயிலின் மேற்கூரையின் ஓரத்தில் தட்டிக் கொண்டே பாடல்களைப் பாடிக்கொண்டு வேகமாக ஓடுகிறார்கள். ஓடிக்கொண்டே மஞ்சள் பொடி, தேங்காய், மிளகு ஆகியவற்றை கோயிலினுள் வீசி எறிகிறார்கள். அந்த நேரத்தில் கருவறை மற்றும் எல்லா சந்நதிகளின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும். இந்த காவு தீண்டல் சடங்கு முடிந்த பிறகு கோயில் ஒரு வாரத்திற்கு மூடப்படும். பிறகு "சுத்திகரணம்' செய்த பிறகே ஆலயத்தைத் திறப்பார்கள். கோயிலில் நடக்கும் இன்னொரு முக்கியச் சடங்கு, சந்தனப் பொடி சாற்றுதல்.

மூல விக்ரகம் பலா மரத்தினால் செய்யப்பட்டுள்ளதால் அதற்கு உறுதி கொடுக்கும் வண்ணம் இந்தச் சடங்கு பரணி உற்சவம் தொடங்கும்முன் நடைபெறுகிறது. பக்தர்கள் கொடுங்களூர் பகவதியை, "கொடுங்களூர் அம்மா' என்று வாஞ்சையுடன் அழைக்கிறார்கள். அம்மா தன்னுடைய குழந்தைகளின் குற்றங் குறைகளை மன்னித்து அவர்களுக்கு நன்மையை மட்டும் செய்பவள்தானே! அதுபோல கொடுங்களூர் பகவதியும் பக்தர்களின் குற்றங்களைமன்னித்து, அவர்களது மனக் குறைகளைத் தீர்த்து அருள் புரிந்து வருகிறாள். கோயில் தினசரி விடியற்காலை மூன்று மணி முதல் இரவு ஒன்பது மணி வரை இடைவேளை இல்லாமல் திறந்திருக்கும்.

பண்டஸைன்ய வதோத்யுக்த சக்தி விக்ரம ஹர்ஷிதா

பண்டாஸுரனுடைய படையை வதம் செய்வதில் முயற்சியுடைய (நகுலீ முதலிய) சக்திகளுடைய பராகிரமத்தினால் சந்தோஷம் அடைந்தவள்.

பண்ட புத்ர வதோத்யுக்த பாலாவிக்ரம நந்திதா

பண்டாஸுரனுடைய புத்ரர்களை வதம் செய்வதில் முயற்சியோடு இருந்த பாலாம்பிகையினுடைய பராகிரமத்தைக் கண்டு மகிழ்ந்தவள்.

விசுக்ரப்ராணஹரண வாராஹீ வீர்ய நந்திதா

விசுக்ரன் என்கிற அஸுரனுடைய பிராணனைப் போக்கடித்த (வதம் செய்த) வாராஹியினுடைய வீர்யத்தினால் மகிழ்ச்சியடைந்தவள்.D

No comments:

Post a Comment