கவனிக்கும் ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி?

கவனிக்கும் ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி?

 

சிறந்த மாணவனின் அடிப்படை திறமைகளில் ஒன்றாக கவனிக்கும் ஆற்றல் விளங்குகிறது. கவனிக்கும் ஆற்றலே, கல்வி அறிவை வளர்க்க முக்கியமாகும்.பாடம் நடத்துவதை கேட்பது மட்டும் கவனிப்பு ஆகாது. அந்த உரையாடலைக் கடந்த புரிந்தல் ஏற்படுவதே கவனிப்பாகும். உதாரணமாக ஒருவர் பேசும்போது, 'நான் நலமாக இருக்கிறேன்' என்று கூறினால், அதை அப்படியே கேட்டுக் கொள்வது மட்டும் கவனிப்பு அல்ல. அவர் மனதளவில் மகிழ்ச்சியாக சொல்கிறாரா என்பதை அவரது கண், பேசும் தொனி, உடல் அசைவு ஆகியவற்றின் அடிப்படையிலும் கணித்து உறுதி செய்ய வேண்டும். இதுதான் ஆழ்ந்த கவனிப்புத் திறன்.ஆசிரியர் பாடம் நடத்தும்போதும் இதே விழிப்புணர்வு இருக்க வேண்டும். அவர் சொல்வதை சரியாக புரிந்து கொள்வதோடு, கூடுதல் வினாக்களை எழுப்பி தெளிவாக விளங்கிக் கொள்வதே சரியான கவனிப்பு முறையாகும். அதுவே பாடங்களை மனதில் எளிதில் பதிய வைப்பதுடன் தேர்வில் நிறைய மதிப்பெண்களை பெற்றுத் தரும். கவனிக்கும் ஆற்றலை மேம்படுத்திக் கொள்ள சில வழிகளை இங்கே பார்க்கலாம்....

 

* கவனிக்கும்போது அமைதி தேவை. பேசுபவர்கள் அல்லது பாடம் நடத்துபவர்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். இடையில் குறுக்கிடக்கூடாது. பேசிக்கொண்டோ, சிந்தித்துக் கொண்டோ இருந்தாலும் கவனம் சிதறும், கவனிக்க முடியாது.

 

* பார்வையை, பாடம் நடத்தும் ஆசிரியர் மீது வைக்க வேண்டும். கவனமும் வேறு எங்கோ இருக்கக்கூடாது. மனித மனம் எண்ணங்களால் எளிதில் அலைபாயக்கூடியது. நண்பன் மதிய சாப்பாட்டிற்கு ஸ்பெஷலாக என்ன கொண்டு வந்திருப்பான்?, இன்று மாலையில் விளையாட போகலாமா, சினிமாவுக்கு போவோமா, இணையத்திற்கு செல்ல வேண்டும் என அடுக்கடுக்காக எண்ணங்கள் மனதில் எழலாம். இதுபோன்ற தேவையற்ற எண்ணங்களை கட்டுப்படுத்துவதன் மூலமாக கவனிக்கும் திறனை மேம்படுத்தலாம். மனதை தளர்வாக வைத்துக் கொள்ளும்போது இதுபோன்ற எண்ண அலைமோதல் ஏற்படாது. மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா மூலம் மனதை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

 

* பேசுபவர் அல்லது பாடம் நடத்துபவரிடம் இருந்து நமக்குத் தேவையான அல்லது முக்கியமான கருத்துகள் வருவதை கவனித்து குறிப்பெடுக்க வேண்டும். அவரை ஊக்கப்படுத்தி மேலும் அவசியமான கருத்துகளை எதிர்கொள்ள வேண்டும். பேசுபவரின் முகம், கண்களை கவனிப்பதன் மூலம் இருவருக்கும் இடையேயான இணைப்பை அதிகப்படுத்தி கவனத்தை மேம்படுத்தலாம். ஆசிரியரின் உடல்மொழி பற்றியோ, உருவம் பற்றியோ சிந்திப்பதோ, கேலி செய்வதோ கூடாது.

 

* ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருப்பது, நண்பனிடம் பாடம் பற்றி கேலியாய் பேசுவது, தேவையில்லாமல் கிறுக்கிக் கொண்டிருப்பது, நகம் கடித்துக் கொண்டிருப்பது, எஸ்.எம்.எஸ். அனுப்புவது போன்ற அவசியமற்ற செயல்களை செய்ய வேண்டாம்.

 

* ஆசிரியரை தொந்தரவின்றி சொல்ல வருவதை சொல்ல அனுமதிக்க வேண்டும். பேசுபவரின் கருத்தை அப்படியே நிராகரிக்கக்கூடாது. அவரது கோணத்திலும் சிந்தித்து தெளிவு பெற வேண்டும்.

 

* உரையாடலின்போது இடையே சுவாரசிய தகவல்கள், பாடல்கள், செயுள்கள், முக்கிய குறிப்புகள் இடம் பெறலாம். அவற்றை ஆசிரியர் உரையாற்றுபவர் சுவையான நடையில், சுருதி மாற்றி கூறலாம். குரலை உயர்த்தியோ, வேகமாகவோ, நிறுத்தி இடைவெளி விட்டோ சொல்லப்படலாம். எளிதில் உங்கள் மனதில் பதிவதற்காக இதுபோன்ற உத்திகள் கையாளப்படும். சூழலுக்கேற்ற வகையில் அமையும் இந்த சுருதி மாற்றத்தை கவனித்து, கருத்துக்களை மனதில் உள்வாங்க வேண்டும்.

 

கவனிக்கும் ஆற்றலை மேம்படுத்தி கற்றலில் மேன்மை அடையுங்கள்!

No comments:

Post a Comment