SCROL

Monday, October 3, 2016

கள்ளாட்டம்

கள்ளாட்டம்

கதாநாயகன்-கதாநாயகி: நந்தா- சாரிகா

டைரக்‌ஷன்: ரமேஷ்

கதையின் கரு: போலீஸ் அதிகாரி-ரவுடிகள் மோதல்

நடுத்தர குடும்ப தம்பதிகள் ரிச்சர்ட்-சாரிகா. இவர்களுக்கு ஒரே பெண் குழந்தை. அந்த குழந்தையை ரிச்சர்ட் பள்ளிக்கு அழைத்து செல்கிறார். அப்போது வேகமாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து மோதி விட்டு நிற்காமல் சென்று விடுகின்றனர். குழந்தைக்கு தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு செல்கிறது.

குழந்தையை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற ரூ.20 லட்சம் செலவாகும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். வீட்டு பத்திரம் மனைவி நகைகளை அடகு கடையில் வைத்து பணத்தை புரட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறார் ரிச்சர்ட். ஆனால் அந்த பணம் களவு போகிறது. போலீஸ் அதிகாரி நந்தாவிடம் ரிச்சர்ட் புகார் கொடுக்கிறார்.

விசாரணையில் பெரிய கொள்ளை கும்பல் பின்னணியில் இருப்பதும் பலரிடம் இதுபோல் அவர்கள் பணத்தை அபகரிப்பதும் தெரிய வருகிறது. ஒவ்வொருவராக பிடித்து கொள்ளை கும்பல் தலைவனை அவர் நெருங்கும்போது நந்தா சதி வலையில் சிக்கி வேலையை இழக்கிறார். பணம் மீட்கப்பட்டு குழந்தை காப்பாற்றப்பட்டதா? குற்றவாளி தண்டிக்கப்பட்டானா? என்பது மீதி கதை.

நந்தா போலீஸ் அதிகாரியாக மிடுக்குடன் வருகிறார். கொள்ளை கும்பலை பிடிக்க வகுக்கும் வியூகங்களில் வேகம். ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் குழந்தையை காப்பாற்ற ஒவ்வொருவரிடமும் கடன் கேட்கும் காட்சிகளில் இப்படிப்பட்ட அதிகாரிகள் வேண்டும் என்று ஏங்க வைக்கிறார். தனது ஒரே குழந்தையை பறிகொடுத்த பிளாஷ்பேக் காட்சியில் உருக வைக்கிறார். வில்லனின் குழந்தையை கடத்துவதும் ரிச்சர்ட் குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதும் திருப்பங்கள்.

ரிச்சர்ட் பாசமான தந்தை கதாபாத்திரத்தில் அழுத்தம். பணத்தை இழந்து ஆஸ்பத்திரியில் இருக்கும் குழந்தை நிலைமை என்ன ஆகுமோ என்று படம் முழுவதும் பதற்றம் காட்டுகிறார். அவரது மனைவியாக வரும் சாரிகாவும் கதாபாத்திரத்தை நிறைவாக செய்து இருக்கிறார். போலீஸ் ஏட்டாக வரும் இளவரசு யதார்த்தமான நடிப்பால் கவர்கிறார்.

வில்லனாக வரும் ஏழுமலை டாக்டராக வரும் குமார் கதாபாத்திரங்களும் வலு சேர்க்கின்றன. ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. போலீஸ் ரவுடிகள் மோதல், குடும்ப உறவுகள் பாசப்போராட்டம் என்று பிற்பகுதி கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ரமேஷ்.ஜி. உமர் இசையில் பாடல்கள் தாள ரகம்.

No comments:

Post a Comment