பொதுமக்களுக்கு ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஏன் விளக்கம் அளிக்கவில்லை? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

பொதுமக்களுக்கு ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஏன் விளக்கம் அளிக்கவில்லை? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து இதுவரை பொதுமக்களுக்கு ஏன் விளக்கம் அளிக்கவில்லை? என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

விளக்கம் அளிக்கவேண்டும்

சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி நேற்று முன்தினம் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.அதில், கடந்த செப்டம்பர் 22-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவுகின்றன. இதனால், பொதுமக்கள் வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட தமிழக தலைமை செயலாளர், உள்துறைச் செயலாளர், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.மேலும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால், அவர் மேற்கொள்ளவேண்டிய அரசு பணிகள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அவர் பூரணகுணமடைந்து மீண்டும் அரசு பணிகளை மேற்கொள்ளும் வரை தற்காலிக முதல்-அமைச்சர் ஒருவரை நியமிக்கவும் உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

நீதிபதிகளிடம் முறையீடு

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்கிறார். எனவே, தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வு விசாரிக்கவேண்டிய வழக்குகளை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேன் ஆகியோரிடம் நேற்று முன்தினம் டிராபிக் ராமசாமி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.இதையடுத்து நீதிபதிகள் முன்பு டிராபிக் ராமசாமி ஆஜராகி, 'வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்கவேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.

மக்களின் விருப்பம்

அப்போது கோர்ட்டில் இருந்த கூடுதல் அட்வகேட் ஜெனரலை பார்த்து நீதிபதிகள், 'முதல்-அமைச்சர் உடல் நலம் குறித்து ஏன் பொதுமக்களுக்கு எதுவும் தெரிவிப்பதில்லை?' என்று கேள்வி கேட்டனர்.அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், 'முதல்-அமைச்சருக்கு உடல்நலம் பாதிப்பு என்பதும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது என்பதும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டது. இதையெல்லாம் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் என்று கேட்கமுடியாது. அது அவரது அந்தரங்க விஷயம்' என்று கூறினார்.அதற்கு நீதிபதிகள், 'உடல் நலம் குறைவு என்பது ஒருவரது அந்தரங்க விஷயம் என்றாலும், ஜெயலலிதாவை பொறுத்தவரை அவர் தமிழக முதல்-அமைச்சர். எனவே, அவர் உடல்நலம் குறித்து விவரம் தெரிந்துகொள்ள பொதுமக்கள் விரும்புவார்கள். அந்த விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது அரசின் கடமையாகும்' என்றார்கள்.

ஏன் விளக்கம் அளிக்கவில்லை?

இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், 'அதற்குத்தான் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் உடல் நலம் குறித்த விவரங்களை அறிக்கையாக பத்திரிகை வாயிலாக தெரியப்படுத்துகிறது' என்றார்.'அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டாலும், ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து ஏன் தமிழக அரசு இதுவரை எதுவும் கூறாமல் உள்ளது? அரசின் முக்கிய முடிவுகளை யார் எடுக்கிறார்கள்? என்பதை மக்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை? தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இதுகுறித்து பொது மக்களுக்கு ஏன் விளக்கம் அளிக்கவில்லை?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், இதுகுறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை 6-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டனர்.

Comments