KALVISOLAI TNPSC

Saturday, 8 October 2016

தாமஸ் மைக்கேல் கினேலி ஆஸ்திரேலிய எழுத்தாளர்

தாமஸ் மைக்கேல் கினேலி ஆஸ்திரேலிய எழுத்தாளர்

பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளர் தாமஸ் மைக்கேல் கினேலி (Thomas Michael Keneally) பிறந்தநாள் இன்று (அக்டோபர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் (1935) பிறந்தார். ஆரம்பக் கல்விக்குப் பிறகு, பாதிரியார் ஆவதற்காக 6 ஆண்டுகள் மதக் கல்வி பயின்றார். பின்னர் எழுத்து மீதான ஆர்வத்தில் கதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.

வருமானத்துக்காக பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது 'தி ப்ளேஸ் அட் விட்டன்' என்ற முதல் நாவல் 1966-ல் வெளிவந்தது. அடுத்து 'தி ஃபியர்' என்ற நாவலை எழுதினார். இவை இரண்டும் பாராட்டுகளைப் பெற்றன. இதற்காக 'மைல்ஸ் ஃபிராங்க்ளின்' விருது, 'கேப்டன் குக் பி-சென்டனரி' பரிசு பெற்றார்.

நிறைய படிப்பார். வீட்டில் சொந்தமாக நூலகம் வைத்திருந்தார். பின்னாளில் அந்த நூலகத்தை ஒரு பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிவிட்டார். 'வேறு எதையும்விட புத்தகங்கள் நமக்கு அதிக மனநிறைவை அளிக்கின்றன' என்பார்.

இவரது முதல் 2 நாடகங்கள் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸில் உள்ள நியூ இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை விரிவுரையாளர் பணி கிடைத் தது. தொடர்ந்து நாவல்கள், நாடகங்கள் எழுதினார்.

ஏராளமான நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். நாவல், நாடகம், கட்டுரை எதுவாக இருந்தாலும், எழுதத் தொடங்கும் முன்பு அதுசம்பந்தமாக விரிவாக, ஆழமாக ஆராய்ச்சி செய்வார். இவர் எழுதும் பாணி உளவியல் ரீதியிலானது. இவரது பல நாவல்கள் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை.

தனது நாவல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படங் களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார்.

போல்டெக் ஃபெஸர்பெர்க் என்ற யூதரை 1980-ல் சந்தித்தார். அவர் நாஜிக்களின் சித்ரவதை முகாமில் இருந்து தப்பிப் பிழைத்தவர். தான் உட்பட ஏராளமான யூதர்களின் உயிரைக் காப்பாற்றிய ஆஸ்கர் ஷிண்ட்லர் என்ற ஜெர்மன் அதிகாரி குறித்து தான் எழுதிவைத்த குறிப்புகளை இவரிடம் தந்தார்.

அதில் மிகவும் கவரப்பட்ட கினேலி, அதை நாவலாக எழுத முடிவு செய்தார். இருவரும் சேர்ந்து ஷிண்ட்லருடன் தொடர்புடைய அனைத்து இடங்களுக்கும் சென்று தகவல் சேகரித்தனர். இதுதான் இவரது உலகப் புகழ்பெற்ற 'ஷிண்ட்லர்ஸ் ஆர்க்' நூலாக வெளிவந்தது. இந்த நூலுக்காக 1982-ல் புக்கர் பரிசு பெற்றார்.

இந்த நாவலை அடிப்படையாக வைத்து 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' என்ற பெயரில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் திரைப்படம் எடுத்தார். இது 1993-ல் ஆஸ்கர் விருது பெற்றது. ஆரம்ப காலத்தில் பெற்ற விருதுகள் தவிர 5 சர்வதேச விருதுகள், ஆஸி. பிரதமர் இலக்கிய விருதுகள், ஹெல்மெரிச் விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவர் கையெழுத்திட்ட சுயசரிதை நூலை 2009-ல் ஆஸ்திரேலியாவின் நினைவுப் பரிசாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வழங்கினார் ஆஸி. பிரதமர் கெவின் ரூட். ஆஸ்திரேலியாவின் 'வாழும் பொக்கிஷம்' எனப் போற்றப்படும் பிரபல படைப்பாளியான தாமஸ் மைக்கேல் கினேலி இன்று 81-வது வயதை நிறைவு செய்கிறார்.

No comments:

Post a comment