SCROL

Sunday, October 2, 2016

சீனாவின் விந்தை சிகிச்சை முறைகள்!

சீனாவின் விந்தை சிகிச்சை முறைகள்!

பொதுவாக நாம் அறிந்த சிகிச்சை முறைகள் தவிர, மேலும் பல சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக சீனாவில் விந்தைச் சிகிச்சை முறைகளுக்குக் குறைவில்லை.

அந்நாட்டில் அளிக்கப்பட்டுவரும் சில வினோதமான சிகிச்சை முறைகளை அறியலாமா...

* சூடேற்றப்பட்ட கண்ணாடிக் குவளை போன்ற ஒன்றை உடலில் ஆங்காங்கே பொருத்தி, 'கப்பிங் தெரபி' எனப்படும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தப் பாரம்பரிய சீனச் சிகிச்சை, ரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.

* எறும்பை உண்பதும் ஒரு சிகிச்சை முறையாக சீனாவில் உள்ளது. எறும்பில் உயர்ரக புரதம் இருப்பதாகவும், அது முதிர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது என்றும் சீனர்கள் கூறுகிறார்கள்.

* உடம்பில் ஆடைக்கு மேலாக, பாதுகாப்பான முறையில் நெருப்பைப் பற்றவைத்து 'நெருப்பு சிகிச்சை' அளிக்கிறார்கள். ரத்த ஓட்டத்தைத் தூண்டுவது உள்ளிட்ட பல நன்மைகளை இது அளிக்கிறது என்கிறார்கள்.

* வாத நோய், கீல்வாதம், ஒற்றைத் தலைவலி, வயிற்று வலி, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தேனீக்களை கொட்ட வைத்துச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தச் சிகிச்சையை அதிகளவில் மேற்கொண்டால் உயிரிழப்பு அபாயமும் கூட உண்டு.

* சமீபகாலத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மணல் சிகிச்சையையும் பலரும் விரும்புகிறார்கள்.

* அதேபோல, தாவர சிகிச்சை என்ற முறையில், தாவரச் சாறு கொண்டு உடம்பில் ஓவியங்கள் தீட்டப்படுகின்றன. இது சருமத்தைப் புத்துணர்ச்சி அடைய வைக்கும் என்று கூறுகின்றனர்.

* கையால் உடம்பை அடிக்கும் சிகிச்சை முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது. 'ஸ்டிரெச்சிங் மசில்ஸ் அண்ட் பாடி ஸ்லாப்பிங்' என்ற இந்தச் சிகிச்சை முறையால், நூற்றுக்கும் மேற்பட்ட வியாதிகளை குணப்படுத்த முடியும் என்று இதை வழங்குபவர்கள் கூறுகின்றனர். பீஜிங், ஷாங்காய், நான்ஜிங் போன்ற பகுதிகளில் இந்தச் சிகிச்சை முறை மிகவும் பிரபலமாக இருக்கிறது.

* அதிசய மருத்துவர் என்று கூறப்பட்டுவரும் ஷாங் வூ என்பவர், பச்சைப் பட்டாணி சிகிச்சை முறையை அறிமுகம் செய்திருக்கிறார். பச்சைப் பட்டாணியை உண்பது பல்வேறு நோய்களைக் குணமாக்கும் என்பது இவரது கருத்து.

* புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்சாரம் மூலம் சிகிச்சை அளிக்கும் 'மாஸ்டர் 220 வோல்ட் எலக்ட்ரிசிட்டி' சிகிச்சை முறையை லி-யி என்பவர் அறிமுகம் செய்திருக்கிறார். உடலியக்கக் குறைபாடு உள்ளவர்களுக்கு இம்முறையில் சிகிச்சை அளிப்பதாகக் கூறுகிறார் இவர்.

* ஜேஜியாங் எனும் பகுதியில் இருக்கும் சிற்றோடையில் துளித்துளியாய் வழியும் புனிதநீரைச் சேகரிக்க நூற்றுக்கணக்கான மக்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இந்த சிற்றோடையில் இருந்து எடுக்கப்படும் புனிதநீர், நோய்களுக்கு தீர்வளிக்கிறது என்பது சீனர்களின் நம்பிக்கை. இதுபோன்ற புனிதநீர், உடல் உபாதைகளைச் சீராக்கும் என்பது இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உள்ள நம்பிக்கைதான்.

* சிறுநீர் மருத்துவ சக்தி நிறைந்தது என்பதும், அதைப் பருகினால் சில நோய்களைக் குணப்படுத்த முடியும் என்பதும் உலக மக்கள் சிலரின் நம்பிக்கை. சிறு நீரைப் பருகுவதும் சீனாவில் ஒரு சிகிச்சை முறையாக உள்ளது. 'ஹைபர்தைராய்டு' எனப்படும் அதிக தைராய்டு பிரச்சினைக்கு சிறுநீர் தீர்வு தரும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால் இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நம்பாத தரப்பு ஒருபக்கம் இருந்தாலும், விந்தையான சீனச் சிகிச்சைகள் தொடர்ந்தபடிதான் இருக்கின்றன.

No comments:

Post a Comment