செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்: 'ஸ்பேஸ் எக்ஸ்' அதிபர் கொடுத்த விளக்கம்

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்: 'ஸ்பேஸ் எக்ஸ்' அதிபர் கொடுத்த விளக்கம்

மெக்சிகோவிலுள்ள குவாதலஜாராவில் நடந்த சர்வதேச விண்வெளி போக்குவரத்து மாநாட்டில், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் ஆச்சரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 'இன்னும் சில வருடங்களில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தன், 'ராப்டர்' ராக்கெட் இயந்திரத்தை ஆதாரமாகக் கொண்ட செவ்வாய் கிரக காலனியாக்க பயணத்தை துவங்கும்' என்ற அறிவிப்புதான் அது. செவ்வாய் கிரகத்தில் குடியேறுவது மனித குலத்தை பல கிரகவாசியாக மாற்றும் என்றார் மஸ்க்.செவ்வாய் காலனியாக்க பயணத்தில், ஒரே சமயத்தில், 100 முதல் 200 பேரை சுமந்து செல்லும் வாகனத்தை தயாரிக்க ஸ்பேஸ் எக்ஸ் முயன்று வருவதாக மஸ்க் அறிவித்தார். அதுமட்டுமல்ல, பூமியில் ஒரு பெரு நகரில் வீடு கட்ட ஆகும் செலவு அளவுக்கே, செவ்வாய் பயண டிக்கெட்டின் விலை இருக்கும் என்று சொல்லி பலரை வாய் பிளக்க செய்தார் அவர்.பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பல மாதங்களுக்கு மேல் ஆகும் என்பதால், முதல் சில பயணங்கள் இடர்கள் மிக்கதாகவும், அதிக செலவு பிடிப்பதாக இருக்கும் என்றும் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், சில பயணங்களில் ஸ்பேஸ் எக்ஸ் கற்றுக்கொண்டவற்றை வைத்து, ஆபத்துக்களையும், செலவையும் வெகுவாக குறைத்துவிட முடியும் என்று அவர் தெரிவித்தார்.ஸ்பேஸ் எக்சின் ராக்கெட்டுகள் அடிக்கடி செவ்வாய்க்கு போவதும் வருவதுமாக இருக்கும் என்பதால், பூமிக்கு திரும்ப நினைப்பவர்கள் திரும்பி வர முடியும்."அது ஒரு வழிப் பயணமாக இருக்காது," என்றும் மஸ்க் தெரிவித்தார். செவ்வாயில் சில லட்சம் பேரையாவது குடியேற்றம் செய்வதே ஸ்பேஸ் எக்சின் லட்சியம் என்றும் மஸ்க் தெரிவித்தார்."செவ்வாய் கிரகத்திற்கு நீங்கள் செல்வீர்களா?" என்று மஸ்கிடமே பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு, 'செவ்வாய் கிரகத்திற்கு ஆரம்பத்தில் செல்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பயணமாகவே இருக்கும். சாவுக்கு துணிந்தவர்களை மட்டுமே ஆரம்பப் பயணங்களில் அனுப்புவோம். எனக்கு ஐந்து மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் வளர்ந்து ஆளாவதைப் பார்க்க பூமியிலேயே நான் வசிக்கப் போகிறேன்' என்று நழுவி விட்டார் மஸ்க்.

No comments:

Post a Comment