SCROL

Saturday, October 8, 2016

தேர்தல் ஆணையத்தின் மேல் முறையீட்டு வழக்கு:உள்ளாட்சி தேர்தல் தடை நீடிக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தேர்தல் ஆணையத்தின் மேல் முறையீட்டு வழக்கு:உள்ளாட்சி தேர்தல் தடை நீடிக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தேர்தல் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதித்து தனி நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் அறிவிப்பு ரத்து

இதற்கான வேட்புமனு தாக்கலும் முடிந்து விட்டது. இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலில், எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கவில்லை என்று கூறி தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது, தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அவசர கதியில் வெளியிடப்பட்டதாக மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் வாதிட்டார். இதுகுறித்து இடைக்கால மனுவும் தாக்கல் செய்தார்.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், 'இடஒதுக்கீடு தொடர்பாக கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால், உள்ளாட்சி தேர்தல் குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி வெளியிடவில்லை என்று கூறி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து கடந்த 4-ந் தேதி இடைக்கால தீர்ப்பு வழங்கினார்.

ஐகோர்ட்டில் மேல்முறையீடு

இதை எதிர்த்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் நேற்றுமுன்தினம் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், 'அனைத்து சட்ட விதிகளையும் பின்பற்றித்தான் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தேர்தல் நடவடிக்கை தொடங்கிவிட்டால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கை வேட்புமனு பரிசீலனை வரை வந்து விட்டது. தனி நீதிபதி உத்தரவினால், தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது அப்படியே நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே, தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த இடைக்கால தீர்ப்பை ரத்து செய்யவேண்டும். அந்த தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிக்கவேண்டும்' என்று கூறி இருந்தார்.இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீல் நேற்று கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் பணி பாதிப்பு

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கை பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார்கள். அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், 'தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து அவசர அவசரமாக மேல் முறையீடு செய்ய என்ன அவசியம் வந்தது?' என்று கேள்வி எழுப்பினார்கள்.அதற்கு தேர்தல் ஆணையத்தின் வக்கீல், 'தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்பிரிவு 24-ன்படி, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதலில் ஒரு அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். அதன்பின்னர் வேட்புமனு தாக்கல் செய்வது முதல் ஓட்டுக்களை எண்ணுவது தொடர்பாக மற்றொரு அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். அந்த இரு அறிவிப்பாணைகளை வெளியிடுவதற்கு தகுந்த கால இடைவெளி விடவேண்டும். அந்த கால இடைவெளி விடாமல் அறிவிப்பாணைகளை பிறப்பித்துள்ளதாக கூறி, தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து தனி நீதிபதி தீர்ப்பு கூறி உள்ளார். இதனால், தேர்தல் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன' என்று கூறினார்.

சங்கிலி அறுந்தது

தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், 'உள்ளாட்சி தேர்தல் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கும்படி கடந்த புதன்கிழமை மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துவிட்டது. தேர்தல் அறிவிப்பாணை வெளியிட்ட நாள் முதல் தொடங்கும் தேர்தல் பணி என்ற சங்கிலி தொடர் பணிகள் அறுந்துவிட்டது. எனவே, பழைய அறிவிப்பாணையின்படி இனி தேர்தல் பணியை மீண்டும் தொடங்க முடியாது' என்று வாதிட்டார்.அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, 'ஏற்கனவே எதிர்மனுதாரர்கள் (தி.மு.க.) உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டும். தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் என்று கோரி தொடர்ந்த வழக்கை நாங்கள் விசாரித்து உத்தரவு பிறப்பித்தோம். அந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் (தி.மு.க.) தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்து உள்ளது. எனவே, இந்த வழக்கையும் தள்ளிவைக்கிறோம்' என்று கூறினார்கள்.

தடை தேவையில்லை

அப்போது தேர்தல் ஆணையத்தின் வக்கீல் குறுக்கிட்டு, 'தேர்தல் நடவடிக்கை தொடங்கி விட்ட நிலையில், தேர்தல் அறிவிப்பை தனி நீதிபதி ரத்து செய்து உள்ளார். எனவே, தனி நீதிபதியின் இடைக்கால தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிக்கவேண்டும்' என்று வாதிட்டார்.அதற்கு நீதிபதிகள், 'தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால தீர்ப்பை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் பணி என்ற சங்கிலி தொடர் பணிகள் அறுந்துவிட்டதாக எதிர்மனுதாரர் வக்கீல் கூறுகிறார். ஏற்கனவே பிறப்பித்த அரசாணையின்படி, தேர்தல் பணியை தொடரமுடியாது. புதிதாக ஒரு அறிவிப்பாணையை வெளியிட வேண்டி உள்ளது. எனவே, தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடை விதிக்க தேவை இல்லை' என்று கூறினார்கள்.

விசாரணை தள்ளிவைப்பு

இதையடுத்து நீதிபதிகள், 'ஏற்கனவே தேர்தல் அறிவிப்பாணையை தனி நீதிபதி ரத்து செய்ததால், அனைத்து தேர்தல் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அன்றே, இந்த மேல்முறையீட்டு வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கேட்டு, தீர்ப்பு வழங்கப்படும். இந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு எதிர்மனுதாரர் (தி.மு.க.) தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment