10 நாள் தொடர் பணிக்குப்பின் வங்கிகளுக்கு இன்று விடுமுறை

10 நாள் தொடர் பணிக்குப்பின் வங்கிகளுக்கு இன்று விடுமுறை | ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி அறிவித்த பிரதமர் மோடி, மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தார். வங்கிகளில் இருந்த அந்த நோட்டுகளை திரும்ப பெற்றுக்கொண்டு செல்லத்தக்க நோட்டுகளை இருப்பில் வைப்பதற்காக 9-ந்தேதி விடுமுறை விடப்பட்டது. பின்னர் 10-ந்தேதி முதல் வங்கிகள் செயல்பட தொடங்கியதும் மக்கள் பழைய நோட்டுகளை மாற்றுவதற்காகவும், டெபாசிட் செய்வதற்காகவும் அனைத்து வங்கிகளையும் மொய்த்து வருகின்றனர். இதனால் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட வங்கிகள் திறந்து செயல்பட்டன. இவ்வாறு ஓய்வின்றி உழைத்து வரும் வங்கி ஊழியர்கள் ஓய்வெடுத்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த தகவலை பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்து வருகின்றன. கடந்த 10 நாட்களாக ஓய்வின்றி உழைத்து வரும் வங்கி ஊழியர்களுக்கு, இந்த விடுமுறை அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. ஆயினும் இந்த விடுமுறை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments