2½ ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் மவுலிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மீண்டும் திறக்கப்படுமா? ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு

2½ ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் மவுலிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மீண்டும் திறக்கப்படுமா? ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு

2½ ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் மவுலிவாக்கம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மீண்டும் திறக்கப்படுமா? என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.கடந்த 2014-ம் ஆண்டு மவுலிவாக்கம் 11 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த போது, அதன் அருகில் செயல்பட்டு வந்த அரசு ஆதித்திராவிடர் மேல்நிலைப்பள்ளிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. விபத்தில் பலியான கட்டிட தொழிலாளர்களின் உறவினர்கள் அந்த பள்ளியில் சிறிது நாட்கள் தங்க வைக்கப்பட்டனர்.மற்றொரு 11 அடுக்குமாடி கட்டிடம் ஆபத்தானது என்று அறிவிக்கபட்டதையடுத்து, அரசு மேல்நிலைப்பள்ளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டது. அப்பள்ளியில் பயின்ற 550 மாணவர்களுக்கு ஜோதிநகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டது.அப்பள்ளியில் இட பற்றாக்குறை காரணமாக காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், 12.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.நாளடைவில் தொடக்கப்பள்ளி வளாகத்தில் புதிதாக 2 கட்டிடங்கள் திறக்கப்பட்டன. அதன் பின்னர் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை 9.20 மணி முதல் மாலை 4.40 மணி வரை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் இட பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய வசதி குறைபாடால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.தற்போது ஆபத்தான 11 மாடி கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே செயல்பட்டு வந்த அரசு ஆதிதிராவிடர் பள்ளியை விரைவில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, 2½ ஆண்டுகளாக பள்ளி மூடியே இருப்பதால் புதர் மண்டி உள்ளது. பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் இருப்பிடமாக பள்ளி மாறி வருகிறது. எனவே பள்ளி கட்டிடத்தின் தன்மையை உடனடியாக ஆய்வு செய்து, கட்டிடத்தை புதுபொழிவுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை தீவிரமடையும் முன்பு அரசு நடவடிக்கை எடுத்தால் அனைவருக்கும் பயன் அளிக்கும்.' என்றனர்.

Comments