அரசு பள்ளிக்குள் புகுந்த 70 பேர் மாணவர்கள் மோதலில் கத்திக்குத்து

அரசு பள்ளிக்குள் புகுந்த 70 பேர் மாணவர்கள் மோதலில் கத்திக்குத்துகாட்பாடி அரசு பள்ளியில், மாணவர்கள் மோதலை தொடர்ந்து, அவர்களது ஆதர வாளர்கள் புகுந்து அடித்துக் கொண்டதில், வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. வேலுார் மாவட்டம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று மதியம், 12:30 மணிக்கு மாணவர்கள், மதிய உணவு இடைவேளைக்காக வெளியே வந்தனர்.அப்போது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் கேலியும், கிண்டலுமாக பேசி கொண்டனர். இதில், அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த மாணவர்களும், வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மாணவர்களும், இரண்டு பிரிவுகளாக பிரிந்து, ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.மேலும், இது குறித்து, மாணவர்கள், தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அக்ராவரத்தைச் சேர்ந்த ஏஜாஸ் அகமது, 23, தலைமையில், 30 பேரும், வண்டறந்தாங்கலைச் சேர்ந்த சரவணன், 39, தலைமையில், 40 பேரும் பள்ளிக்கு வந்தனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடப்பாரை, கட்டையால் அடித்துக் கொண்டனர்.அப்போது, ஏஜாஸ் அகமது முகத்தில் சரவணன் கத்தியால் குத்தினான்; இதில், அவன் படுகாயமடைந்தான். ஏஜாஸ் அகமதுடன் வந்தவர்கள், வீச்சரிவாளால் சரவணன் ஆட்களை தாக்கினர். சரவணன் மற்றும் அவனது ஆட்கள் தப்பியோடினர்.ஏஜாஸ் அகமதுவின் ஆட்கள், வண்டறந்தாங்கலைச் சேர்ந்த மாணவர்களை அடித்து விரட்டினர். படுகாயமடைந்த ஏஜாஸ் அகமது, வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.பள்ளி தலைமை ஆசிரியை, செல்வராணி புகாரை அடுத்து, காட்பாடி போலீசார், அக்ராவரம், வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த, ஆறு மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவர்கள் மொபைல் போனுடன் பள்ளிக்கு வந்ததால், இந்த மோதல் நடந்தது தெரியவந்துள்ளது.

Comments