SCROL

Tuesday, November 15, 2016

தமிழகத்தில் 8-வது வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி தொடர்கிறது அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

தமிழகத்தில் 8-வது வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி தொடர்கிறது அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி | 1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்ற நிலைப்பாடு தமிழகத்தில் தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார். 8-வது வகுப்பு வரை தேர்ச்சி மத்திய அரசு 1-வது வகுப்பு முதல் 5-வது வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர் களை தேர்ச்சி செய்யலாம். 6-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி செய்ய வைப்பது அந்தந்த மாநிலத்தின் உரிமை என்று கூறியது. இது குறித்து சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:- ஜெயலலிதாவின் நோக்கம் இந்தியாவில் தமிழகம் கல்வித்துறையில் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் முதலிடம் வகித்தால் மட்டும் போதாது தமிழகத்தில் கல்வி உலகத்தரத்தில் இருக்கவேண்டும் என்பது முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நோக்கம். எனவே அவர் கல்விக்காக கடந்த 6 வருடங்களில் பள்ளிக்கல்வித்துறைக்காக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி வழங்கி உள்ளார். ஜெயலலிதாவின் நோக்கம் செயல்பட அனைத்து கல்வித் திட்டங்களும் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளிகளில் கட்டமைப்பு வசதி, பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் உள்ளிட்ட 14 வகையான விலை இல்லா பொருட்கள் வழங்கப்படுகின்றன. அந்த 14 பொருட் கள் மட்டுமல்லாமல் இந்த வருடம் அறிவியல் உபகரணங்கள், கணித உபகரணங்கள் ஆகியவையும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் தொடர்கிறது 8-வது வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற நிலைப்பாடு தமிழகத்தில் தொடர்கிறது. இந்த நிலைப்பாடுதான் தென் இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்கிறது. மேலும் மாணவ-மாணவிகள் பல்வேறு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக பயிற்சி கையேடு வழங்கப்படுகிறது. அந்த பயிற்சி கையேட்டில் அவர்கள் வழக்கமாக படிக்கும் பாடத்துடன் பொதுவாகவும் கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் எளிமையாக பதில் அளிக்கும் வகையில் இருக்கும். தமிழ்நாட்டில் நூலகங்கள் அனைத்தின் மேம்பாட்டுக்கும் அரசு நிதி வழங்கி உள்ளது. நூலகங்களை மேம்படுத்தி வளர்ச்சி காணப்படும். தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக நூலகத்தை மின்மயமாக்க தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.5 கோடியே 50 லட்சம் ஒதுக்கி உள்ளார். இவ்வாறு அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார். குழந்தைகள் தினவிழா நேரு பிறந்த நாள்விழா, குழந்தைகள் தினவிழாவாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியில் நேற்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் .சபீதா தலைமை தாங்கினார். அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்துகொண்டு சிறந்த நூலகர்களுக்கு பரிசுகளும், கேடயமும் வழங்கி பாராட்டினார். மேலும் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அதிகாரிகள் தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்ணி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் கழக நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக்கல்வித்துறை இணைசெயலாளர் ராகுல் நாத், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் .அறிவொளி, வி.சி.ராமேஸ்வர முருகன், கருப்பசாமி, பழனிச்சாமி உள்பட பலர் பேசினார்கள். தொடக்கத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் .கண்ணப்பன் வரவேற்றார். முடிவில் தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை சென்னை முதன்மை கல்வி அதிகாரி அனிதா செய்திருந்தார்.

No comments:

Post a Comment