வில்லியம் ஜேம்ஸ் டியுரண்ட் (William James Durant)

அமெரிக்காவைச் சேர்ந்த வரலாற்று அறிஞர், படைப்பாளி, மெய்யியல் வல்லுநருமான வில்லியம் ஜேம்ஸ் டியுரண்ட் (William James Durant) பிறந்த தினம் இன்று (நவம்பர் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

>>மசாசூசெட் மாநிலத்தின் நார்த் ஆடம்ஸ் என்ற ஊரில் பிறந்தவர் (1885). பள்ளிக் கல்விக்குப் பிறகு நியு ஜெர்சியில் பட்டப்படிப்பை 1907-ல் முடித்தார்.

>>1911-ல் ஃபெரர் மாடர்ன் ஸ்கூல் என்ற பள்ளியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகள் அங்குப் பணியாற்றினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1917-ல் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

>>எழுத்தாற்றல் படைத்திருந்த இவர், அதே ஆண்டில் 'ஃபிலாசஃபி அன்ட் தி சோஷியல் பிராப்ளம்' என்ற நூலை எழுதி வெளியிட்டார். உண்மையான சமூகப் பிரச்சினைகளைத் தவிர்த்து வருவதால்தான் தத்துவத்துறை வளர்ச்சியடையவில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

>>1927-ல் 'தி ஸ்டோரி ஆஃப் பிலாசஃபி' என்ற நூலை வெளியிட்டார். அடுத்தடுத்து இவரது சுயசரிதை நாவல் 'டிரான்சிஷன்', இறையியல், தார்மீகம், அரசியல் கோட்பாடு மற்றும் தத்துவ வரலாறு உள்ளிட்ட விஷயங்கள் அடங்கிய 'மான்ஷியன்ஸ் ஆஃப் ஃபிலாசபி' வெளிவந்தது.

>>இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் கண்டிக்கும் 'தி கேஸ் ஃபார் இந்தியா', கல்வி மற்றும் தத்துவம் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்ட 'அட்வென்சர்ஸ் இன் ஜீனியஸ்', 'தி லெசன்ஸ் ஆஃப் ஹிஸ்டரி', 'இன்டர்ப்ரடேஷன்ஸ் ஆஃப் லைஃப்' உள்ளிட்ட பல நூல்களை வெளியிட்டார். 1935-ல் உலகப் புகழ்பெற்ற 'தி ஸ்டோரி ஆஃப் சிவிலைசேஷன்' நூலைத் தன் மனைவி ஏரியல் டியுரண்ட்டுடன் இணைந்து எழுதி வெளியிட்டார்.

>>இந்த நூலின் முதல் தொகுதி 'ஓரியன்டல் ஹெரிடேஜ்'. பின்னர் 'தி ஏஜ் ஆஃப் ஃபெயித்', 'தி ஏஜ் ஆஃப் வால்ட்டேர்', 'தி ஏஜ் ஆஃப் நெப்போலியன்', 'ரூசோ அன்ட் ரெவல்யூஷன்' உள்ளிட்ட 11 தொகுதிகள் எழுதியுள்ளார்.

>>'ரூசோ ரெவல்யூஷன்' என்ற நூலுக்காக 1967-ல் இவருக்கும் இவர் மனைவிக்கும் கூட்டாக புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. உலகின் 2,500 ஆண்டு கால மனித இன வரலாற்றைப் படிப்படியாக எடுத்துக் கூறுவதாக அமைந்த ஆய்வு நூல் இது.

>>இதன் ஒரு தொகுதி எழுதி முடிக்க இவர்களுக்கு சுமார் நான்காண்டு காலம் பிடித்தன. தனது அனைத்துப் படைப்புகளுக்கும் உறுதுணையான தன் மனைவியுடன் இணைந்து, ' ட்யூயல் ஆட்டோபயாகிரஃபி' என்ற நூலை இவர் எழுதியுள்ளார்.

>>மேலும், தொழிலாளர் ஊதியத்தில் ஏற்றத்தாழ்வு, மோசமான பணிக்கள சூழல், பெண்களின் பிரச்சினைகள், மற்றும் பிற சமூக அநீதிகளை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடினார்.

>>அமெரிக்க பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம் பதக்கம் 1977-ல் பெற்றார். 'ஹீரோஸ் ஆஃப் ஹிஸ்டரி', 'தி கிரேட்டஸ்ட் மைன்ட்ஸ் அன்ட் ஐடியாஸ் ஆஃப் ஆல் டைம்' உள்ளிட்ட பல நூல்கள் இவரது மரணத்துக்குப் பிறகு வெளியாயின. தலைசிறந்த தத்துவ மேதை, சமூகப் போராளி, வரலாற்று ஆசிரியர், மெய்யியலாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த வில்லியம் ஜேம்ஸ் டியுரண்ட் 1981-ம் ஆண்டு 96-வது வயதில் மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

Comments