SCROL

Friday, December 23, 2016

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி, நீதிபதி உள்ளிட்ட டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் செல்லாது ஐகோர்ட்டு உத்தரவு



முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி, நீதிபதி உள்ளிட்ட டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் செல்லாது ஐகோர்ட்டு உத்தரவு | டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக முன்னாள் நீதிபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்ளிட்ட 11 பேரை நியமித்தது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 11 உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) உறுப்பினர்களாக வக்கீல்கள் பிரதாப்குமார், சுப்பையா, முத்துராஜ், சேதுராமன், பாலுசாமி, மாடசாமி, முன்னாள் மாவட்ட நீதிபதி வி.ராமமூர்த்தி, என்ஜினீயரிங் முதுகலை பட்டதாரி பி.கிருஷ்ணகுமார், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முன்னாள் தலைமை என்ஜினீயர் சுப்பிரமணியன், முன்னாள் அரசு அதிகாரி புண்ணியமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் ஆகிய 11 பேர் நியமிக்கப்பட்டனர். கடந்த ஜனவரி 31-ந் தேதி தமிழக அரசு பரிந்துரையின் அடிப்படையில் அப்போதைய தமிழக கவர்னர் கே.ரோசய்யா அவர்களை நியமித்தார். தகுதியில்லாத நபர்கள் இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவையின் தலைவர் கே.பாலு உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில், 'தகுதியில்லாத நபர்களை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக தமிழக அரசு அவசர கதியில் நியமித்துள்ளது. இதில் பலர் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள். ஒரு சாதியை சேர்ந்த பலர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களது நியமனத்தை ரத்து செய்யவேண்டும்' என்று கூறியிருந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:- பரிசீலிக்கப்படவில்லை டி.என்.பி.எஸ்.சி.யின் உறுப்பினர்களாக தகுந்த நபர்கள் நியமிக்கப்படவில்லை என்று இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை தமிழக அரசும், டி.என்.பி.எஸ்.சி.யும் மறுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அரசு பணிக்கு நேர்மையானவர்கள், திறமையானவர்களை தேர்வு செய்வது டி.என்.பி.எஸ்.சி.யின் பணியாகும். அப்படிப்பட்ட தேர்வு பணியை மேற்கொள்ளும் டி.என்.பி.எஸ்.சி.யின் தலைவர், உறுப்பினர்கள் ஒழுக்கமுள்ள, நேர்மையான நபர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு நியமிக்கப்படும் உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் பாதுகாப்பு வழங்குகிறது. அப்படிப்பட்ட பதவிக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது முறையான விதிமுறைகளை கடைப்பிடித்திருக்க வேண்டும். ஆனால், 11 உறுப்பினர்கள் நியமனத்தில் அவர்களது சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வேறு எந்த ஒரு அம்சத்தையும் பரிசீலிக்கவில்லை. காலிப் பணியிடங்கள் இந்த 11 உறுப்பினர்கள் பதவி 2013-ம் ஆண்டு முதல் காலியாக இருந்தது. 3 ஆண்டுகளாக இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவசர கதியில் இந்த காலிப்பணியிடங்கள் எல்லாம் நிரப்பப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்கள் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 11 நபர்களை தேர்வு செய்து, அவர்களது சுயவிவர குறிப்பை பெற்று, அவர்களை இப்பதவிக்கு நியமனம் செய்துள்ளனர். இந்த சுயவிவர குறிப்பை மட்டுமே பிரதான ஆவணங்களாக பரிசீலனை செய்து, தமிழக கவர்னரும் நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார். வேறு எந்த ஒரு ஆவணங்களும் இந்த நியமனத்தில் பரிசீலிக்கப்படவில்லை. விடுமுறை நாளில் பரிசீலனை அதுவும் இந்த பரிசீலனை ஜனவரி 30-ந் தேதி சனிக்கிழமை நடந்துள்ளது. மறுநாள் 31-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை 11 பேரையும் நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாட்களில் இந்த நடவடிக்கை எல்லாம் நடந்துள்ளது. இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன், 11 உறுப்பினர்களும் பிப்ரவரி 2-ந் தேதி அவசரமாக பதவியையும் ஏற்றுக்கொண்டனர். 11 பேர் குறித்து போலீஸ் ரகசிய விசாரணை உள்ளிட்ட அனைத்து பணிகளும் 24 மணி நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. இதில், முன்னாள் மாவட்ட நீதிபதி ராமமூர்த்தி குறித்து சரிவர விசாரிக்கப்படவில்லை. அவர் மீது சில மாறுபட்ட கருத்து இருந்ததால், 58 வயதுக்கு பின்னர் நீதிபதி பணியை (60 வயது வரை) தொடர ஐகோர்ட்டு அனுமதி வழங்கவில்லை. அப்படிப்பட்ட நபர் இதுபோன்ற பதவிக்கு பரிசீலிக்கப்படக் கூடாது. நியமனம் ரத்து எனவே 11 உறுப்பினர்கள் நியமனம் சட்டப்படி நடைபெறவில்லை. இவர்களது நியமனம் செல்லாது. இந்த நியமனத்தை ரத்து செய்கிறோம். இவர்களை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக நியமித்து கடந்த ஜனவரி 31-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment