டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: 2-வது இடத்துக்கு முன்னேறினார், விராட் கோலி பந்துவீச்சாளர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடம்


டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: 2-வது இடத்துக்கு முன்னேறினார், விராட் கோலி பந்துவீச்சாளர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடம் | டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார். மும்பையில் நேற்று முன்தினம் நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி முதல்முறையாக 2-வது இடத்தை பிடித்துள்ளார். மும்பை டெஸ்டில் 235 ரன்கள் குவித்து பிரமிப்பூட்டிய விராட் கோலி, இந்திய கேப்டன்களில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அவரது ரன்வேட்டைக்கு பரிசாக 53 தரவரிசை புள்ளிகள் கூடுதலாக கிடைத்தன. தற்போது 886 புள்ளிகள் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தை விட 11 புள்ளிகளே பின்தங்கியுள்ள 28 வயதான விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் அசத்தும் பட்சத்தில் 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறிவிடலாம். விராட் கோலி ஒரு நாள் போட்டி தரவரிசையில் 2-வது இடத்திலும், 20 ஓவர் கிரிக்கெட்டில் முதலிடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் 136 ரன்கள் விளாசிய இந்திய வீரர் முரளிவிஜய் 5-வது இடங்கள் ஏற்றம் கண்டு 24-வது இடத்தையும், புஜாரா மாற்றமின்றி 8-வது இடத்தையும் பெற்றுள்ளனர். இதே டெஸ்டில் 9-வது வரிசையில் களம் இறங்கி 104 ரன்கள் திரட்டிய இந்திய ஆல்-ரவுண்டர் ஜெயந்த் யாதவ் 31 இடங்கள் உயர்ந்து 56-வது இடத்துக்கு வந்துள்ளார். 900 புள்ளிகளை கடந்த அஸ்வின் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் தொடர்ந்து 'நம்பர் ஒன்' ஆக வலம் வருகிறார். மும்பை டெஸ்டில் 12 விக்கெட்டுகளை அள்ளிய அவர் 13 புள்ளிகளை சேகரித்து மொத்தம் 904 புள்ளிகளை எட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 900 என்ற மைல்கல்லை எட்டிய 22 பவுலர்களில் அஸ்வினும் ஒருவர். சுழற்பந்து வீச்சாளர்களில் இலங்கையின் முரளிதரன் (920 புள்ளி), இங்கிலாந்தின் டோனி லாக் (912), டேரக் அன்டர்வுட் (907), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே (905) ஆகியோருக்கு அடுத்து சிறந்த தரவரிசை புள்ளியை பெற்ற சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் திகழ்கிறார். ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையிலும் அஸ்வின் முதலிடத்தில் தொடருகிறார். அஸ்வின் 483 புள்ளிகளும், 2-வது இடத்தில் உள்ள வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் 405 புள்ளிகளும், 3-வது இடம் வகிக்கும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 341 புள்ளிகளும், 4-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 340 புள்ளிகளும் பெற்றுள்ளனர். அணிகள் தரவரிசை எப்படி? ஒரு டெஸ்ட் தொடர் முடிந்த பிறகே அணிகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்தியா 115 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 105 புள்ளிகளுடனும் இருந்தன. சென்னையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இந்திய அணி வாகை சூடி தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் 120 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கும். இங்கிலாந்தின் புள்ளி எண்ணிக்கை 101 ஆக சரியும். கடைசி டெஸ்ட் 'டிரா' ஆனால், இந்தியா 119 புள்ளிகளும், இங்கிலாந்து 102 புள்ளிகளும் பெற்று இருக்கும். சென்னை டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவினால், 117 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 103 புள்ளிகளுடனும் இருக்கும். முடிவு எப்படி இருந்தாலும் இந்தியாவின் 'நம்பர் ஒன்' இடத்துக்கு ஆபத்து இல்லை. இங்கிலாந்தை விட மயிரிழையில் பின்தங்கி 105 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கும் ஆஸ்திரேலிய அணி நாளை தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றால் 109 புள்ளிகளும், 2-0 என்ற கணக்கில் வென்றால் 108 புள்ளிகளும் பெற்று 2-வது இடத்துக்கு உயரும்.Comments