கணக்கில் காட்டும் நகைக்கு வரி கிடையாது ஒருவர் எவ்வளவு தங்க நகை வைத்துக் கொள்ளலாம்? வருமான வரி திருத்த சட்டத்தில் அதிரடி தகவல்கள்

கணக்கில் காட்டும் நகைக்கு வரி கிடையாது ஒருவர் எவ்வளவு தங்க நகை வைத்துக் கொள்ளலாம்? வருமான வரி திருத்த சட்டத்தில் அதிரடி தகவல்கள்ஒருவர் எவ்வளவு தங்க நகை வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து வருமான வரி திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. கணக்கில் காட்டும் நகைக்கு வரி கிடையாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந்தேதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பால் ஏற்பட்ட தாக்கம், தொடர்கதையாய் நீண்டு வருகிறது. செல்லாத நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி ரொக்கமாக மாற்றுவதற்கான அவகாசம் முடிந்து விட்டது. அவற்றை வங்கிகளில் இந்த மாதம் 30-ந்தேதி வரையில் டெபாசிட் செய்யவும், ரிசர்வ் வங்கியில் மார்ச் 31-ந் தேதிவரையில் உரிய ஆதாரங்களுடன் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் அவகாசம் உள்ளது. இந்த நிலையில், தனிநபர் வங்கி கணக்குகளில் ரூ.2½ லட்சத்துக்கு மேல் 'டெபாசிட்' செய்கிறபோது, அந்த கணக்குகளை ஆய்வு செய்து வரி விதிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக பாராளுமன்றத்தில் கடந்த 29-ந்தேதி 'வருமான வரிகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2016' என்ற மசோதா, நிதி மசோதாவாக கொண்டு வரப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. 85 சதவீதம் இந்த மசோதா, கணக்கில் காட்டாத கருப்பு பணம் வைத்திருப்போர், டிசம்பர் 30-ந்தேதிக்குள் அதை வருமான வரித்துறையிடம் அறிவித்து, 50 சதவீத வரி செலுத்த வழிவகை செய்கிறது. மீதி 50 சதவீதத்தில் 25 சதவீதம் திரும்ப தரப்படும். எஞ்சிய 25 சதவீதம் 4 ஆண்டுக்கு திரும்பப்பெற முடியாத, வட்டி இல்லாத மத்திய அரசின் திட்டங்களில் முதலீடு செய்யப்படும். டிசம்பர் 30-ந்தேதிக்குள் அறிவிக்க தவறுகிறபோது, அந்த தொகைக்கு 60 சதவீத வரி, 25 சதவீத கூடுதல் வரி (இது வருமானத்தின் 15 சதவீதமாக இருக் கும்) என 75 சதவீதம் வரி, 10 சதவீத அபராதம் என 85 சதவீதம் இழக்க நேரிடும். தங்க நகைகள் மீது வரி விதிப்பா? கருப்பு பணத்துக்கு எதிராக மத்திய அரசின் பிடி இறுகி வருகிற நிலையில், பலர் கருப்பு பணத்தை கொண்டு தங்கம் வாங்கி பதுக்கி உள்ளதாக நம்பப்படுகிறது. எனவே அதற்கும் கடிவாளம் போட மத்திய அரசு விரும்புகிறது. இதற்கிடையே, 'வருமான வரிகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2016', வருமான வரி சோதனை நடத்தி, தங்க நகைகள் மீது வரி விதிக்கவும் வகை செய்திருப்பதாகவும் வதந்திகள் பரவின. தனிநபர்கள் தங்கம் வைத்துக்கொள்வதில் மத்திய அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வரும் என்றும் தகவல்கள் வெளியாகின. மத்திய அரசு விளக்கம் இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மேல்-சபையின் பரிசீலனையில் உள்ள 'வருமான வரிகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2016'-ல், மூதாதையர் நகைகள் உள்பட எல்லாவிதமான தங்க நகைகளுக்கும் 75 சதவீத வரியும், 10 சதவீத அபராதமும் விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது என வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் அந்த மசோதாவில், நகைகள் மீது வரி விதிப்பதற்காக புதிதாக எந்த விதிகளும் சேர்க்கப்படவில்லை. அதில் வருமான வரி சட்டம் 1961, பிரிவு 115 பிபிஇ படி, தற்போதைய வரி விதிப்பு 30 சதவீதம் என்பதை 60 சதவீதம் வரி, 25 சதவீதம் கூடுதல் வரி, செஸ் வரி என உயர்த்தத்தான் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவு, கணக்கில் காட்டாத முதலீடுகள் மீது வரி விதிப்பதற்கு வழி செய்கிறது. கட்டுப்பாடு இல்லை கணக்கில் காட்டப்பட்ட வருமானத்தை கொண்டோ, விவசாயம் உள்ளிட்ட வரி விலக்கு பெற்ற வருமானத்தை கொண்டோ, குடும்ப சேமிப்பு கொண்டோ வாங்கப்பட்ட நகைகள், தங்க கட்டிகள் மற்றும் மூதாதையர் வழிவந்த நகைகள் விஷயத்தில், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அறிவுரை எண் 1916-ன் படி வரி விதிக்கப்பட மாட்டாது. அதன்படி, * திருமணமான பெண்கள் ஒவ்வொருவரும் 500 கிராம் அளவுக்கு தங்க நகைகள் (62½ சவரன்) வைத்துக்கொள்ளலாம். * திருமணமாகாத பெண்களைப் பொறுத்தமட்டில் ஒவ்வொருவரும் 250 கிராம் (31¼ சவரன்) தங்க நகைகள் வைத்துக்கொள்ளலாம். * திருமணமான ஆண்கள் ஒவ்வொருவரும் 100 கிராம் (12½ சவரன்) தங்க நகை வைத்துக்கொள்ள முடியும். இந்தளவுக்கு தங்க நகைகளும், கட்டிகளும் வைத்துக்கொள் கிறபோது, அவை வருமானத்துக்கு பொருந்தாதவகையில் இருப்பதாக மேலெழுந்தவாரியாக தெரிந்தால் கூட, பறிமுதல் செய்யப்பட மாட்டாது. இந்த அளவுக்கு மேல் தங்க நகைகள் வைத்திருந்தால் கூட குடும்ப பழக்கவழக்கம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில்கொண்டு, அவற்றை பறிமுதல் செய்யாமல் இருப்பதற்கு சோதனை நடத்தும் அதிகாரிக்கு தனிப்பட்ட அதிகாரம் உண்டு. அதேபோன்று (வருமான வரி கணக்கில் காட்டிய) சட்டப்பூர்வமான வருமானத்தைக் கொண்டு வாங்கப்பட்ட நகைகள், கட்டிகள் எந்தளவுக்கு வைத்திருந்தாலும், கட்டுப்பாடின்றி அதற்கு பாதுகாப்பு உண்டு. எனவே, கணக்கில் காட்டிய வருமானத்தை கொண்டு, வரிவிலக்கு பெற்ற வருமானத்தை கொண்டு வாங்கிய நகைகள், கட்டிகள் வீட்டில் இருந்தால், அதற்கு புதிய வருமான வரிச்சட்டத்தின்படி வரி விதிக்கப்படும் என வெளியான தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment