தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அனுதாபம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அனுதாபம் | முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவை யொட்டி அவருக்கு நேற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் பிரார்த்தனை நேரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். ஜெயலலிதா மரணம் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து நேற்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் காலையில் பிரார்த்தனை நேரத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது ஜெயலலிதாவின் உருவப்படம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பல பள்ளிகளில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது சில மாணவ-மாணவிகள் கண்ணீர் மல்கினார்கள். 1 கோடியே 33 லட்சம் மாணவ-மாணவிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு , அரசு உதவி பெறும், சுயநிதி பள்ளிகள் அனைத்திலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மொத்தம் 57 ஆயிரத்து 583 பள்ளிகளில் 5 லட்சம் ஆசிரியர்களும், 1 கோடியே 33 லட்சம் மாணவ-மாணவிகளும் அஞ்சலி செலுத்தினார்கள். அலுவலகங்களில்... சென்னையில் டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வி இயக்குனரகம் முன்பாக ஜெயலலிதா உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. அந்த படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் க.அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி, தமிழ்நாடு பாடநூல் நிறுவன செயலாளர் கார்மேகம், பள்ளிசாரா இயக்க இயக்குனர் பழனிச்சாமி ஆகியோரும் அவரவர் இயக்குனரகத்தில் ஊழியர்களுடன் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment