ஹோமியோபதி படிப்பிற்கும் நீட் தேர்வு

ஹோமியோபதி படிப்பிற்கும் நீட் தேர்வு | வரும் கல்வியாண்டிலிருந்து ஹோமியோபதி மருத்துவ இளநிலைப் பட்டப்படிப்பில்  சேரவும்  நீட் தேர்வு எழுத வேண்டும். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.அகில இந்திய பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில்தான் இந்த ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேசிய தகுதிகாண் பொது நுழைவுத்தேர்வு (நீட்) கட்டாயமாகியுள்ளது. இதுவரை, நுழைவுத்தேர்வு இல்லாமல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் அட்மிஷன் பெற்ற தமிழக மாணவர்கள் வரும் ஆண்டில் நீட் தேர்வை எழுத வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.இந்த நிலையில், ஹோமியோபதி இளநிலைப் பட்டப்படிப்பில் (பிஎச்எம்எஸ்) சேரவும் நீட் தேர்வை எழுதவேண்டும் என மத்திய ஆயுர்வேதம், யோகா, நேச்சுரோபதி, யூனானி, ஹோமியோபதி (ஆயுஷ்) அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து  ஹோமியோபதி கல்வி நிறுவனங்களுக்கு மத்திய ஹோமியோபதி கவுன்சில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எனவே, இந்த ஆண்டில் ஹோமியோபதி படிப்பில் சேர விரும்பும் பிளஸ் டூ மாணவர்கள், இந்த நீட் தேர்வை எழுத வேண்டியது இருக்கும். நீட் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்போது, இதுகுறித்த விரிவான விவரங்கள் தெரிய வரும்.

No comments:

Post a Comment