மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்ய குழு அமைத்ததை எதிர்த்து வழக்கு ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவு


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்ய குழு அமைத்ததை எதிர்த்து வழக்கு ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவு | மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு தகுந்த நபரை தேர்வு செய்யும் தேர்வு குழுவை அமைத்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் .நாராயணன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தேர்வு குழு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு தகுந்த நபரை தேர்வு செய்ய ஒரு தேர்வு குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. அந்த தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள சி.முருகதாஸ் என்பவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த சி.முருகதாஸ் முறையாக செயல்படவில்லை என்றும் பல முறைகேட்டில் ஈடுபடுகிறார் என்று கூறி அக்குழுவில் உறுப்பினராக இருந்த ராமசாமி என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதன்பின்னர், கடந்த டிசம்பர் 20-ந்தேதி இந்த தேர்வு குழுவை மாற்றி அமைத்து மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதிலும், சி.முருகதாஸ் இடம் பெற்றுள்ளார். ராமமோகனராவின் தயவு இந்த முருகதாஸ், சமீபத்தில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனைக்கு உட்பட்டு, தலைமை செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமமோகனராவின் நெருங்கிய கூட்டாளி. ராமமோகனராவின் ஆராய்ச்சி படிப்பிற்கு முருகதாஸ் வழிகாட்டுதல் ஆசிரியராக இருந்துள்ளார். இதனால், அண்ணாமலை பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் தேர்வு குழுவில், ராமமோகனராவின் தயவில் முருகதாஸ் இடம் பெற்றார். தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்வு குழுவில் இடம் பெற்றுள்ளார். பல குற்றச்சாட்டுக்கு ஆளான முருகதாசை, இந்த தேர்வு குழுவில் இடம் பெற அனுமதிக்க கூடாது. தலையிட முடியாது எனவே தேர்வு குழுவை அமைத்து பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும். புதிய தேர்வுக்குழுவை அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், 'துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவின் பணிகள் பாதி கடந்து விட்டது. இந்த சூழலில் இதில் இந்த ஐகோர்ட்டு தலையிட விரும்பவில்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்று உத்தரவிட்டுள்ளனர்.

Comments