ஏப்ரலுக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்ட பணம் எவ்வளவு? வங்கிகளிடம் விவரங்களை பெற வருமானவரித்துறை தீவிரம்


ஏப்ரலுக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்ட பணம் எவ்வளவு? வங்கிகளிடம் விவரங்களை பெற வருமானவரித்துறை தீவிரம் | கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பிறகு ரொக்கப்பணம் டெபாசிட் செய்தவர்கள் பற்றிய விவரத்தை வங்கிகளிடம் இருந்து வருமான வரித்துறை கேட்கிறது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு பிரதமர் நரேந்திரமோடி கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றியபோது, கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கிற வகையில் ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இந்த மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு முன் ஒரு சாரார், வங்கிகளில் பெரும்பணத்தை டெபாசிட் செய்ததாகவும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. வருமான வரித்துறை அதிரடி இந்தநிலையில் வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன், குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரையில் வங்கிகளில் செய்யப்பட்ட அனைத்து ரொக்க பண டெபாசிட் பற்றிய விவரங்களை தருமாறு வங்கிகளை வருமான வரித்துறை கேட்டுள்ளது. நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமல்லாது, கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களும் இது குறித்த தகவல்களை தருமாறு கோரப்பட்டுள்ளன. இது தொடர்பாக வருமான வரித்துறை ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை தொடர்ந்து, கடந்த நவம்பர் 10-ந் தேதி முதல் டிசம்பர் 30-ந் தேதி வரையில் ரூ.2½ லட்சத்துக்கு அதிகமாக, 'செல்லாது' என அறிவிக்கப்பட்ட உயர் மதிப்பு கொண்ட பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தவர்கள் பற்றிய விவரங்களை வங்கிகள், தபால் அலுவலகங்கள் தருமாறு ஏற்கனவே வருமான வரித்துறை கேட்டது நினைவுகூரத்தக்கது. வருமான வரி சோதனை கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வருமானவரி அதிகாரிகள் கருப்பு பணம் பதுக்கியிருந்தவர்களின் இடங்களில் சோதனை நடத்தி பணம், நகை, ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர். இதுபற்றி வருமான வரி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ரூபாய் நோட்டுகள் ஒழிப்புக்கு பின்னர் வருமான வரி சட்டத்தின்படி இதுவரை 1,138 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வரி ஏய்ப்பு, ஹவாலா பணபரிமாற்றம் போன்ற புகார்கள் காரணமாக பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த 5,184 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ரூ.4,807 கோடி கருப்பு பணம் ஜனவரி 5-ந் தேதி வரை நடந்த சோதனையில் ரூ.609.39 கோடிக்கு பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டும் ரூ.112.8 கோடி ஆகும். நகையின் மதிப்பு மட்டும் ரூ.97.8 கோடி. கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் ரூ.4,807.45 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை இதுவரை பண பரிமாற்றம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல், ஊழல் போன்ற 526 வழக்குகளை துணை நிறுவனங்களான சி.பி.., அமலாக்கப்பிரிவு ஆகியவைகளின் விசாரணைக்கு அனுப்பியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். குஜராத் கூட்டுறவு வங்கி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள கூட்டுறவு வங்கியில் கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதியில் இருந்து டிசம்பர் 30-ந் தேதி வரை 4,551 புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.871 கோடிக்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டுபிடித்த வருமானவரி அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதே காலகட்டத்தில் ரூ.108 கோடி பணமும் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. புதிய கணக்கு தொடங்கியவர்கள் யாருக்கும் நிரந்தர கணக்கு எண் (பான்) கிடையாது. 62 கணக்குகள் ஒரே செல்போன் எண்ணை கொடுத்து தொடங்கப்பட்டவை. வங்கியின் முன்னாள் இயக்குனரின் மகன் 30 கணக்குகள் மூலம் ரூ.1 கோடி டெபாசிட் பெற்றுள்ளார். வங்கி துணைத் தலைவரின் மனைவி பெயரில் ரூ.64 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டு, அந்த தொகை ஒரு நகை வியாபாரிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

Comments