வங்கிகள் கல்வி கடன் வழங்கும் திட்டம் எளிமையாக்கப்படும் மத்திய மந்திரி தகவல்


வங்கிகள் கல்வி கடன் வழங்கும் திட்டம் எளிமையாக்கப்படும் மத்திய மந்திரி தகவல் | வங்கிகள் கல்வி கடன் வழங்கும் திட்டம் எளிமையாக்கப்படும் என்று மத்திய இணை மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் தெரிவித்தார். சென்னையில் நேற்று ஒரு அறக்கட்டளை சார்பில் கல்வி கடன் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் கலந்துகொண்டு பேசியதாவது:- வங்கிகள் கல்வி கடன் வழங்கும் திட்டத்தில் உள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். கல்வி கடன் பெற்ற மாணவர்களின் வாழ்க்கை மாற்றத்தை வங்கிகள் பிரபலப்படுத்த வேண்டும். வங்கிகள் தங்களது தலைமையகத்தில் கல்வி கடன் பெறாத மாணவர்களின் குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்ய தொடர்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். இதுதொடர்பாக நிதி அமைச்சகம் விரைவில் சுற்றறிக்கை அனுப்பும். கல்வி கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களின் வசதிக்காக மத்திய அரசு வித்யாலட்சுமி போர்ட்டல் எனப்படும் இணையதளம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய தேவைகளை பதிவு செய்தால் கல்வி கடன் வழங்க முன்வரும். கல்வி கடன் பெற்றவர்கள் கடனை திரும்ப செலுத்த வேண்டும். அப்போது தான் மற்ற மாணவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments