பாரத ஸ்டேட் வங்கியின் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க தவறினால் அபராதம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்


பாரத ஸ்டேட் வங்கியின் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க தவறினால் அபராதம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல் | சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இந்த விதிமுறை ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு விதிமுறைகளை நிறைவு செய்ய தவறும் பட்சத்தில் அபராதம் என்ற விதிமுறையை 2012-ல் ஆண்டில் நீக்கியது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது அந்த விதிமுறையை இவ்வங்கி ஏப்ரல் 1 முதல் மீண்டும் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. அத்துடன் ஏ.டி.எம். உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டண விகிதங்களையும் இவ்வங்கி மாற்றி அமைத்து இருக்கிறது. இது குறித்த விவரங்கள் வருமாறு:- பாரத ஸ்டேட் வங்கியின் சேமிப்புக் கணக்குதாரர்கள் மாதம் மூன்று முறை எவ்வித கட்டணமும் இன்றி ரொக்கத்தை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.50 கட்டணம் மற்றும் சேவை வரி விதிக்கப்படும். வணிக நிறுவனங்களுக்கான நடப்புக்கணக்குகளைப் பொறுத்தவரை இந்தக் கட்டணம் ரூ.20,000 வரை இருக்கும். புதிய கட்டண விகிதங்களின்படி, கணக்குகளில் மாதாந்திர சராசரி இருப்பை பராமரிக்கத் தவறும் பட்சத்தில் சேவை வரியுடன் ரூ.100 வரை அபராதம் விதிக்கப்படும். பெருநகரங்களில் ரூ.5,000 மாதாந்திர சராசரி இருப்புத் தொகையில் 75 சதவீதத்திற்கு கீழே இருப்பு வரும் பட்சத்தில் சேவை வரியுடன் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும். 50 சதவீதம் அல்லது அதற்கு கீழ் இருப்பு வந்தால் சேவை வரியுடன் ரூ.50 கட்டணம் விதிக்கப்படும். ஏ.டி.எம். சேவை பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்.களில் ஐந்து முறைக்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். மற்ற ஏ.டி.எம்.களில் மூன்று முறைக்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் ரூ.20 கட்டணம் உண்டு. எனினும் ஒரு கணக்கில் ரூ.25 ஆயிரத்திற்கு மேல் இருப்பு உள்ள பட்சத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கட்டணம் விதிக்கப்பட மாட்டாது. ரூ.1 லட்சத்திற்கு மேல் இருப்பு இருக்கிறது என்றால் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களிலும் கட்டணம் கிடையாது. பாரத ஸ்டேட் வங்கியின் செய்திக் குறிப்பு ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments