10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத்தை மாணவர்கள் தமிழில் எழுத விலக்கு அளிப்பது அரசின் விருப்பம் ஐகோர்ட்டு உத்தரவு


10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத்தை மாணவர்கள் தமிழில் எழுத விலக்கு அளிப்பது அரசின் விருப்பம் ஐகோர்ட்டு உத்தரவு | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் மொழிப்பாடத்தை எழுத விலக்கு கேட்டு பிப்ரவரி 27-ந்தேதிக்கு பின்னர் மனு அளித்தவர்களுக்கு விலக்கு அளிப்பதும், அளிக்காததும் தமிழக அரசின் விருப்பம் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கட்டாய தமிழ் கற்றல் சட்டம் 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, மொழிவாரியான சிறுபான்மை பள்ளிக்கூடங்கள் உள்பட அனைத்து பள்ளிக்கூட்டங்களில் படிக் கும் மாணவர்களுக்கு தமிழ் மொழியை முதல் மொழிப்பாடமாக கண்டிப்பாக கற்பிக்க வேண்டும். இதன்படி, 2006-ம் ஆண்டு 1-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள், 2016-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள். அப்போது, மொழிவாரியான சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களுக்கு தமிழ் பாடம் நடத்தப்படாததால், தங்களது தாய்மொழிகளில் (தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது) மொழிப்பாட தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்க கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, உத்தரவு பெற்றனர். அதேபோல, நடப்பு கல்வியாண்டிலும், மாணவர்கள் பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த மாணவர்களுக்கு தமிழில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கவும், அவர்களது தாய்மொழியில் மொழிப்பாடத்தை எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு பிப்ரவரி 27-ந்தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், மேலும் சில மொழிவாரியான சிறுபான்மை பள்ளிகள், அதில் படிக்கும் மாணவர்கள், சென்னை ஐகோர்ட்டில் புதிதாக வழக்கு தொடர்ந்து, தங்களுக்கும் தமிழில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தமிழில் மொழிப்பாட தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் என்று கொடுத்த கோரிக்கை மனுவை தமிழக அரசு பரிசீலிக்கவில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் வாதிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட கூடுதல் அட்வகேட் ஜெனரல், 'ஐகோர்ட்டு பிப்ரவரி 27-ந்தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 2 ஆயிரத்து 939 மாணவர்களுக்கு தமிழில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து 3-ந்தேதி அரசாணை பிறப்பித்தது. தற்போது வழக்கு தொடர்ந்துள்ள பள்ளிகள் மொழிப்பாடத்தை தமிழில் தங்களது மாணவர்கள் எழுவார்கள் என்று ஏற்கனவே உறுதி அளித்தனர். அதை மீறி அவர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர்' என்று கூறினார். அதற்கு மனுதாரர்கள் வக்கீல்கள், முதலில் உறுதி அளித்தாலும், பின்னர் விலக்கு கேட்டு கோரிக்கை மனு கொடுத்ததாக வக்கீல்கள் வாதிட்டனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'தமிழில் மொழிப்பாட தேர்வை எழுத விலக்கு அளிக்கக்கோரி மொழிவாரியான சிறுபான்மை பள்ளிக்கூடங்கள், மாணவர்கள் பிப்ரவரி 27-ந்தேதிக்கு பின்னர் கோரிக்கை மனுவை கொடுத்திருந்தால், அந்த மனுவை சட்டப்படி பரிசீலித்து, அவர்களுக்கு விலக்கு அளிப்பதும், அளிக்காததும் தமிழக அரசின் விருப்பத்துக்கு உட்பட்டது' என்று கூறினர்.

Comments