SCROL

Thursday, April 13, 2017

விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு


விருதுநகரில் பல் மருத்துவ கல்லூரி எடப்பாடி பழனிசாமி உத்தரவு | விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி தொடங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இதில் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:- 'நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை பெற்றால்தான் எச்செல்வத்தையும் பெறமுடியும்' என்பதன் அடிப்படையில் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார முன்னேற்றத்தை மேம்படுத்த ஜெயலலிதா பாதையில் பயணிக்கும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகர்புற மக்களுக்கு இணையாக கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், கிராமபுறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்துதல், மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், மருத்துவமனைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுதல், புதிய மருத்துவ நிலையங்களை ஆரம்பித்தல் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதுதவிர, அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள், 152 வட்ட மருத்துவமனைகள் மற்றும் 10 வட்டம் சாரா மருத்துவமனைகளில் பல் மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டு, பல் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பல் பராமரிப்பின் அவசியத்தை கிராம மக்களுக்கு உணர்த்தும் வகையில் 44 வட்டம் சாரா மருத்துவ மனைகள் மற்றும் 249 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்துக்கு 3 நாட்கள் பல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஒரு அரசு பல் மருத்துவக்கல்லூரி மட்டுமே சென்னையில் உள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் தான் இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் மற்றும் கூடுதல் கட்டிடம் போன்ற தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. மேலும் ஒரு ஒப்புயர்வு மையமாகவும் தரம் உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை தவிர வேறு எங்கும் அரசு பல் மருத்துவக்கல்லூரி தொடங்கப்படவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தென் தமிழகத்தில் ஒரு புதிய அரசு பல் மருத்துவக்கல்லூரி ரூ.50 கோடி செலவில் தொடங்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந் தேதி ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தென் தமிழகத்தில் உள்ள மக்களின் நீண்டநாள் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி ஒன்று தொடங்கிட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இந்த கல்லூரியில் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்க ஒரு கல்லூரி முதல்வர் பதவியை உருவாக்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கை மூலம் தென் தமிழக மாணவர்கள் அதிக அளவில் பல் மருத்துவம் படிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment