மலைக் கிராமங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


மலைக் கிராமங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | மருத்துவ பட்ட மேற்படிப்பு ஒழுங்குமுறை விதிகளின்படி குக்கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த அரசு மருத்துவரான ராஜேஸ் வில்சன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சோலையார்நகர் என்னும் அடர்ந்த மலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி சிவில்-சர்ஜனாக பணிபுரிந்து வருகிறேன். 2017-18 ஆண்டுக்கான மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வில் பங்கேற்று 824.58 மதிப்பெண் பெற்று, அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 26 ஆயிரத்து 525-வது இடத்தில் உள்ளேன். மருத்துவ பட்ட மேற்படிப்பு ஒழுங்குமுறை விதிகள்-2000 பிரிவு 9(ஏ)ன்படி அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டின்படி குக்கிராமங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் பணிபுரிந்தால் அவர்களுக்கு பணிபுரிந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் 10 சதவீத மதிப்பெண் போனஸாக வழங்க வேண்டும். அதன்படி நான் 3 ஆண்டுகளாக மலைக் கிராமத்தில் பணிபுரிந்து வருவதால் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணோடு எனக்கு 30 சதவீத மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும். ஆனால் 2017-18-ம் ஆண்டுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேட்டில், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை 90 மதிப்பெண்ணுக்கு கணக்கிட்டும், மலைக் கிராமங்கள், குக்கிராமங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்த முன்அனுபவத்துக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண் கூடுதலாக வழங்கி, மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு தரவரிசை வழங்கி, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பாணை சட்டவிரோத மானது. எனவே எனக்கு நீட் தேர்வில் பெற்ற மதிப் பெண்ணோடு கூடுதலாக 30 சதவீத மதிப்பெண் வழங்கினால் ஆயிரத்து 500-க்கு ஆயிரத்து 136.95 மதிப்பெண் கிடைக்கும் பட்சத்தில் சேர்க்கையும் எளிதாக கிடைக்கும். எனவே அரசுப் பணியில் உள்ள எனக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரர் அரசுப் பணியில் உள்ளதால் அவரால் மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக்கு மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும். அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்க முடியாது. தமிழக அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சட்ட மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால், அந்த மசோதா மனுதாரரை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. மேலும் மலைக் கிராமங்கள், குக்கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசுப் பணியில் உள்ள மருத்துவர் களுக்கு பட்ட மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்க முடியாது என தமிழக அரசு மறுக்க முடியாது. ஆகவே மனுதாரருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment