சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் உயர்வு புதிய கட்டணம் இந்த ஆண்டில் அமல்


சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் உயர்வு புதிய கட்டணம் இந்த ஆண்டில் அமல் | | சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய கட்டணம் இந்த கல்வி ஆண்டில் அமலாகிறது. தமிழகத்தில் 557 சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவர்கள் எவ்வளவு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று சுயநிதி கட்டண குழு நிர்ணயம் செய்யும். இதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு இயங்கி வருகிறது. இந்த கட்டணம் தேசிய வாரியம் (என்.பி.ஏ.) அங்கீகாரம் பெற்ற படிப்பு, சாதாரணமாக அங்கீகாரம் பெற்ற படிப்பு என 2 வகைப்படும். தற்போது புதிய கல்வி கட்டணத்தை சுயநிதி என்ஜினீயரிங் கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயித்து வெளியிட்டு உள்ளது. அதன் வருமாறு:- சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு முன்பு ரூ.40 ஆயிரமாக இருந்த கல்வி கட்டணம் தற்போது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டணம் அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் பொருந்தும். சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் தேசிய வாரியம் அங்கீகரிக்கப்பட்ட அரசு ஒதுக்கீட்டு மாணவர்கள் முன்பு ரூ.45 ஆயிரம் செலுத்தி வந்தனர். தற்போது ரூ.55 ஆயிரம் செலுத்த வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரூ.85 ஆயிரம். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் தேசிய வாரியம் அங்கீகரிக்கப்பட்ட படிப்புக்கு ரூ.87 ஆயிரம் செலுத்த வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான என்.பி.ஏ. படிப்புக்கும், என்.பி.ஏ. இல்லாத படிப்புக்கும் தலா ரூ.70 ஆயிரம் என முன்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. புதிய கட்டண உயர்வு இந்த கல்வி ஆண்டு அமல்படுத்தப்படும். தேசிய வாரியத்தில் இருந்து வரும் அதிகாரிகள் என்ஜினீயரிங் கல்லூரிக்கு சென்று ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்வார்கள். அப்போது தரமான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் அந்த துறைக்கு என்.பி.ஏ. அங்கீகாரம் கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment