தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் தாக்கல்


தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் தாக்கல் | நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிப்பதற்கான தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய உள்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் ஆலோசனை மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் அவசர ஆலோசனை மேற்கொண்டு 'நீட்' தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரும் அவசர சட்ட மசோதாவின் வரைவை உடனடியாக மத்திய அரசிடம் தாக்கல் செய்வது என்றும், இதற்காக தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்புவது என்றும் தீர்மானித்தனர். இதனடிப்படையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் டெல்லி சென்றார். பகல் முழுவதும் உள்துறை அமைச்சகத்திலேயே நேரத்தை செலவிட்ட ராதாகிருஷ்ணன், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்து அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் ஒவ்வொன்றாக தாக்கல் செய்தார். பிறகு வெளியில் வந்த டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- கிராமப்புற மாணவர்கள் குறித்த புள்ளிவிவரம் உள்பட மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக தாக்கல் செய்திருக்கிறோம். அவசர சட்டத்தின் வரைவையும் அளித்திருக்கிறோம். இதன் மீது மத்திய அரசு அதிகாரிகள் ஆவன செய்வதாக உறுதி அளித்து இருக்கிறார்கள். கூடிய விரைவில் இது ஒப்புதல் அளிக்கப்பட்டு அவசர சட்டமாக நிறைவேறும். இதற்கான காலக்கெடு குறிப்பிட்டு இத்தனை நாட்கள் என்று சொல்வது கடினம். ஆனால் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவில் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கான வரைவின் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும் என்று உறுதியாக நம்புகிறோம். தமிழக மாணவர்கள் பாதிப்பு அடையக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் அதிகாரிகளாகிய எங்களை இந்த பணிக்காக பணித்து அனுப்பி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ள அவசர சட்ட வரைவில் இடம்பெற்றுள்ள சில முக்கியமான அம்சங்கள் வருமாறு:- தமிழ்நாட்டை பொறுத்தவரை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை ஏன் தனித்துவம் மிக்கது என்றும், பிற மாநிலங்களின் மருத்துவ படிப்புக்கான சேர்க்கையுடன் அதனை எப்படி ஒப்பிட முடியாது என்பதை விளக்கும் வகையில் சில அம்சங்கள் என்னவென்றால், 1. பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் நுழைவுத்தேர்வுகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடத்தப்படுகிறது. 2. தமிழ்நாட்டில் கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெற்று மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற மாணவர்களில் 98 சதவீதம் பேர் மாநில பாட திட்டத்தில் பயின்ற மாணவர்கள் ஆவர். 3. தமிழ்நாட்டில் நீட் தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் 95 சதவீதம் பேர் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்கள். பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய இயலாது 4. இந்திய மருத்துவ கவுன்சில், நீட் தேர்வை நடத்துவதற்கான பாடத்திட்டத்தை வகுப்பதை சி.பி.எஸ்.இ. நிறுவனத்திடம் ஒப்படைத்ததே வேறு பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 5. எந்த பாடத்திட்டத்திலும் உடனடி மாற்றம் செய்ய இயலாது. அடிப்படை வகுப்புகளில் இருந்து இந்த மாற்றத்தை படிப்படியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment