பள்ளிகளில் நடமாடும் புத்தக கண்காட்சி நடத்த அனுமதி 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

பள்ளிகளில் நடமாடும் புத்தக கண்காட்சி நடத்த அனுமதி 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள் | பள்ளிக்கூடங்களில் நடமாடும் புத்தக கண்காட்சி நடத்த விருப்பம் உள்ளவர்கள் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புத்தக கண்காட்சி சட்டசபையில் பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையின்போது பள்ளிக்கல்வி அமைச்சர், அனைத்து அரசு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், பொது அறிவை வளர்க்கவும் பள்ளி அளவில் புத்தகக் கண்காட்சி நடத்துதல் அவசியமாகும். முதல்-அமைச்சர் ஆணைப்படி, இக்கண்காட்சி புத்தக வெளியீட்டாளர்களுடன் இணைந்து சுழற்சி முறையில் பள்ளிகளுக்கே செல்லும் வகையில் நடமாடும் புத்தகக் கண்காட்சிகளாக ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி நடத்திடக் சில நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகள் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி பள்ளியின் தலைமை ஆசிரியர், முதல்வர் மற்றும் புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியில் நடைபெறும். இதற்கான நாள் மற்றும் நேரத்தை அவர்கள் இணைந்து முடிவு செய்வர். நடமாடும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது குறித்து தலைமை ஆசிரியர், முதல்வர் உரிய முன்னறிவிப்பு செய்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களை கலந்துகொள்ள செய்வார். பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் புத்தகக் கண்காட்சியினை அவரவர் தம் சொந்த வாகனங்களில் வைத்தோ அல்லது பள்ளியில் ஏதாவது வசதியான அறைகளில் வைத்தோ நடத்தலாம். இதற்கான இடவசதி, குடிநீர், மின்சாரம் மற்றும் பள்ளிகளிலேயே பதிப்பாளர்கள் இருந்து செயல்படுவதற்கான வசதிகளை தலைமை ஆசிரியர், முதல்வர் செய்துகொடுப்பார். தள்ளுபடி நடமாடும் புத்தகக் கண்காட்சிக்கு பதாகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் தேவையெனில் அவற்றை பதிப்பாளர்களே தயார் செய்துகொள்ள வேண்டும். இந்த நடமாடும் புத்தகக் கண்காட்சிகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது. சாதி, மதம் சார்ந்த பகைமைகளைத் தூண்டும் அல்லது சட்டத்திற்குப் புறம்பாக அமையும் நூல்கள் கண்டிப்பாக இடம்பெறக் கூடாது. மாணவர்களின் அறிவு வளர்ச்சி, சிந்தனைத்திறன், மொழிவளம், படைப்பாற்றல், அறிவியல்நோக்கு, கலை அறிவு, சுயமுன்னேற்றம், வாழ்க்கைத் திறன்கள், நாட்டுப்பற்று போன்றவற்றை ஊக்குவிக்கும் நூல்களை இடம்பெறச் செய்ய வேண்டும். புத்தகங்களின் விலையில் குறைந்தது 10 சதவீதம் தள்ளுபடி அளிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் விரும்பினால் பள்ளிகளுக்கு தேவையான நூல்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். பதிப்பாளர்கள் விரும்பினால் பள்ளிகளுக்கு நூல்களை நன்கொடையாகவும் வழங்கலாம். 30-ந் தேதிக்குள் நடமாடும் புத்தகக் கண்காட்சியில் மேற்கண்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு பங்கேற்க விரும்பும் பதிப்பாளர்கள் மற்றும் நூல் விற்பனையாளர்கள் தங்களின் விருப்பத்தையும், பங்கேற்கவிழையும் மாவட்டங்களையும் கடிதம் வாயிலாக, இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், கல்லூரி சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கு அல்லது de-e-c-h-e-n-n-ai@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 30-ந் தேதி காலை 10 மணிக்குள் அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments