அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு

அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு | மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. முதல்முறையாக மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுகளை நடத்தி வருகிறது. வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். கடந்த நவம்பர், டிசம்பரில் நடந்த செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் நேற்று இணையதளங்களில் வெளியிடப்பட்டதோடு ஒவ்வொரு மாணவருக்கும் எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டது. பொறியியல் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் செமஸ்டர் தேர்வு முடிவுகளை தெரிவிக்கும் முறை தற்போதுதான் முதல் முறையாக அண்ணா பல்கலை.யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்வதற்காகவும் கூடுதல் வசதியாகவும் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.உமா தெரிவித்தார். மற்ற செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகளை இணையதளங்களிலும் (www.annauniv.edu,coe1.annauniv.edu, coe2.annauniv.edu, aucoe.annauniv.edu) அறிந்து கொள்ளலாம்.

Comments