தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் வழங்கும் முறை அறிமுகம் அடுத்த ஆண்டிலிருந்து அமல்படுத்த தொழி்ல்நுட்பக் கல்வித் துறை முடிவு


தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் வழங்கும் முறை அறிமுகம் அடுத்த ஆண்டிலிருந்து அமல்படுத்த தொழி்ல்நுட்பக் கல்வித் துறை முடிவு | தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளில் மறுமதிப்பீடு மற்றும் விடைத்தாள் நகல் வழங்கும் புதிய நடைமுறையை அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் அறிமுகப்படுத்த தொழில்நுட்பக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ், ஆங்கிலம்) மற்றும் கணக்கியல் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. கீழ்நிலை, மேல்நிலை, அதிவேகம் என வெவ்வேறு நிலைகளில் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி, ஆகஸ்டு) நடைபெறும் இத்தேர்வுகளில் சுமார் 3 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்கிறார்கள். இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் அரசு வேலையில் சேர மட்டுமின்றி பொதுவான அரசுப் பணிகளுக்கு இவை கூடுதல் மற்றும் விரும்பத்தக்க தகுதிகளாக கருதப்படுகின்றன. இதைத்தொடர்ந்து, தற்போது தட்டச்சு படிக்கும் ஆர்வம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 3 ஆயிரம் தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வு பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வெழுதும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு மற்றும் டிப்ளமா, பல்கலைக்கழக தேர்வுகளைப் போன்று விடைத்தாள் நகல் பெற முடியாது. மறுமதிப்பீடும் செய்ய இயலாது. (எஸ்எஸ்எல்சி தேர்வில் விடைத்தாள் நகல் பெறலாம்.மறுகூட்டல் செய்யலாம். ஆனால், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியாது) தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு மற்ற தேர்வுகளைப் போன்று விடைத்தாள் நகல் வழங்க வேண்டும், மறுமதிப்பீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்களின் நிர்வாகிகள், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திடம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில், அவர்களின் வேண்டுகோளை ஏற்று தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளில், விடைத்தாள் நகல் வழங்கும் முறை மற்றும் மறுமதிப்பீடு முறையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் பிறப்பித்துள்ளார். விடைத்தாள் நகல் பெற ரூ.150-ம், தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்) தேர்வில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ரூ.400-ம், சுருக்கெழுத்து (தமிழ், ஆங்கிலம்) மற்றும் கணக்கியல் தேர்வு மறுமதிப்பீட்டுக்கு ரூ.500-ம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய முறையானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத் தேர்விலிருந்து அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆர்.பழனிசாமி தெரிவித்தார். இதன்மூலம் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலைப் பெற முடிவதுடன் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கவும் முடியும். மேலும், தங்கள் விடைத்தாள்கள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கின்றன? மதிப்பீட்டில் ஏதேனும் தவறுகள் நேர்ந்துள்ளனவா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ள முடிவதுடன் குறைகள் இருந்தால் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி அடையவும், கிரேடுகளை உயர்த்திக் கொள்ளவும் முடியும்.

Comments