10, 12-ம் வகுப்பு தனித் தேர்வர்கள் எங்கிருந்தும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத் துறை ரூ.2.71 கோடியில் கணினிமயமாகிறது விரைவில் புதிய வசதி அறிமுகம்

10, 12-ம் வகுப்பு தனித் தேர்வர்கள் எங்கிருந்தும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத் துறை ரூ.2.71 கோடியில் கணினிமயமாகிறது விரைவில் புதிய வசதி அறிமுகம் | அரசு தேர்வுத் துறை ரூ.2 கோடியே 71 லட்சம் செலவில் கணினிமயமாக்கப்பட உள்ளது. இதன்மூலம் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் இனி எங்கிருந்தும் பொதுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க லாம். தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு (இஎஸ்எல்சி), இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு கள் (டிடிசி) உட்பட பல்வேறு தேர்வுகளை அரசு தேர்வுத் துறை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு முதல் கூடுதலாக பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப் பட உள்ளது. பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ரெகுலர் முறையில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி மூலமாகவே தேர்வுக்கு விண்ணப் பித்துவிடுகின்றனர். ஆனால், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தனித்தேர்வர்களும் ஆசிரியர் பயிற்சி தனித் தேர்வர்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். என்றாலும் அவர்கள் தங்கள் மாவட்டங்களில் தேர்வுத் துறையால் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்றுதான் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். வீட்டில் இருந்துகொண்டோ அல்லது வெளியில் தனியார் புரவுசிங் மையத்தில் இருந்தோ ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. தனித்தேர்வர்களின் வசதிக்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 2 சேவை மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு சென்று தான் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலையில் தனித் தேர்வர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். தொலைதூரத்தில் இயங்கும் சேவை மையத்துக்கு சென்றாக வேண்டும் என்பதால் வீண் அலைச்சலும் ஏற்படுகிறது. இந்நிலையில், ஒருங்கிணைந்த கணினியமயமாக்கும் திட்டத்தின்கீழ் அரசு தேர்வுத் துறை கணினிமயமாக்கப்பட இருக்கிறது. இதற்காக ரூ.2 கோடியே 71 லட்சம் நிதியை தேர்வுத் துறைக்கு பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கியுள்ளது. கணினியமாக்கும் பணியை தொடர்ந்து ஆன்லைன் வசதியை விரிவுபடுத்த தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம், தனித் தேர்வர்கள் எந்த இடத்தில் இருந்தும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் மட்டுமின்றி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வர்கள். தொழில்நுட்ப தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பயன்பெறுவர் என்று அரசு தேர்வுத் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பேர் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளைத் தனித்தேர்வர்களாக எழுதுகின்றனர். எனவே, இந்த புதிய வசதி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பள்ளிகளில் ரெகுலர் மாணவர்களாக எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்போர் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். தேர்வுக் கட்டணத்தை தலைமை ஆசிரியர்கள் டிமாண்ட் டிராப்ட் மூலமாக தேர்வுத் துறைக்கு செலுத்துகிறார்கள். தேர்வுத்துறை கணினிமயமாக்கப்பட்டதும் தேர்வுக் கட்டணங்களையும் ஆன்லைன் வழியாகவே தலைமை ஆசிரியர்கள் செலுத்த முடியும் என்றும் அந்த அதிகாரி கூறினார். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆன்லைனில் அறியும் வசதியை அரசு தேர்வுத் துறை அண்மையில்தான் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்களுக்கென வழங்கப்பட்டுள்ள பிரத்யேக யூசர் ஐடி, பாஸ்வேர்டு மூலம் ஆன்லைனிலேயே ஒரு நொடியில் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள லாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments