அரையாண்டு தேர்வு முடிந்தும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படவில்லை

அரையாண்டு தேர்வு முடிந்தும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படவில்லை | அரையாண்டு தேர்வு முடிந்தும் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு இன்னும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படவில்லை. ஏழை மாணவர்களால் கல்வியை தொடர்வது சிரமம் என்று கருதி தமிழக அரசு, பாடப்புத்தகங்கள் உள்பட கல்வி கற்கத் தேவையான 14 வகையான பொருட்களை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் ஆகியவவை மட்டும் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி இன்னும் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்தும் இன்னும் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு 6 லட்சத்து 21 ஆயிரத்து 13 பேர்களுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அவர்களில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 416 பேர் மாணவிகள். 2 லட்சத்து 71 ஆயிரத்து 597 பேர் மாணவர்கள். விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படாதது குறித்து சென்னையை சேர்ந்த பிளஸ்-1 மாணவர்கள் சிலர் கூறியதாவது:- 10-வது வகுப்புடன் மாணவர்கள் நின்று விடக்கூடாது என்பதற்காகத்தான் பிளஸ்-1 வகுப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நோக்கம் சரிதான். ஆனால், இந்த ஆண்டு இன்னும் எங்களுக்கு விலையில்லா சைக்கிள் கள் வழங்கப்படவில்லை. இனி வரும் காலங்களில் பிளஸ்-1 வகுப்பு தொடங்குவதற்கு முன்பாகவே மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்க வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்த ஆண்டு விரைவாக சைக்கிள்கள் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் மற்றும் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை கலர் பென்சில் (கிரயான்ஸ்) வழங்கப்படவில்லை. இவைகளை வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் கல்வி சேவை கழகம் 27 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. விரைவில் 5 மாவட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பை மற்றும் 1 முதல் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா காலணிகள் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, "விலையில்லா சைக்கிள் கள், மடிக்கணினி தவிர மற்ற பொருட்கள் தயாராகிக்கொண்டு இருக்கிறது" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment