நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடக்கிறது மத்திய பட்ஜெட் 1-ந்தேதி தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடக்கிறது மத்திய பட்ஜெட் 1-ந்தேதி தாக்கல் | நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை இரு கட்டங்களாக நடக்கிறது. பிப்ரவரி மாதம் 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது. நேற்று இத்தொடர் முடிந்தது. இதையடுத்து நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறவேண்டும். 70 ஆண்டுகளுக்கும் மேலாக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் தொடங்குவதுதான் வாடிக்கையாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முதல் முறையாக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதை ஜனவரி மாத இறுதிக்கு மாற்றியது. இந்த ஆண்டு 2-வது முறையாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாத இறுதியில் தொடங்கப்படுகிறது. குளிர்கால கூட்டத் தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் இதுபற்றி நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி அனந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட பின்பு, பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்குவது குறித்து மத்திய உள்துறை ராஜ்நாத்சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி சபை குழு கூடி ஆலோசனை நடத்தியது. அதில் பட்ஜெட் கூட்டத்தொடரை வருகிற 29-ந்தேதி தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறும். ஜனவரி 29-ந்தேதி தொடங்கும் முதல் கட்டத்தொடர் பிப்ரவரி 9-ந்தேதி முடிவடையும். நிதி மந்திரி 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்வார். ஜனாதிபதி உரை 2-ம் கட்ட கூட்டத் தொடர் மார்ச் 5-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை நடக்கும். பிப்ரவரி 10-ந்தேதி முதல் மார்ச் 4-ந்தேதி வரை நாடாளுமன்றத்துக்கு விடுமுறை ஆகும். வருடத்தின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் வருகிற 29-ந்தேதி உரையாற்றுவார். அதே நாளில் பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். பட்ஜெட் கூட்டத் தொடரின்போது முத்தலாக் சட்ட மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிர ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments