ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளவர்களில் 200 செவிலியர்கள் மார்ச் மாதத்துக்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில்

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளவர்களில் 200 செவிலியர்கள் மார்ச் மாதத்துக்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில் | ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள செவிலியர்களில் 200 பேர் மார்ச் மாதத்துக்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று தமிழக அரசு ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ.7 ஆயிரத்து 700 வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு, செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் அன்பு பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- தேசிய சுகாதாரத் திட்டத்தின்படி புதிதாக செவிலியர்களை நியமிக்கும்போது 2 பணியிடம் ஒப்பந்த அடிப்படையிலும், ஒரு பணியிடம் நிரந்தர அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பணியில் உள்ள செவிலியர்களுக்கு தெரியும். கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு 9 ஆயிரத்து 533 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் ரூ.7 ஆயிரத்து 700 தொகுப்பூதியத்திலும், ஆண்டுக்கு ரூ.500 ஊதிய உயர்வு அடிப்படையிலும் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த செவிலியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன்படி 200 செவிலியர்கள் வருகிற மார்ச் மாதத்திற்குள் பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்யப்படுவர். எஞ்சிய செவிலியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்படுவர். அதேபோன்று இவர்களின் மாதாந்திர ஊதியத்தை உயர்த்துவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து நீதிபதிகள், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள செவிலியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டனர். பின்னர், விசாரணையை 12-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Comments