KALVISOLAI TNPSC

Wednesday, 24 January 2018

அடுத்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி ( 2019 )ஜனவரி மாதம் 4-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 17 நாட்கள் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது பபாசி தலைவர் வைரவன் பேட்டி

அடுத்த ஆண்டு புத்தக கண்காட்சி ஜனவரி மாதம் 4-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 17 நாட்கள் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது பபாசி தலைவர் வைரவன் பேட்டி | அடுத்த ஆண்டு புத்தக கண்காட்சி 17 நாட்கள் நடக்கிறது என பபாசி தலைவர் வைரவன் தெரிவித்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் வைரவன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னை புத்தக கண்காட்சிக்கு தமிழகத்தில் உள்ள வாசகர்கள் சிறப்பான ஆதரவு அளித்து இருக்கிறார்கள். 13½ லட்சம் வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வந்து சுமார் 17 லட்சம் புத்தகங்களை வாங்கி இருக்கிறார்கள். இதன் மதிப்பு ரூ.15½ கோடி ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 3½ லட்சம் வாசகர்கள் வந்து இருக்கின்றனர். கண்காட்சியில் வரலாறு, குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. இளைஞர்கள் சுயமுன்னேற்றம் புத்தகம், போட்டி, தேர்வு தொடர்பான பல்வேறு புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கனடா, நார்வே, இலங்கை, சுவீடன், மலேசியா நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள், வாசகர்கள் பலர் வருகை தருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கூடுதலாக ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து பதிப்பாளர்கள் வந்திருந்தனர். புத்தக கண்காட்சியை நீட்டிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று பல வாசகர்கள் எங்களிடம் கேட்டனர். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அடுத்த ஆண்டு கூடுதல் நாட்கள் புத்தக கண்காட்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதன்படி, அடுத்த ஆண்டு(2019) ஜனவரி மாதம் 4-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 17 நாட்கள் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஆயத்த பணிகளை இப்போதே தொடங்கி இருக்கிறோம். பபாசி சார்பில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய 2 லட்சம் ரூபாயை முதல்-அமைச்சரிடம் வழங்க நேரம் கேட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது, பபாசி செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் ஸ்ரீனிவாசன், துணை தலைவர் மயிலவேலன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a comment