தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது

தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது | தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் முறை அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. பெண்கள் கருத்தரித்ததும் பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதேபோல், தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பான அரசாணை கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், இந்தத் திட்டம் அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டம் பிப்ரவரி மாதம் தொடங்கப்படும். இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக சுகாதாரத் துறை திகழ்கிறது. இதேபோல் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் வழங்கும் முதல் மாநிலமாக தமிழகம் விளங்கும். சென்னை மாநகராட்சியில் மட்டும் தற்போது இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்து கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் ஆன்லைன் மூலம் கொண்டு வரப்படுகிறது. அதனால், பெண்கள் கருத்தரித்த உடன் கண்டிப்பாக பதிவு செய்யும் வகையில் மாற்றப்படுகிறது. கிராமப்புறமாக இருந்தால் கிராம சுகாதார செவிலியரிடமும், நகர்ப்புறமாக இருந்தால் நகர்ப்புற சுகாதார செவிலியரிடம் கருத்தரித்ததை பதிவு செய்ய வேண்டும். அவர்கள் பதிவு எண் கொடுப்பார்கள். குழந்தை பிறந்தவுடன் அந்த எண்ணை கொண்டு பதிவு செய்து ஆன்லைனில் பிறப்பு சான்றிதழைப் பெறலாம். இதேபோல் இறப்பையும் பதிவு செய்து ஆன்லைன் மூலம் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுவதற்காக பொதுமக்கள் சிரமப்பட வேண்டியதில்லை. வீட்டிலோ, பிரவுசிங் சென்டரிலோ, இ-சேவை மையத்திலோ எங்கு வேண்டுமானாலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பிரிண்ட் எடுத்துக் கொள்ள முடியும். கருத்தரித்தவுடன் பதிவு செய்வதால், எவ்வளவு கருக்கலைப்பு நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம். கருக்கலைப்பைத் தடுக்கவும் முடியும். தவறான ஆவணங்களைக் கொடுத்து போலிச் சான்றிதழ்களைப் பெறுவதைத் தடுக்கலாம். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் வழங்குவதால் துல்லியமான புள்ளிவிவரங்கள் அரசுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment