விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக திண்டுக்கல் ஆசிரியர் கைது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் ஒருவர் கைது; தேர்வு முறைகேட்டில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் சின்னசாமி கைது செய்யப்பட்டார். அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் திண்டுக்கல் பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 1058 விரிவுரையாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் உமா என்பவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து இடைத்தரகர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பல லட்சம் பணத்தை பெற்று கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்றதாக இணையதளத்தில் பதிவேற்றம் ெசய்து மோசடி செய்துள்ளதாக புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்திய போது பணத்தை பெற்று கொண்டு குறைந்த மதிப்பெண்கள் பெற்ற நபர்களை அதிக மதிப்பெண்கள் பெற்றதாக இணையதளத்தில் வெளியிட்டு மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடியில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் ஈடுபட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேர்வுத்தாள் திருத்தம் செய்த ஊழியர்கள், குறுக்கு வழியில் பணி பெற முயற்சித்தவர்கள் உட்பட 156 பேர் மீது 417 பிரிவின் கீழ் மோசடியில் ஈடுபடுதல், 465 மற்றும் 468 பிரிவுகளின் கீழ் போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்டமாக முகப்பேர் பகுதியை ேசர்ந்த கால் டாக்ஸி டிரைவர் கணேசன், மதுரவாயலை சேர்ந்த ஷேக் தாவூத் நாசர்(32), கொளத்தூரை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ரகுபதி(34), அயனாவரத்தை சேர்ந்த சுரேஷ்பால் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சின்னச்சாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment