KALVISOLAI TNPSC

Sunday, 28 January 2018

CURRENT AFFAIRS 2018-01-13-19 | கடந்து வந்த பாதை | ஜனவரி 13- 19 | முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

கடந்து வந்த பாதை | ஜனவரி 13- 19 | 
 • சென்னையில் உள்ள முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் வீடு, டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். (ஜனவரி 13)
 • தமிழகத்தில் டெல்டா பயிர்களை காப்பாற்ற காவிரியில் உடனடியாக 7 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுமாறு கோரி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். (ஜனவரி 13)
 • சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மோதலில் சமரச முயற்சியில் பார் கவுன்சில் இறங்கியது. இதுதொடர்பாக 7 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. (ஜனவரி 13)
 • அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் மீது அவதூறு கருத்து கூறினார் என்ற குற்றச்சாட்டால் டிரம்புக்கு எதிராக ஆப்பிரிக்க நாடுகள் போர்க்கொடி தூக்கின. அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவை வலியுறுத்தின. (ஜனவரி 13)
 • எழுத்தாளர் ஞாநி சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டது. ஞாநி மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். (ஜனவரி 15)
 • இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நேட்டன்யாஹூ, பிரதமர் மோடி முன்னிலையில் இரு நாடுகள் இடையே வேளாண்மை, விமானப் போக்குவரத்து உள்பட 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. (ஜனவரி 15)
 • காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீது இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். (ஜனவரி 15)
 • நியூசிலாந்தின் மான்கானுய்யில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. (ஜனவரி 15)
 • ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 38 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 90 பேர் படுகாயம் அடைந்தனர். (ஜனவரி 15)
 • டிசம்பர் மாதத்தில் கம்பி, தகடு உள்ளிட்ட உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி 9.64 லட்சம் டன்னாக உயர்ந்தது. (ஜனவரி 15)
 • புனிதப் பயணம் மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. (ஜனவரி 16)
 • உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 571 காளைகள் சீறிப் பாய்ந்தன. அவை முட்டியதில் 40 வீரர்கள் காயமடைந்தனர். (ஜனவரி 16)
 • நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். (ஜனவரி 16)
 • டிசம்பர் மாதத்தில் சரக்குகள் ஏற்றுமதி 12 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 1488 கோடி டாலராக அதி கரித்தது. (ஜனவரி 16)
 • உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். (ஜனவரி 16)
 • ஜூனியர் உலகக் கோப்பை காலிறுதிக்கு இந்தியா முன்னேற்றம் : ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாப்புவா நியூ கினியாவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. (ஜனவரி 16)
 • 4 நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி சந்திப்பு : தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய 4 சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சந்தித்து உரையாடினார். ஆனால், பிரச்சினை இன்னும் தீரவில்லை என்று அட்டார்னி ஜெனரல் கூறினார். (ஜனவரி 16)
 • கடந்த 2017-ம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் மத்திய அரசுக்கு ரூ. 1.75 லட்சம் கோடி அன்னியச் செலாவணி வருவாய் கிடைத்தது. (ஜனவரி 17)
 • ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சுகோய் போர் விமானத்தில் பறந்தார். தனது 45 நிமிட போர் விமான பயணம் அற்புதமானது என்றும் அவர் குறிப்பிட்டார். (ஜனவரி 17)
 • திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 18-ம் தேதியும், நாகாலாந்து, மேகாலயாவில் 27-ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே. ஜோதி அறிவித்தார். (ஜனவரி 18)
 • 'பத்மாவத்' திரைப்படத்துக்கு ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் விதித்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. (ஜனவரி 18)
 • அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டுக் கண்டம் சென்று தாக்கும் திறன் வாய்ந்த 'அக்னி-5' ஏவுகணை ஒடிசா கடற்பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. (ஜனவரி 18)
 • காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் சுரேஷ் குண்டு பாய்ந்து பலியானார். (ஜனவரி 18)
 • எதிர்வரும் 2018- 2019 மத்திய பட்ஜெட்டில் அரசுப் பங்குகள் விற்பனை இலக்கு கணிசமாக அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. (ஜனவரி 18)
 • டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மேலும் 29 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. (ஜனவரி 18)
 • கடந்த ஆண்டின் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தேர்வு செய்தது. ஐ.சி.சி. கனவு டெஸ்ட், ஒருநாள் போட்டி அணிகளின் கேப்டனாகவும் விராட் கோலி அறிவிக்கப்பட்டார். (ஜனவரி 18)
 • மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தையும் சேர்த்து கேள்வித்தாள்களைத் தயாரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார். (ஜனவரி 18)
 • தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 3-ல் இருந்து ரூ. 5 ஆக அதிகரிக்கப்பட்டது. (ஜனவரி 19)

No comments:

Post a comment