சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட் 19-ந் தேதி தாக்கல்?


சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட் 19-ந் தேதி தாக்கல்? | சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட் 19-ந் தேதி தாக்கல் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபையில் கடந்த ஜனவரி 8-ந் தேதியன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல். ஏ.க்கள் உரையாற்றினார்கள். எம்.எல்.ஏ.க்களுக்கு பதிலளித்து ஜனவரி 12-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதைத் தொடர்ந்து மறு தேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசின் பட்ஜெட் கடந்த 1-ந் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட 15 நாட்களுக்கு மேல் மாநில அரசு பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்படலாம். அந்த வகையில் தமிழக அரசின் பட்ஜெட் இம்மாதம் 4-வது வாரத்தில் ஒரு நாளில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக சட்டசபை வட்டாரம் தெரிவித்தது. அனேகமாக 19-ந் தேதியன்று பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 19-ந் தேதியன்று தொடங்கும் என்று தெரிகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஒரு நாள் இடை வெளி விடப்பட்டு, பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடத்தப்படும். 4 நாட்கள் நடத்தப்படும் விவாதத்துக்கு பிறகு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசுவார். அதைத் தொடர்ந்து அரசு துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படும். பொதுவாக 25 நாட்களுக்கு மேலாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் என்று தெரிகிறது.

Comments