KALVISOLAI TNPSC

Friday, 24 April 2020

சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழுஊரடங்கு: இபிஎஸ் உத்தரவு

சென்னை, மதுரை, கோவை, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ததில், கிராமப்புரங்களில் இந்த நோய்த் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளபோதிலும், நகர்ப்புரங்களில் குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதன்படி, சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சிப் பகுதிகளில், ஏப்.,26ம் தேதி காலை 6 மணி முதல் ஏப்.,29 இரவு 9 மணிவரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும். 

அதேபோல், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஏப்.,26 காலை 6 மணி முதல் ஏப்.,28 இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும்.அந்த காலக்கட்டத்தில், மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அத்யாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச்செயலகம், சுகாதாரம், குடும்பநலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேவையான பணியாளர்களுடன் மட்டும் செயல்படும். இதர மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அம்மா உணவகங்கள், ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல் செயல்படும். உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். மேலும், முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி புரிவோருக்கு அனுமதி வழங்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் செயல்படும். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். 

காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம். பிற நிறுவனங்கள் செயல்படாது. மேற்குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர பிற இடங்களில் அல்லது பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிகள் தொடரும். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a comment