KALVISOLAI TNPSC

Tuesday, 2 June 2020

KALVISOLAI CURRENT AFFAIRS - FEBRUARY 2020 - கல்விச்சோலை நடப்பு நிகழ்வுகள் - பிப்ரவரி 2020

KALVISOLAI CURRENT AFFAIRS - FEBRUARY 2020
பிப்ரவரி 1: 2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நிதியாண்டில் கல்விக்காக ரூ. 99,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கல்வித் துறையில் அந்நிய நேரடி முதலீடும் அறிமுகமாகவிருக்கிறது. தேசிய காவல்துறை பல்கலைக்கழகம், தேசிய தடவியல் பல்கலைக்கழகம் ஆகியவை புதிதாகத் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2: ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை எட்டாம் முறையாக ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கொவிச் கைப்பற்றியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் போட்டி இது. விம்பிள்டன், பிரஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் ஆகியவை மற்ற மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகள்.

பிப்ரவரி 5: உலகளாவிய புதுமைக் கொள்கை மையம், சர்வதேச அறிவுசார் சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற 53 நாடுகளில், நான்கு இடங்கள் பின்னுக்குச் சென்ற இந்தியா 40-ம் இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை முறையே முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

பிப்ரவரி 5: கர்நாடக மாநில அரசு, மக்கள் சேவைத் (ஜனசேவகா) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசின் சேவைகளை மக்கள் வீட்டிலிருந்தே பெற முடியும் என அறிவித்துள்ளது கர்நாடக அரசு. சில சேவைகளை டிஜிட்டல் சேவைகளாக மாற்றவும் அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

பிப்ரவரி 5: 2014 முதல் 2018 வரை, நாட்டில் 233 பேர் மீது தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி மாநிலங்களவையில் தெரிவித்தார். அதிகபட்சமாக அசாம், ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் 37 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. 2018-ல் 70 பேர், 2017-ல் 51 பேர், 2016-ல் 35 பேர், 2015-ல் 30 பேர், 2014-ல் 47 பேர் மீது தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை மத்தியப் பிரதேச அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா அரசியலமைப்பின் மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அம்மாநில அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசமும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பிப்ரவரி 5: தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 2017-18-ம் ஆண்டின் தொழிலாளர் வேலைவாய்ப்பு சதவீதம் 36.9 ஆகவும், வேலைவாய்ப்பின்மை சதவீதம் 6.1 ஆகவும் இருப்பதாகத் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 6: ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல் அமைச்சர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகிய இருவர் மீதும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (PSA) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், எந்தவொரு விசாரணையும் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் காவலில் வைக்க அனுமதிக்கிறது. எதிர்க் கட்சிகள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிப்ரவரி 6: ஆண்டுதோறும் கடலோரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 48 மணிநேரம் நடைபெறும் ‘சாகர் கவச் ஆப்ரேஷன்’ தமிழ்நாட்டில் நடைபெற்றது. தரைமார்க்கமாகவும், கடல்மார்க்கவும் தீவிரவாதிகள் ஊடுருவலை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான முன்னோட்டமாக இந்த ‘சாகர் கவச்’ ஒத்திகை ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

பிப்ரவரி 11: டெல்லியில் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 62 இடங்களில் வெற்றிபெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. பா.ஜ.க. 8 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து மூன்றாம் முறையாக டெல்லி முதல்வராகப் (பிப். 16 அன்று) பதவியேற்றுள்ளார்.

பிப்ரவரி 13: அரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்களின் பங்களிப்பு இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மீது குற்ற வழக்குகள் ஏதாவது நிலுவையில் இருந்தால், அவற்றைப் பற்றிய தகவல்களைத் தங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் கட்சிகள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிப்ரவரி 13: தேபாஷிஷ் பண்டா, புதிய நிதிச் செயலாளராக மத்திய நியமனக் குழுவால் நியமிக்கப்பட்டுள்ளார். நிதிச் செயலராக இருந்த ராஜிவ் குமார் ஓய்வுபெறுவதால் புதிய செயலராக தேபாஷிஷ் பண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 13: பிரிட்டனின் புதிய நிதி அமைச்சராக ரிஷி சுனக் பெயரை அறிவித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன். சஜித் ஜாவித் ராஜினாமா செய்ததால், புதிய நிதியமைச்சராக ரிஷி சுனக் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மருமகன்.

பிப்ரவரி 14: போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபலோ டிசோசா அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு மூன்று நாட்கள் வருகைதந்தார். இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

பிப்ரவரி 14: தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல்செய்தார். அவர் தாக்கல் செய்திருக்கும் பத்தாம் பட்ஜெட் இது. 2018-19 நிதியாண்டில், 8.17 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2019-20-ல், 7.27 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 34,181 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2017-ல் தமிழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்ததால், அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று திமுக உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தது. தகுதிநீக்கம் தொடர்பான இந்த வழக்கில், அவைத்தலைவர் தனபால் முடிவெடுக்கலாம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை முடித்துவைத்தது.

பிப்ரவரி 15: 2019-20-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், பூமியைக் கண்காணிக்கும் 10 செயற்கைக் கோள்களை 2020-21-ம் ஆண்டில் விண்ணில் செலுத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் செயற்கைக்கோளாக ‘ஜிசாட்-1’ இடம் பெற்றுள்ளது. 18 தகவல் தொடர்ப்பு செயற்கைக் கோள்கள், 19 தேசிய பூமி கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள், 8 கடல் கண்காணிக்கும் செயற்கைக் கோள்கள் தற்போது சேவையில் இருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 17: குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற ஐ.நா.வின் 13-ம் வலசை போகும் பறவை இனங்கள் மாநாட்டில், ‘2020-இந்தியப் பறவைகளின் நிலை’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், ஆராய்ச்சிக்கு எடுத்துகொள்ளப்பட்ட 867 பறவை இனங்களுமே அருகி வருவது தெரியவந்துள்ளது. இவற்றில், 101 பறவையினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

பிப்ரவரி 18: உலகின் அதிகமாகப் பேசப்படும் 7,111 வாழும் மொழிகளின் ஆண்டறிக்கையை ‘எத்னோலாக்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உலகில் 113.2 கோடிப் பேர் பேசும் மொழியாக ஆங்கிலம் முதலிடத்திலும், 111.7 கோடிப் பேர் பேசும் மொழியாக மண்டாரின் (சீன மொழி) இரண்டாம் இடத்திலும், 61.5 கோடிப் பேர் பேசும் மொழியாக இந்தி மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. 22.8 கோடிப் பேர் பேசும் வங்க மொழி ஏழாம் இடத்திலும், 8.1 கோடிப் பேர் பேசும் தமிழ் மொழி பத்தொன்பதாம் இடத்திலும் இருக்கின்றன.

பிப்ரவரி 18: டைம்ஸ் உயர் கல்வி தரவரிசைப் பட்டியல் லண்டனில் வெளியாகியுள்ளது. ‘வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பல்கலைக்கழகத் தரவரிசை 2020’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்தப் பட்டியலில், முதல் 100 இடங்களில், இந்தியாவின் 11 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. 47 நாடுகளைச் சேர்ந்த 533 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில், 16-ம் இடத்தை பெங்ளூரு இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 56 இந்தியப் பல்கலைக்கழங்கள் இடம்பெற்றுள்ளன.

பிப்ரவரி 18: லாரியஸ் விளையாட்டுத் தருண விருது (2000-2020) சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் இந்த விருது விழா நடைபெற்றது. 2011-ல், இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றபோது, அணியினர் சச்சினைத் தோளில் தூக்கி மைதானத்தை வலம்வந்து வெற்றியைக் கொண்டாடினர். இந்தத் தருணத்தைச் சிறந்த விளையாட்டுத் தருணமாக லாரியஸ் தேர்ந்தெடுத்துள்ளது.

பிப்ரவரி 18: வியாழன் கோளின் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகளில் 0.25 சதவீதம் நீர் இருப்பதாக 2011-ல் நாசா அனுப்பிய ஜுனோ (Juno) திட்டத்தின் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ‘நேச்சர் அஸ்ட்ரானமி’ இதழில் வெளியாகியிருக்கும் இந்த ஆய்வு முடிவுகளால், முன்னர் நினைத்ததைவிட வியாழனில் அதிக நீர் இருப்பது தெரியவந்துள்ளது.

பிப்ரவரி 20: மாற்று மருத்துவப் படிப்புகளான ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோ (AYUSH) ஆகியவற்றின் இளநிலை மாணவர் சேர்க்கைக்கும் நீட் நுழைவுத் தேர்வு அவசியம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிப்ரவரி 20: காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக (PSAZ) அறிவிக்கும் மசோதாவைத் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிமுகம் செய்தார். இந்த மசோதாவில், திருச்சி, அரியலூர், கரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் இணைக்கப்படவில்லை.

பிப்ரவரி 23: நாட்டின் தலைநகர் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் மூன்று நாட்கள் நடைபெற்ற வன்முறையில் 42 பேர் பலியாகியிருக்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அமைதிவழியில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை நாடு முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த வன்முறை தொடர்பாக 148 குற்றப்பத்திரிகைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 630 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 23: சர்வதேச நாணய நிதியத்தின் அக்டோபர் உலகப் பொருளாதாரப் பார்வையின்படி, உலகின் ஐந்தாம் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகியவை உலகின் முதல் நான்கு பெரிய பொருளாதார நாடுகளாக இருக்கின்றன.

பிப்ரவரி 25: 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தத் தேர்தல், 2020 ஏப்ரலில் ஓய்வுபெறும் 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர் களின் இடங்களுக்கு நடைபெற விருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 26 அன்றே நடைபெறுகிறது.

பிப்ரவரி 25: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். இந்த வருகையின்போது, ரூ. 21,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இரண்டு நாடுகளுக்கிடையில் கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பிப்ரவரி 25: எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 91. ஜனநாயக ஆதரவு இயக்கமான ‘அரேபிய வசந்த’ புரட்சியால் வெளியேற்றப்படும்வரை, முப்பது ஆண்டுகள் அவர் எகிப்து அதிபராகப் பதவிவகித்துள்ளார்.

பிப்ரவரி 26: ‘2020 ஹுருன் உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. உலகச் செல்வந்தர்களின் இந்தப் பட்டியலில், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் முதல் இடத்தில் உள்ளார். பிரெஞ்சு ‘எல்விஎம்எச்’ நிறுவனத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் இரண்டாம் இடத்திலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் ஒன்பதாம் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.

பிப்ரவரி 26: ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதாகும் மரியா ஷரபோவா, ஐந்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட தீவிரமான காயங்களால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 27: மியான்மர் அதிபர் உ வின் மைன்ட் (U Win Myint) இந்தியாவுக்கு நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக வருகை தந்தார். இந்த வருகையின்போது, இந்தியா - மியான்மர் இடையே ஆற்றல், உள்புற கட்டமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

No comments:

Post a comment