KALVISOLAI TNPSC

Friday, 30 September 2016

செங்கோல் வீழும்; எழுதுகோல் வாழும்!

செங்கோல் வீழும்; எழுதுகோல் வாழும்!

போற்றுதலுக்குரியவர்களை வரலாறு பொன்னெழுத்துகளால் பொறித்து வைத்திருப்பதைப் போலவே, தூற்றுதலுக்குரியவர்களையும் தன் முற்றத்தில் மொட்டைத்தூண்களைப் போல் நிற்க வைத்துள்ளது.கற்றவர்களையும், மற்றவர்க்காய் வாழும் குணம் பெற்றவர்களையும் வாரிக் கொடுத்த வள்ளல்களையும், வாய்மை மிகுந்த அறிஞர்களையும் வரலாறெனும் கண்ணாடி வருங்காலத் தலைமுறைக்குக் காட்டுவது போலவே, கொடுங்கோலர்களையும், குணக் கேடர்களையும், மக்களை வஞ்சித்த மாபாவிகளையும், அதிகாரத்தில் இருந்து கொண்டு அராஜகம் செய்த அநீதியாளர்களையும் அடுத்துவரும் தலைமுறைகளுக்கு அடையாளம் காட்டுகிறது.பதவியை சதமெனப் பகற்கனவுகண்டு, அறிஞர்களின் தகுதியறியாமல், அவர்களை அவமதித்தவர்கள் காலங்காலமாய்த் தூற்றுதலுக்கு ஆளாகிவிடுகின்றனர். அதனால்தான் வான்புகழ் வள்ளுவர்,

வில்லேர் உழவர் பகைகொளினும்

கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை

 என்று எச்சரிக்கிறார்.

கம்பனை அவமதித்தான் குலோத்துங்கச் சோழன். கடற்கடந்த பேரரசின் அதிபதியவனுக்கு, கவிச்சக்கரவர்த்தி ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. சோழ அரசவையிலிருந்து வெளியேறிய கம்பனிடமிருந்து வெடித்து வந்ததொரு வெண்பா.

""மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ

உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்தும் உண்டோ - உண்டோ

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு''

சோழனின் அரசாங்கம் சுவடின்றி அழிந்தபின்னும் சொல்லரசன் கம்பனின் வெண்பா சுடர்வீசி நிற்கிறது. செங்கோல்கள் வீழ்ந்த பிறகும், எழுதுகோல்கள் நித்தியமாய் நிற்கின்றன.அரண்மனையும், ஆடம்பர வாழ்வும், ஆணவப்போதையை அதிகம் ஊட்டும்போது, எதிரில் வருவோர் யாவரையும் ஏளனமாய்க் கருதினால், இழிவு சுமக்கநேரும் என்று எச்சரித்து உச்சரிக்கின்றன இறவாத பாடல்கள் சில.... உச்சமெனப்பட்ட அரசனின் அதிகாரத்தைத் துச்சமெனக் கருதிய தூய புலவர்கள் வரலாறுகளில்வாழ்கின்றனர்.

"நாமார்க்கும் குடியல்லோம்,

நமனை அஞ்சோம்'

- என்றார் திருநாவுக்கரசர்.

சிறு பதவிகளில் இருப்போர்கூட தங்கள் செம்மாந்த அதிகாரத்தை நிலைநாட்ட, தனக்குக் கீழுள்ளவர்களை அவமதிப்பதையும், அலைக்கழிப்பதையும் பல இடங்களில் பார்க்கமுடிகிறது.நம் அதிகாரத்தைக் காட்டி விட்டோம் என்கிற அற்ப இன்பத்தை அவர்கள் அடையலாம். ஆனால், சொல்லேருழவர்களின் சூட்டுக்கு ஆளானால், அது காலங் காலமாய் வடுவாய் நின்று வருத்தும் என்பதைமமதை மனிதர்கள் அறியத் தவறுகின்றனர்.ஒரு முறை, மக்கள் கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் எழுதி முடித்த படமொன்றிற்கு ஊதியம் பெறுவதற்காக தயாரிப்பாளரைப் பார்க்கச் சென்றுள்ளார்.தருக்கும், செருக்கும் கொண்ட அந்தத் தயாரிப்பாளர், பட்டுக்கோட்டையாரை ""வெளியே நில்லுங்கள்' என்று கூறுகிறார்.... பாட்டுக்கோட்டையோ, தன்பாட்டையே சூட்டுக் கோலாக்கிச் சுடச் சுட எழுதினார்,

தாயால் பிறந்தேன், தமிழால்

அறிவுபெற்றேன்

நாயே நேற்றுன்னை நடுத்தெருவில்

சந்தித்தேன்

நீ யார் என்னை நில்லென்று சொல்ல

அதிகாரங்களுக்கு அடங்காமல், மமதையாளர்கள்முன் மயங்காமல், அறிவு நாணயத்தோடு வாழ்ந்த அறிஞர் பெருமக்கள், சிறுமை கண்ட இடங்களிலெல்லாம் சிங்கமெனப் பொங்கியுள்ளனர்.உன் அதிகாரம், ஒரு கவிதை இயற்றுமாறுஎனக்குக் கட்டளையிட முடியாது. (Your Highness cannot command me to compose a poem)  என்றான் ஓர் ஆங்கிலக் கவிஞன்.அதிகாரத்தைப் பயன்படுத்தி அநீதிகளை அரங்கேற்றுவோர், சமகாலத்தில் மட்டுமல்ல வருங்காலத்திலும் தூற்றப்படுவர்."அநீதி இழைக்கப்பட்டவருக்கும், இறைவனுக்கும் இடையே எந்தத் திரையுமில்லை' என்று எச்சரித்தார்கள் நபிகள் நாயகம். அவனது கண்ணீர் மிகு பிரார்த்தனை எத்தகைய அதிகாரங்களையும் வீழ்த்திவிட வல்லது.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத

கண்ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை

அக்காலத்தில் அநியாயக்காரர்கள் மீது புலவர்கள் அறம்பாடும் வழக்கம் இருந்ததையும், அறம் பாடப்பட்டவர்கள் அழிந்தொழிந்ததையும் அறிய முடிகிறது.

அதிகாரத்தால் அராஜகம் செய்வோரின் வாழ்வு எப்படிஇருக்கும் என்பதை உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் நறுக்கு ஒன்று நயம்பட விளக்கும்.

""அதிகாரி வீட்டு நாய் செத்தது

அனைவரும் வந்தார்கள்

அதிகாரியே செத்தார்

ஒரு நாயும் வரவில்லை''

ஓய்வில்லா அடக்குமுறையை செலுத்தியவர்கள், ஓயும்போது நாயும் வராது என்பதற்கு இந்த நறுக்கு ஒருநல்ல சான்று.அதிகாரங்களில் பெரிய அதிகாரம் ஆட்சியதிகாரம். ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசன், மக்களை விட மேம்பட்டவன். அவன் சராசரி குடிமக்களுக்குச் சமமானவன் இல்லை என்பது உலகளாவிய அளவில் உள்ள உளப்பான்மை.அரசகுடியில் பிறந்து குடிமக்கள் காப்பியம் எழுதியபுரட்சிக்கவி இளங்கோ, ஒரு அயல்நாட்டு (சோழநாட்டு) குடிமகனுக்கு தான் அநீதி இழைத்ததை, அவன் மனைவியின் ஆவேச மிகுவாதத்திறத்தால் உணர்ந்து -

மன்பதைக் காக்கும் தென்புலங் காவல்

என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுள்

என்று கூறி உயிர் துறந்ததையும், அவன் துணைவி கோப்பெருந்தேவி, "கணவனை இழந்தோர்க்குக்காட்டுவதொன்றில்' என்று கதறி, அவனோடு உயிர்விட்டதையும், காப்பியத்தில் காட்சிப்படுத்தி, ஆட்சியாளர்களுக்கு படிப்பினை தருகிறார்.இந்திய தேசத்திற்கு கலீஃபா உமரின் ஆட்சி போன்ற ஆட்சி அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் தேசத்தந்தை அண்ணல் காந்தி.கலீஃபா உமர், எகிப்து நாட்டிற்கு அம்ருபின் ஆஸ் என்ற புகழ்பெற்ற நபித்தோழரை ஆளுநராக நியமித்திருந்தார்கள். ஒருமுறை ஆளுநரின் மகன் அதிகாரஆணவத்தோடு எகிப்து குடிமகன் ஒருவரை சாட்டையால்அடித்துவிட்டார்.அடிபட்ட எகிப்தியர், தலைநகர் மதீனா சென்று குடியரசுத் தலைவர் கலீஃபா

உமரிடம் நடந்ததை முறையிடுகிறார்.கலீஃபா உமர், ஆளுநர் அம்ருபின் ஆஸ் மற்றும் அவரது மகன் இருவரையும் தன் அவைக்கு வரவழைத்து அடிபட்ட எகிப்தியர் கையில் சாட்டையைக் கொடுத்து, ஆளுநரின் மகனை அடிக்கச் செய்தார்.ஆத்திரம் தீர அவர் அடித்து முடித்ததும், ஆளுநரிடம், "மக்களை அவர்களின் தாய்மார்கள் சுதந்திரமாகப் பெற்றெடுத்திருக்க எப்போது நீங்கள் அவர்களை அடிமைப்படுத்த ஆரம்பித்தீர்கள்' என்று சொல்லால் சுடுகணை தொடுத்தார்.பணக்காரர்களோடு மட்டும் தனித்தொடர்பு வைத்துக்கொண்டு தானும் பணக்காரத் தன்மையோடு நடந்த ஓர்ஆளுநரை தலைநகருக்குத் திரும்ப அழைத்து, வனாந்தரங்களில் ஆடுகளை மேய்த்து வருமாறு கலீஃபாஉமர் ஆணையிட்டார். ஆடு மேய்த்து பக்குவம் பெற்றதும், மீண்டும் அவரை ஆளுநராக்கினார்.இன்று எவருக்கும் பதில்சொல்ல அவசியமில்லாத எஜமானத்துவத்தோடு இருக்கும் யாவரும், மறுமையில் தனது ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்ல வேண்டிய அடிமையாக இறைவன் முன் நிற்கப்போகும் நிலையை எண்ணி செயல்பட வேண்டும் என்பது இஸ்லாமின் கோட்பாடு.நபிகள் நாயகம் ஒரு பணிப்பெண்ணை ஒரு பொருள் வாங்கிவர அனுப்பினார்கள். அப்பெண்ணோ விளையாட்டுத்தனத்தால் வழியில் வேடிக்கைப் பார்த்து விட்டுவெகு தாமதமாய் வந்தாள். அவள் வரும்போது நபிகள் கையில் பல்துலக்க உதவும் மிஸ்வாக் குச்சி இருந்தது.அப்பெண்ணிடம் அண்ணல் நபி, "மறுமை நாளின் கேள்விக்கணக்கு பற்றிய அச்சம் மட்டும் இல்லாதிருப்பின், உன்னை இந்தக் குச்சியால் அடித்திருப்பேன்' என்றார்கள்.பணியாளை எஜமான் என்ன கொடுமைக்கும் உள்ளாக்கலாம் என்ற காலத்தில், பல் துலக்கும் குச்சியால் பணியாளை அடிப்பதையும் இறையச்சம் தடுக்கிறது, நபிகளுக்கு.சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் உள்ளமுதலாளிகள் சிந்திக்க வேண்டிய செய்தி இது.அபூ மஸ்வூத் என்ற தோழர், தனது பணியாளரைஅடிப்பதைக் கண்ணுற்ற நபிகள் நாயகம், "இன்று அவர்மீது உமக்கிருக்கும் ஆதிக்கத்தைவிட பன்மடங்கு ஆதிக்கம் உன்மீது இறைவனுக்கு இருக்கிறது' என்றார்கள்.இறையச்சத்தால் நடுநடுங்கிய அபூ மஸ்வூத் உடனடியாக அந்த அடிமைப் பணியாளரை விடுதலைசெய்தார்கள்...ஓங்கிய உயர்விலும் பாங்குற நடந்த பண்பாளர்களை உலகம் போற்றிகொண்டே இருக்கிறது.அதிகாரத்தில் இருக்கையில் அகங்காரத்தைக்காட்டியவர்களை அகிலம் தூற்றிக் கொண்டே இருக்கிறது.உலகம் தூற்றும் வாழ்வு வாழோம்; போற்றும் வாழ்வு வாழ்வோம்!

No comments:

Post a comment