KALVISOLAI TNPSC

Friday, 30 September 2016

மூலிகை மந்திரம்: துத்தி

மூலிகை மந்திரம்: துத்தி

அழகான மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டிருக்கும் துத்தி, 3 அடி உயரம் வரை வளரக்கூடிய ஒரு குறுஞ்செடியாகும். இதன் இலைகளின் அடிப்புறம் சற்று வெண்மையாக இருக்கும். துத்தியில் 29 வகைகள் இருப்பினும் பணியாரத்துத்திதான் பெரும்பாலும் கீரையாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைகள், விதைகள், பட்டை, வேர் என துத்தியின் எல்லா பாகங்களும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. துத்தி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி மூலநோய், பவுத்திரம், ஆசனக்கடுப்பு இவற்றுக்கு மேல் வைத்துக் கட்டுவதோடு ஒத்தடம் கொடுக்கவும் பயன்படுத்துவார்கள். துத்தி இலையைச் சாறு பிழிந்து, ஏதேனும் மாவு சேர்த்து களி போலக் கிண்டி, பழுக்காத கட்டிகளின் மேல் வைத்துக் கட்டி வைத்தால் கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.துத்திக் கீரையை எவ்வகையிலேனும் உணவாக எடுத்துக் கொள்வதால் கருமேகம் என்கிற உடல் கருமை, உடல் சூடு, உள்ளுறுப்புகளின் அனல் விலகும்.துத்தியின் விதைகள் சற்று இனிய சுவையைப் பெற்றிருக்கும். துத்தியின் விதைகளைச் சேகரித்து நன்கு சூரணித்து சாப்பிட்டு வருவதால் சிறுநீர்த் தாரை எரிச்சல் போகும். துத்தியின் பூவை பாலில் இட்டு காய்ச்சிக் குடித்து வருவதால் உடலுக்குக் குளிர்ச்சியும் தாது விருத்தியும் உண்டாகும். துத்தியின் வேர்த் தீநீர் சிறுநீர்த்தாரை எரிச்சல், சொட்டு மூத்திரம், தாகம், மேகச்சூடு ஆகியவற்றைப் போக்கும். விதையைக் குடிநீர் இட்டுக் குடிக்க மூலம், வெள்ளைப்போக்கு ஆகியவை குணமாகும்.

துத்தியின் பெயர்களும் தன்மையும்:

Abutilon indicum என்பது துத்தியின் தாவரப் பெயர் ஆகும். துத்தியை ஆங்கிலத்தில் Indian mallow என்று குறிப்பிடுவர். உடலுக்கு  அதிக பலம் தரவல்லது என்னும் பொருளில் வடமொழியில் 'அதிபலா' என்று அழைக்கின்றனர். துத்திச் செடியின் காய்ந்த மூலம், காய்ச்சலைத் தணிக்கக்கூடியது, வயிற்றுப் புழுக்களைக் கொல்லக் கூடியது, வீக்கத்தைத் தணிக்கக்கூடியது. இலைச்சாறு மேற்பூச்சு மருந்தாகிறது.

விதைகள் சாந்தம் தரவல்லது. குறிப்பாக இருமல், சிறுநீரக வீக்கம், வலி ஆகிய துன்பங்களின்போது இதம் தருவது, மலச்சிக்கலைப் போக்குவது, இலைகள் உணவாகப் பயன்படுத்தக் கூடியது. உணவாகும்போது ரத்தமூலத்தை தணிக்கவல்லது. துத்தியின் பூக்கள் நுண்கிருமிகளை அழிக்கவல்லது, வீக்கத்தை வற்றச் செய்வது, பட்டை வீக்கத்தை வற்றச் செய்யும் தன்மை உடையது, சிறுநீரைப் பெருக்கக்கூடியது. வேர் நரம்பு மண்டலத்துக்கு உரமாகக் கூடியது, பக்கவாதத்துக்கு மருந்தாவது, சிறுநீர்த்தாரை, சிறுநீரகம் ஆகியவற்றின் வீக்கம், வலியைப் போக்க துத்தி வேர்ச் சூரணம் பயன்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவ நூல்கள் துத்தி வேரை மூட்டுகளில் 'யூரிக்' அமிலம் சேர்ந்து ஏற்படுகிற வீக்கம், வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், ரத்தக் கசிவுகள் ஆகியவற்றுக்குப் பரிந்துரை செய்கின்றன.துத்தியில் வழவழப்பு மிகுந்த Mucilaginous சத்து மிகுதியாக உள்ளது. இதில் இருக்கும் Asparagine எனும் வேதிப் பொருள் சிறுநீர் பெருக்கியாகப் பயன்படுகிறது. Gallic acid வலி நிவாரணியாகப் பயன் தருகிறது. இதிலுள்ள வழவழப்புத்தன்மை இருமலைத் தணிக்கிறது. துத்தியில் இருக்கும் எண்ணெய்ச் சத்து நுண்கிருமிகளை அழிக்கவல்லது.

மேலும் துத்தியில் உள்ள வேதிப் பொருட்கள் புற்றுநோயைத் தடுக்கவல்லவை எனவும் நவீன ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. இத்துடன் தொழுநோய், வயிற்றுப் புண்கள், தலைவலி, பால்வினை ஒழுக்கு, வெள்ளைப்போக்கு, சிறுநீரகத் தொற்றுகள் ஆகியவற்றையும் குணப்படுத்தக்கூடியது துத்தி.

'மூலநோய்க் கட்டிமுளைப் புழுப்பண்ணும் போகுஞ்

சாலவதக் கிக்கட்டத் தையலே - மேலுமதை

எப்படியேனும் புசிக்க எப்பிணியும் சாந்தமுறும்

இப்படியிற் றுத்தி இலையை'

- என்கிறது துத்தி பற்றிய அகத்தியர் குணபாடம்.

துத்தி இலையை நன்றாக வதக்கிக் கட்டுவதால் மூலநோய் குணமாகும்.  முளை வைத்த புண்கள், புழுக்கள் நெளிகிற நாட்பட்ட ஆறாப்புண்கள் ஆகியனவும் அதிவிரைவில் ஆறிப் போகும். மேலும் துத்திக் கீரையினை எவ்வகையிலேனும் உள்ளுக்கு சாப்பிடுவதால் உடலின் பல்வேறு பாகங்களிலும் தோன்றித் தொல்லை தருகிற எந்த நோயாகிலும் தீர்ந்து சாந்தம் உண்டாகும் என்பதுவே மேற்கண்ட அகத்தியர் பாடலின் கருத்து ஆகும்.

இதேபோல துத்தி மலரின் மருத்துவ குணத்தைப் பற்றிய இன்னொரு பாடலில், துத்தி மலரைத் துய்க்கின்றவர்களுக்கு விந்து பெருகும். உடல் குளிர்ச்சி பெறும். ஏதேனும் ஒரு வகையில் வாய் மூலம் ெவளி வருகிற ரத்த வாந்தி நிற்கும், இருமல் இல்லாது போகும் என்கிறார் அகத்தியர்.

 

துத்தி மருந்தாகும் விதம்

* துத்தி இலையை விளக்கெண்ணெய் விட்டு வெண்மை பெறும் வகையில் வதக்கி, இளஞ்சூட்டோடு ஒத்தடம் கொடுத்துவிட்டு அதன் மேலே கட்டி வைத்தால் ஆசன வாயில் அமைந்து துன்பம் தரும் மூலம், கட்டிகள், புண்கள் ஆகியன குணமாகும்.

* துத்தி இலையை நெய், பருப்பு சேர்த்து காரத்துக்கு சிறிதளவு மிளகு சேர்த்து (மிளகாய் சேர்க்காமல்)  சமைத்து சுடுசாதத்தில் இட்டுப் பிசைந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர ஒன்பது வகையான மூலங்களும் ெவகு விரைவில் குணமாகும்.

* துத்தி இலையை நீரிலிட்டு அடுப்பிலேற்றி வேக வைத்து அந்த நீரில் ஒரு துணியை நனைத்துப் பின் பிழிந்து பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுக்க வீக்கம், வலிகள் குறைந்து விடும்.

* துத்தி இலையைச் சாறு பிழிந்து 10 மி.லி. அளவு எடுத்து அதனுடன் பசுநெய் சேர்த்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வர வயிற்றுக் கழிச்சல் விலகிப் போகும். வயிற்றுக் கடுப்பும் தணிந்து போகும்.

* துத்தி இலை அல்லது வேரை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி இளஞ்சூட்டில் வாயிலிட்டுக் கொப்புளிக்க வாயைப் பற்றிய கிருமிகள் விலகிப் போகும். பல், ஈறுகள் ஆகியவற்றில் உண்டாகும் தொற்றுகள் தொலைந்து துன்பங்கள் விலகும்.

* துத்திப் பூவை சேகரித்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு பாலும் கற்கண்டும் சேர்த்துச் சாப்பிட்டு வருவதால் ரத்தவாந்தி, உள்உறுப்புகளின் அழல், குடல்புண் ஆகியன குணம் ஆகும். உடலின் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். மேலும் காசநோய், நுரையீரலில் சேர்ந்த சளி, மூச்சிரைப்பு ஆகியனவும் சீக்கிரத்தில் சரியாகும்.

*ஐந்து கிராம் துத்தி விதை சூரணத்தோடு சம அளவு கற்கண்டு சேர்த்துக் கலந்து தேன்விட்டுக் குழைத்து சாப்பிட்டு வர சருமத்தைப் பற்றிய கருமேகம், வெண்மேகம், உள் உறுப்புகளின் அனல், மேக அழல் ஆகியன தீரும்.

* துத்தி இலையைப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் பச்சரிசி மாவு சேர்த்துக் களி போல கிண்டி கல் போல கனத்து வீங்கி வலி உண்டாக்கும் கட்டிகளின் மேல் வைத்துக் கட்டி வர அவை விரைவில் பழுத்து உடைவதோடு அடையாளம் தெரியாதவாறு அமுங்கிப் போகும்.

* துத்தி விதையைப் பொடித்து சம அளவு சர்க்கரை சேர்த்து வெருகடி அளவு தினமும் இருவேளை சாப்பிட்டு வருவதால் உடலில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் காணாது போகும், பெருநோய் என்கிற குஷ்ட நோயும் குணமாகும்.

* துத்தி விதையைத் தீநீராக்கிக் குடிக்க வெள்ளை வெட்டை, அஸ்தி சுரம் என்னும் எலும்பு உருக்கி குணமாகும்.

* துத்தியின் இலைகள் அழற்சியைப் போக்கவும், பட்டை சிறுநீரைப் பெருக்கவும், இலைத்தீநீர் மலச்சிக்கல், மேகச்சூடு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவைகளை குணப்படுத்தவும் பயன்படுகிறது. சாலையோரங்களில் சாதாரணமாக நாம் காணக் கூடிய இத்தனை பெருமை மிக்க துத்தியை, மதிப்புமிக்க மருந்தகம் என்று தாராளமாக கூறலாம் அல்லவா?!

No comments:

Post a comment