KALVISOLAI TNPSC

Friday, 30 September 2016

வீடுகளை கட்டமைக்க கச்சிதமாக திட்டமிடுங்கள்!

வீடுகளை கட்டமைக்க கச்சிதமாக திட்டமிடுங்கள்!

வாழ்க்கையில் நிறைய சிரமங்கள் இருந்தாலும் தங்களுக்கென சிறிய அளவில் சொந்த வீடு கட்டி சந்தோஷமாக வாழ வேண்டும் என திட்டமிடுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். நகர்ப்புறங்களில் மனை வாங்குவது பொருளாதார ரீதியான சிரமமாக இருப்பதால், புறநகர் பகுதிகளில் வங்கி கடன் பெற்று வீடு கட்டுகிறார்கள் அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளை வாங்குகிறார்கள். இன்றைய நிலையில் சொந்த வீடு கட்டுபவர்களை விட அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குபவர்கள் அதிகமாக உள்ளனர். ஏனெனில், நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கும் வீடு மற்றும் வீட்டு மனைகளில் இருக்கும் விலை வித்தியாசங்கள் மற்றும் கட்டுமான பொருள்கள் விலையேற்றம் ஆகியவை அதற்கான காரணமாக உள்ளது.

முன்கூட்டியே அறியலாம்

இப்போது உள்ள இளைய தலைமுறையினர் சொந்தமாக வீடு வாங்கி 'செட்டில்' ஆன பிறகுதான் மற்ற விஷயங்கள் பற்றி யோசிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். சொந்தவீடு இருப்பது சமூக அளவிலான அங்கீகாரமாக பார்க்கப்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சிகளின் அடிப்படையில் தனி வீடு கட்டுபவர்கள் சந்திக்கக்கூடிய சிரமங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள அனுபவமிக்க கட்டுமானத்துறை நிபுணர்கள் தரக்கூடிய முக்கியமான 'டிப்ஸ்களை' இங்கே காணலாம்.

அளவுகள் மாற்றம் கூடாது

வீட்டிற்கான வரைபடம் தயாரிக்கும்போது 'பட்ஜெட்டுக்கு' தக்கவாறு தயாரிப்பது அவசியம். லட்சிய கனவாக இருக்கும் வீட்டை கட்டும் ஆசையில் மனதில் தோன்றும் எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த எண்ணினால் 'பட்ஜெட்' தொகை நிச்சயமாக எகிறிவிடும். முன்னரே கச்சிதமாக திட்டமிட்டு அமைத்த வரைபடத்தின் அளவுகளின்படியே அனைத்துவித கட்டமைப்புகளும் இருப்பதை ஒவ்வொரு நிலையிலும் உறுதி செய்து கொள்வது முக்கியம். அறைகளின் அளவுகள் சாதாரணமாக ஒரு அடி அதிகப்படுத்தி கட்டப்பட்டால்கூட மொத்த 'பட்ஜெட்டில்' பெரிய துண்டு விழும் என்று கட்டிடவியல் வல்லுனர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

உயரமான மேல்தளம்

கட்டிட பொறியாளரது முறையான ஆலோசனை பெற்று வீட்டின் மேல் தள உயரத்தை பத்து அடிகளுக்கும் மேலாக உயர்த்திக்கட்டும்போது காற்றோட்டத்துக்கு வசதியாக இருக்கும். வெப்பத்தின் தாக்கம் கோடை காலத்தில் அதிகமாக இருக்கும்போது, உயரமான மேல் தள அமைப்பால் வீட்டினுள் பரவும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும்.

காற்று வந்து செல்ல வழி

வீட்டிற்குள் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டுமானால், காற்று நுழைந்து வெளியேறும் வகையில் கதவு, ஜன்னல் அமைப்புகள் இருக்கவேண்டும். கதவுக்கு நேராக கதவு, ஜன்னலுக்கு நேராக ஜன்னல் என்று அமைக்கப்படும்போது காற்றோட்டம் நன்றாக இருக்கும். அனைத்து அறைகளிலும் ஜன்னல் இருப்பது முக்கியம். அதன்மூலமாக வெளிச்சமும், காற்றும் சரியாக கிடைத்து ஆரோக்கியமான சூழ்நிலை உண்டாக ஏதுவாக இருக்கும்.

தரைத்தளம் கவனம்

வழுக்கக்கூடிய தரைத்தளங்கள் தவிர்க்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட 'டைல்ஸ்' வகைகளுக்கு பதிலாக 'ஆன்டி ஸ்கிட் டைல்ஸ்' வகைகள் பயன்படுத்தலாம். வயதில் மூத்தவர்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் அவர்களது பாதுகாப்பை கவனத்தில் கொள்ளவேண்டும். குளியலறை மற்றும் கழிவறைகளில் சொரசொரப்பான 'டைல்ஸ்' வகைகள்தான் பயன்படுத்தவேண்டும்.

குறைவான பரண்கள்

அறைகளின் நான்கு புறங்களிலும் பரண்கள் அமைப்பது சரியான முறையல்ல. வரவேற்பறைகளில் பரண்கள் அமைக்கும்போது அதன் முக்கியத்துவம் பற்றி பலமுறைகள் யோசிப்பது அவசியம். காரணம், அவசியம் குறைவான பரண் அமைப்புகளில் கதவுகள் இருந்தாலும்கூட, தூசிதுரும்புகள் மற்றும் ஒட்டடைகள் சேர்ந்துகொள்ளும். மேலும் பல்லிகள் மற்றும் கரப்பான்பூச்சிகளின் இருப்பிடமாகவும் பரண்கள் மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

மின் இணைப்புகள்

சமையலறை, படுக்கையறை, கழிவறை போன்றவற்றில் நமது உபயோகத்திற்கு ஏற்ப மின்விளக்குகள் அமைக்கப்படவேண்டும். மின்சிக்கனம் அவசியமாக இருப்பதால் எல்லா அறைகளிலும், கூடுதலான மின்சக்தியை பயன்படுத்தும் விளக்குகளை தவிர்க்க வேண்டும். மின் இணைப்பு தேவைப்படும் இடங்களுக்கான குழாய்கள் மற்றும் 'ஜங்ஷன் பாக்ஸ்' போன்றவற்றை சுவருக்கு உட்புறமாக அமைவதுபோல திட்டமிடுவது அவசியம். அதனால் சுவரை கட்டிய பிறகு துளையிடும் வேலைகள் தவிர்க்கப்படும்.

No comments:

Post a comment