KALVISOLAI TNPSC

Sunday, 2 October 2016

அகத்தி

அகத்தி


தமிழருக்கும் தமிழ் மருத்துவ உலகுக்கும் அகத்திய மாமுனிவர் எந்த அளவுக்கு முக்கியமானவரோ, அந்த அளவு முக்கியத்துவம் கொண்டது என்பதற்காகவே, அகத்தி என்ற பெயரை வைத்துள்ளார்கள் நம் முன்னோர். அகம் என்னும் சொல் தமிழ் அகராதியில் அனைத்து மரத்தையும் பொதுவாகக் குறிக்கிற சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அகத்திக்கீரையை மரத்தினுடைய கீரை எனவும் பொருள் கொள்ளலாம். ஆமாம்... மரவகையைச் சேர்ந்த ஒரு தாவரம்தான் அகத்தி.

 

'அகத்தி' எனும்போது அகம் + தீ என்று பிரித்து பொருள் கொள்வதன் மூலம் இதன் பொருளை இன்னும் எளிதாகப் புரிந்துகொள்ள இயலும். அதாவது, நம் அகத்தில் (உடலுக்குள்) தகிக்கிற தீயான உடற்சூடு, வெட்டைச்சூடு, பித்தச்சூடு, கணச்சூடு, கர்ப்பச்சூடு, மூலச்சூடு, காமச்சூடு ஆகியவற்றினை தணிக்க உதவுவதைக் குறிக்கும். அகத்தியின் தாவரப்பெயர் Sesbania grandiflora. ஆங்கிலத்தில் இதன் பெயரை அகத்தி என்றே குறிப்பிடுகிறார்கள்.

 

அகத்தியைப் பொதுவாக வெற்றிலைக்கு ஊடு பயிராக வளர்ப்பது உண்டு. சிவப்பு அல்லது வெள்ளைப் பூக்களைப் பெற்றிருக்கும். அகத்தியின் பட்டை மிகுந்த கசப்புடையது. மலச்சிக்கலை முறிக்கக்கூடிய மருந்தாகப் பயன்படுகிறது. அம்மை வந்தபோது வேர்க்குரு போலத் தோன்றி காய்ச்சலும் மிகும்போது அகத்தி மரப்பட்டையைத் தீ நீராக்கிக் கொடுப்பதால் துன்பம் தொலையும்.

 

அகத்தி இலையின் தீநீர் பேதி உண்டாக்கப் பயன்படும். காய்ச்சலினால் ஏற்படும் வலிப்புக்கும் இலைச்சாறு பயன்படும். அகத்தியின் வேரைத் தண்ணீர் விட்டு அரைத்து வாத வீக்கத்துக்கு மேற்பற்றாகப் போடுவதால் வீக்கமும் வலியும் தணியும். அகத்தியின் மருத்துவ குணங்கள் நச்சகற்றி, குளிர்ச்சியுண்டாக்கி, மலமிளக்கி, காய்ச்சல் நீக்கி என்ற சிறப்புகளுடன் வயிற்றுப் புழுக்களை வெளியேற்றக்கூடியது, சிறுநீரைப் பெருக்கக்கூடியது, மாதவிலக்கைத் தூண்டக்கூடியதுஉடலுக்கு டானிக் போல உரமாவது அகத்தி.

 

அகத்தியின் பூக்கள், காய்கள், இலைகள் உணவாகின்றன. கால்நடைகளுக்கு உணவாகும். குறிப்பாக மாடுகளுக்கு உணவாகக் கொடுக்க மிகுதியாக பால் சுரக்கும்.'புகைப்பித்த மும்அழலாற் பூரிக்கும் அந்த வகைப்பித்த மும்மனலும் மாறும் - பழுத்துச்சகத்தி லருந்தாத் தனியமிர்தே!  நாளும் அகத்தி மலருக் கறி' என்று அகத்திப் பூவின்மகிமை பற்றி அகத்தியர் பாடியுள்ளார்.

 

அகத்திப் பூவை உணவாகக் கொள்வதால் கடும் வெயிலால் ஏற்பட்ட வெப்பம், புகைப்பிடித்தலால் ஏற்பட்ட வெப்பம், பித்தம் மேலீட்டால் ஏற்பட்ட வெப்பம் ஆகிய துன்பங்கள் அறவே அகன்று போகும் என்பது மேற்கண்ட பாடலின் பொருள்.அகத்தியில் பொதிந்திருக்கும் சத்துகள் 100 கிராம் அகத்திப் பூவில் 91.58 கிராம் நீர்ச்சத்து, 1.28 கிராம் புரதச்சத்து, 0.04 கிராம் கொழுப்புச்சத்து, 6.73 கிராம் கார்பன் என்கிற கரிச்சத்து, 18 மில்லிகிராம் சுண்ணாம்புச்சத்து, 84 மில்லிகிராம் இரும்புச்சத்து, 12 மில்லிகிராம் தாதுக்கள், 30 மில்லிகிராம் பாஸ்பரஸ், 184 மில்லிகிராம் பொட்டாசியம், 15 மில்லிகிராம் சோடியம் ஆகியன அடங்கியுள்ளன. இவற்றுடன் செலினியம், வைட்டமின் சி, தயாமின், நியாசின் போன்ற சத்துகளும் அடங்கியுள்ளன.அகத்திக் கீரையில் உள்ள சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து எலும்புகள் வளர்ச்சியைப் பெற்று பலமாக விளங்க உதவுகின்றன.

 

நாட்டு மருத்துவத்தில் அகத்திப்பூவை மாலைக்கண் நோய், தலைவலி, மூக்கு ஒழுக்கு, இருமல், காய்ச்சல் என பல்வேறு நோய்களிலிருந்து விடுதலை பெற உபயோகப்படுத்துகின்றனர். நவீன ஆய்வுகளில் புத்துணர்வு தரும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அகத்தியில் நிறைய இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கின்றனர். புகை பிடித்தலால் வந்த இதயக்கோளாறுகளுக்கும் அகத்தி அருமருந்தாக விளங்குகிறது எனத் தெரிய வந்திருக்கிறது.

 

மேலும் Nitrofurazone என்னும் மருந்தினைவிட வெகு விரைவில் புண்ணை ஆற்றக்கூடியது அகத்தி என்றும் தெரிவிக்கின்றன. அகத்தி கொழுப்பைக் கரைக்கும் வல்லமை பெற்றது என்றும் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் பெற்றது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சித்த மருத்துவத்தில் அகத்தியின் பங்கு அகத்தியை அடிக்கடி உண்பதால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.அகத்தி இலைச்சாறு இரண்டொரு துளிகள் மூக்கிலிட்டு உறிஞ்சினால் வருகிற சுரத்தை தடுத்து நிறுத்துவதோடு குணமாக்கவும் செய்யும்.

 

அகத்தி இலையை மைய அரைத்து உடலின் மேல் பூசி வைப்பதால் விரைவில் கடுமையான காய்ச்சல் தணிந்து உடல் வெப்பமும் குறையும். அகத்திப்பட்டையை சாறு எடுத்து 10 முதல் 20 மி.லி. வரை எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சி ஏதேனும் சுவை சேர்த்து தீநீராகக் குடிப்பதால் அம்மை, அக்கி போன்ற தோலைப் பாதிக்கும் காய்ச்சலைத் தணிப்பதோடு பூரணமாக குணமாக்கவும் செய்கிறது.

 

அகத்திப் பூவை சமைத்து உண்பதால் வெயிலில் அலைவது, புகை பிடித்தல் போன்றவற்றால் எழுந்த பித்தக்குறைபாடு, உடலில் ஏற்பட்ட வெப்பம் தணியும். உடலும் கண்களும் குளிர்ச்சி பெறும்.    அகத்தி மரத்தின் வேர்ப்பட்டையை சேகரித்து 10 கிராம் அளவு எடுத்துத் தீநீராக்கிக் குடிப்பதால் மேகம் என்னும் ஒழுக்கு, நாவறட்சி, உடல் எரிச்சல், உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல், மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்பொறிகளிலும் உண்டாகும் எரிச்சல் குணமாகும்.

 

அகத்தி வேர்ப்பட்டையோடு ஊமத்தை வேர் ஓரளவு சமமாக எடுத்து அரைத்து வாத வீக்கத்துக்கும், கீல்வாயுகளுக்கும் பற்றிட வீக்கமும் வலியும் குறையும்.அகத்திக்கீரைக்கு பித்தத்தைத் தணித்தல், உண்ட உணவைச் செரிப்பித்தல் ஆகிய நற்குணங்கள் உண்டு.  மிகுதியாக உண்டால் வாயுத்தொல்லைகள் ஏற்படும் என்பதால் அளவோடு உண்பதே நல்லது. நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை செய்துகொள்வோர் அகத்திக் கீரையை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அகத்திக் கீரைக்கு மருந்தின் வீரியத்தைக் குறைக்கக்கூடிய அல்லது முறிக்கக்கூடிய தன்மை உண்டு.

 

அகத்திக் கீரையை அதிகமாகப் பயன்படுத்துவதால் ரத்த சோகை, சருமநோய்கள், பேதி ஆகியன உண்டாகும். அகத்தி மருந்தாகும் விதம்  அகத்திக்கீரைச்சாறு 20 மி.லி. வரை உள்ளுக்கு எடுத்துக் கொள்வதால் இருமல் குணமாகும், பார்வை தெளிவு பெறும், தலைவலி தணியும்.அகத்தி மரப்பட்டைச்சாறு 20 மி.லி. வரை உள்ளுக்கு எடுத்துக்கொள்வதால் அது வற்றச்செய்யும் தன்மை உடையது என்பதால் மென்தசைகள் சுருங்கி விரிவடையும் தன்மையை அது ஒழுங்குபடுத்தி எங்கேனும் ஏற்படும் ரத்தப்போக்கை சரி செய்ய இயலும்.அகத்தி வேர்ச்சாறுடன் போதிய தேன் சேர்த்துக் குடிப்பதால் நெஞ்சகச்சளியை உடைத்து வெளியேற்றும். இருமல், மூச்சிரைப்பு விலகும். பட்டையை நசுக்கி சொறி, சிரங்கு ஆகியவற்றின் மேல் பூச விரைவில் குணமாகும்.

No comments:

Post a comment