KALVISOLAI TNPSC

Sunday, 2 October 2016

மூலிகை மந்திரம் : அசோக மரம்

மூலிகை மந்திரம் : அசோக மரம்

பழம்பெரும் இந்திய இதிகாசமான ராமாயணம் சொல்லும் செய்தியின்படி, அசோக மரங்கள் நிறைந்த வனத்தில்தான் சீதாதேவி  சிறை வைக்கப்பட்டிருந்தார். சீதைக்கு ஏற்பட்ட சோகத்தை அகற்ற உதவிய மரம் என்பதால்தான் ''சோக மரம் என்ற பெயரே  வந்தது என்பார்கள். அதனால்தானோ என்னவோ, அசோக மரத்தின் பூ, பட்டை என அத்தனைப் பகுதிகளும் பெண்களைப்  பாதிக்கும் பல நோய்களைப் போக்கக்கூடிய, பெண்களுக்கான சிறப்பான மருத்துவ மூலிகையாக விளங்குகிறது.

 

சாயை, அங்கணப்பிரியை, கிருமிகாரகம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் அசோக மரத்தின் தாவரவியல் பெயர் Saraca  indica. அசோகு, ஹேம்புஷ்பா, தாம்ரபல்லவா என வடமொழியிலும் பல பெயர்கள் உண்டு. இந்திய மண்ணில் எங்கும்  சாதாரணமாக வளரக்கூடியது. குறிப்பாக, இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது. அசோக மரத்தின் மருத்துவ  குணங்கள்  அசோக மரத்தின் பட்டை பசியின்மை குறைபாட்டை நீக்கிப் பசியைத் தூண்டவும், பித்தம் உபரியாகிப் பல்வேறு  நோய்கள் உண்டாகா வண்ணம் இரைப்பைக் கோளாறுகளுக்கு தடுப்புச் சுவராக நின்றும் உதவுகிறது.

 

அசோக மரத்தினுடைய பட்டை பெண்களின் கருப்பைக்கு வருகிற பல்வேறு நோய்களைப் போக்கக் கூடியது. கருப்பைக்கு பலம்  தரக்கூடியதாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளைப்போக்கினை இல்லாமல் செய்யக்கூடியது. மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும்  கடுமையான இடுப்பு வலி, வயிற்று வலி போன்ற பிரச்னைகளைத் தணிக்கக் கூடியதாகவும் அசோக மரப்பட்டை விளங்குகிறது. இந்திய ஆயுர்வேத நூல்கள் அசோக மரப்பட்டை மாதவிலக்கு காலங்களுக்கு இடையே ஏற்படும் ரத்தம் கசிதல் போன்ற  துன்பத்தையும், அதிக உதிரப்போக்கையும், தொற்றுகளையும், உடலில் பல்வேறு இடங்களில் காணும் வீக்கங்களையும்  குணப்படுத்தக்கூடியது என்று பரிந்துரை செய்கின்றன.

 

அசோக மரத்தின் பூக்களுக்கு ரத்தப்போக்கைத் தணித்து, சீதபேதியையும் தடுத்து நிறுத்தும் வல்லமை உண்டு. மூலநோயையும்  குணப்படுத்தவல்லதாக அசோக மரப் பூக்கள் இருக்கின்றன. அசோக மரத்துப்பட்டை உடலுக்குக் குளிர்ச்சி தருவதாகவும்வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொன்று வெளியேற்றக் கூடியதாகவும், மேற்பூச்சு மருந்தாகிப் புண்களை ஆற்றுவதாகவும், வயிற்றுக்  கோளாறுகளை வேரறுக்கச் செய்வதாகவும், காய்ச்சலைத் தணிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

 

'வாதபித்த சேத்ம வரிசைபெறு மூவருக்கும்

ஆதரவாய் மெய்யி லமருமே - பூதலத்தில்

வீண் பிண்டி போல விடுமுடம்பை யுந்தணிக்கும்

காண்பிண்டி யாம சேகம்'

என்கிறது தேரையர் வெண்பா.

வாதம், பித்தம், சிலேத்துமம் என்று வரிசைப்படுத்தி சொல்கிற வளி எனும் காற்று தொடர்பான நோய், பித்தம் என்கிற  உஷ்ணத்தை அடிப்படையாகக் கொண்ட நோய். சிலேத்துமம் என்னும் சீதனத்தை (நீரை) அடிப்படையாகக் கொண்ட நோய் ஆகிய  அனைத்தையும் போகச் செய்து உடலுக்கு ஆதரவாக நின்று உடலைக் காக்கும். செக்கிலிட்டு எண்ணெய் எடுத்துப் பெற்ற  புண்ணாக்குப் போல உடலை வற்றச் செய்யும் உதிரப்போக்கினைக் கண்டிக்கும். அதோடு, நீரிழிவையும் தணிக்கக்கூடியது என்பதே  மேற்சொன்ன பாடலின் பொருள்.

 

அசோக மரம் மருந்தாகும் விதம்

அசோக மரத்தின் பூவை இடித்துப் பசையாக்கி நீரில் சேர்த்துக் கலக்கிக் குடிப்பதால் ரத்தக்கசிவு, ரத்த சீதபேதி, ரத்த மூலம்வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவது ஆகிய நோய்கள் குணமாகும்.

 

பட்டையை இடித்துச் சாறு பிழிந்து அந்தி சந்தி என இருவேளையும் 10 மி.லி. அளவு உள்ளுக்குக் கொடுத்து வருவதால்  பெரும்பாடு என்னும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் அடங்கும்.

 

அசோக மரத்தின் இலையை இடித்துச் சாறு எடுத்து அதனோடு சிறிது சீரகத்தைப் பொடித்துச் சேர்த்து உள்ளுக்கு சாப்பிடுவதால்  வயிற்றை இழுத்துப் பிடித்தாற்போல் வலிக்கும் வலி, வயிற்று உப்புசம், வயிற்று எரிச்சல், வயிற்றுப்புண் ஆகியன குணமாகும்.

 

பூக்கள், விதைகள், பட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தீநீராக்கிக் குடிப்பதால் கருப்பைக்கு பலம் தருவதாகவும் பல்வேறு  கருப்பைக் குற்றங்களைப் போக்குவதாகவும் செயல்படும் மருந்தாகும்.

 

அசோக மரத்துப் பூக்களை இடித்துத் தீநீராக்கி தினம் இருவேளை எனச் சில நாட்கள் தொடர்ந்து குடித்து வருவதால் கருப்பையின்  வாய்ப்புற அழற்சி, பித்த மேலீடு, பால்வினையால் வந்த கொருக்குப் புண்கள், அதிகமான நாவறட்சி, ரத்தம் அதிகமாகக் கலந்து  வெளியேறும் ரத்த சீதபேதி, ரத்தக் கசிவு, படை என்னும் தோல் நோய் ஆகியன குணமாகும்.

 

அசோகப்பட்டை 100 கிராம் அளவு எடுத்து நன்றாக சிதைத்து 200 மி.லி. பாலும் 800 மி.லி. நீரும் சேர்த்துக் கலந்து  அடுப்பிலேற்றி சிறு தீயில் நன்றாகக் கொதிக்க விட்டு ஐந்தில் ஓர் பங்காகச் சுண்டச் செய்து தினம் இருவேளை உள்ளுக்குக்  கொடுத்து வருவதால் ரத்தப்போக்கு நின்று போகும். கருப்பையைச் சார்ந்த அத்தனைக் குற்றங்களும் கரைந்து போகும்.  வீட்டுவிலக்கு ஆகி மூன்றாம் நாளுக்கு மேலும் தொடர்கின்ற ரத்தப்போக்கும் நிற்கும்.

 

அசோக மரத்துப் பூக்களை சேகரித்து நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் அடிபட்ட காயம், அதனால் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு  ஆகியன குணமாகும்.

 

அசோக மரத்துப் பூவின் தீநீர் ஆழ்மனத்தில் கவலை, பதட்டமான உணர்வு ஆகியவற்றையும் கட்டுப்படுத்தக்கூடியது.அசோக மரப்  பூக்களையோ, பட்டையையோ குடிநீராக்கிக் குடிப்பதால் வயதானவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் நோய்களும் மன  நோய்களும் குணமாகிறது.

 

பெண் மலடு, குழந்தைப்பேறு ஏற்படுவதில் தாமதம் என்கிற நிலையில் 20 முதல் 30 கிராம் அளவு அசோக மரப்பட்டையை  எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சி இனிப்பு சேர்த்து அன்றாடம் குடித்து வருவதால் விரைவில் கருப்பைக் குற்றங்கள் விலகி கருத்தரிக்க  உதவும்.சீதையின் துயர் துடைத்த மரம், புத்தர் அவதரித்த மரம்... இப்படி தெய்வீகத் தொடர்பு கொண்டது என்பதோடு, பூக்கள்  நிறைந்த அழகு தரும் மரமாகவும், ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மரமாகவும் விளங்கும் அசோக மரத்தை வளர்ப்போம்... பயன்  பெறுவோம்!

No comments:

Post a comment