KALVISOLAI TNPSC

Sunday, 2 October 2016

நேரில் வந்து நிவேதனம் ஏற்ற நாயகன் : திருநாரையூர்

நேரில் வந்து நிவேதனம் ஏற்ற நாயகன் : திருநாரையூர்

திருநாரையூர் திருத்தலம், திருமுறைகளை வகைப்படுத்திய சான்றோனை ஈன்றெடுத்த தலம். அந்த சான்றோன், நம்பி. தன் பால வயதில் தந்தையாரின்  விநாயகர் வழிபாட்டில், எட்ட நின்று ஈடுபாடு காட்டியவர். முழுமுதல்வனை அர்ச்சித்து, அவருக்கு நிவேதனமும் அளிப்பதை தூர நின்றே பிரமிப்புடன் பார்த்தவர்.  பூஜையறைக்குள் சிலைவடிவ விநாயகர் நிவேதனப் பொருட்களை உட்கொள்கிறார் என்ற பிரமிப்பு. படைத்த அந்தப் பொருட்கள் பிறகு சமையலறைக்குப்  போய்விடுவதையோ, அதுவே, பிற உணவு வகைகளுடன் சேர்த்து மதிய உணவாகத் தமக்கு அளிக்கப்படுவதையோ அவர் கவனித்ததில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம், 'தந்தையார் அளிக்கும் நிவேதனத்தை பிள்ளையார் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்' என்பதுதான். அந்த நம்பிக்கை நிரூபிக்கப்பட ஒரு  வாய்ப்பும் விரைவில் கிட்டியது அவருக்கு. தந்தையார் ஒருநாள் வெளியூருக்குப் போக வேண்டியிருந்தது. அவ்வப்போது தனக்குப் பூஜைப் பொருட்களை எடுத்துக் கொடுக்கும் மகனின் ஆர்வத்துக்குப் புது  அங்கீகாரம் கொடுக்க விரும்பினார் அவர். தான் வரும்வரை அதுவரை தான் செய்து வந்த பூஜையை மகனை ஏற்றுச் செய்யச் சொல்லிவிட்டு புறப்பட்டார். நம்பிக்கு மகிழ்ச்சி நிலை கொள்ளவில்லை. தந்தையாரைப் போலவே அதிகாலையில் எழுந்து, நீராடி, மலர்களையும், தாயார் தயாரித்துத் தந்த நிவேதனப்  பொருட்களையும் கொண்டுபோய் விநாயகர் முன் வைத்தார். தனக்குத் தெரிந்தவகையில் அர்ச்சனை செய்துவிட்டு, நிவேதனம் செய்தார். காத்திருந்தார். நிவேதனப்  பொருட்களைப் பார்த்தார், விநாயகரைப் பார்த்தார். சந்தேகம் நெற்றியில் சுருக்கங்களை ஏற்படுத்தியது. பிள்ளையார் ஏன் இறங்கி வரவில்லை, ஏன் நான்  படைக்கும் நிவேதனத்தை ஏற்கவில்லை? மெல்லக் குரல் கொடுத்து அழைத்தார். பதிலில்லாததால் குரல் உயர்ந்தது. இப்போதும் எதிர்பார்த்த எதிர்வினை இல்லாததால், அழைப்பு, அழுகையாக மாறியது. உரத்தது. அப்படியும் பலனில்லாது  போகவே, நம்பி பக்கத்து சுவர் மீது தலையை மோதிக் கொண்டார். 'என் தந்தையார் வந்து கேட்டால் நான் என்ன சொல்வேன்? அவர் படைத்தபோது  நிவேதனத்தை ஏற்ற நீங்கள், நான் படைப்பதை நிராகரிப்பது ஏன்?' குருதி கேள்வியாகக் கொப்பளித்தது. பாலகன் மீது பரிதாபம் கொண்டார் விநாயகர். சிலை  அசைந்தது. துதிக்கை நீண்டது. அவர் தலைமீது மெல்ல வருடிக் கொடுத்தது. மாயமாக  காயம் ஆறிப் போனது. அதே துதிக்கையால் நிவேதனப் பொருட்களை  எடுத்து உண்டது. நம்பிக்கும் ஊட்டி விட்டது! பிறகு மீண்டும் சிலையானது.நம்பிக்கு ஒரே சந்தோஷம். தன்னையும் விநாயகர் மதித்து நடத்துகிறார் என்ற உவகை. உடனே தாயாரிடம் வந்து விவரம் சொன்னபோது அவர் விழிபிதுங்க  மகனைப் பார்த்தார். 'பக்தி முற்றிவிட்டதோ?' ஊரிலிருந்து வந்த தந்தையார் முதலில் திகைத்தாலும், உடனே வெகுண்டார். ஆசைப்பட்டால் அம்மாவிடம்  கேட்டு வாங்கிச் சாப்பிடுவதுதானே? இப்படி பூஜையறையிலேயே உண்டு விட்டு, பொய் வேறு சொல்கிறானே என்று தன் பக்திக் குறைபாட்டை கோபமாக  வெளிப்படுத்தினார். மகனை நோக்கி ஓங்கிய கையை ஒரு துதிக்கை தடுத்து  நிறுத்தியபோது மருண்டார். விநாயகர் பிரசன்னமாகி, தான் நம்பியின் பக்தியை  நேரடியாக ஏற்றுக் கொண்டதைச் சொன்னார்.அதுமுதல், நம்பிக்கையால் ஆண்டவனையே ஆகர்ஷித்த நம்பி, நம்பியாண்டான் நம்பியானார். விநாயகரே நேரில் வந்து நிவேதனம் ஏற்ற அற்புதம் ஊரெல்லாம்  பரவியது. மன்னன் ராஜராஜ தேவர் என்ற அபயகுல சோழனின் காதுகளையும் எட்டியது. உடனே விரைந்தோடி வந்தான். நம்பியின் பிஞ்சுத் தாள்களைப்  பற்றினான். பிள்ளையாருக்கு பிரமாண்டமாக பூஜைகள் செய்வித்தான். நம்பிக்கும், நாயகருக்கும் இடையே உண்டான பக்தி - அருள் பாலத்தின் வலிமையைத்  தெரிந்து கொண்ட அவன், தேவாரத் திருமுறைகள் ஒளிக்கப்பட்ட விவரம் சொல்லி, விநாயகரிடம் கேட்டு, அவை இருக்குமிடம் அறிந்து சொல்லுமாறு கேட்டுக்  கொண்டான். நம்பியும் பிள்ளையாரின் உதவியை நாட, உடனே கேட்டது தெய்வத்தின் குரல்: 'தில்லையின் மேற்கு கோபுரத்தை அடுத்துள்ள திருமதிலில் அந்த நூல்கள்  சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. 'உடனே சிதம்பரம் நோக்கி தொண்டர் படை புறப்பட, பிள்ளையார் கூற்றுப் படியே திருமுறைகளைக் கண்டெடுத்துப்  பேரானந்தம் கொண்டார்கள் அனைவரும். பிள்ளையார் வழிபடு இறைவனானார். இவர் பொள்ளாப் (உளி கொண்டு செதுக்காத, சுயம்பு விநாயகர்) பிள்ளையார் என்று  வழிபடப்படலானார். இந்தத் திருநாரையூர் தலத்தில் ஈசன் பிரதானமானவர். சௌந்தரேஸ்வரர் என்று பெயர். துர்வாச முனிவரின் தவம் கெடுத்து, நாரையாக உருவெடுக்கும் சாபம்  கொண்ட ஒரு கந்தர்வன், அந்த முனிவரின் ஆலோசனையின் பேரிலேயே இத்தலத்து இறைவனை வழிபட்டு விமோசனம் கொண்டான். அதனாலேயே இவ்வூர்  திருநாரையூர் என்றானது. உயர்ந்த ராஜகோபுரம், கோயிலுக்கு முகப்பு எழில் சேர்க்கிறது. லிங்க வடிவ இறைவன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்க, இறைவிதிரிபுரசுந்தரி கருணை மழை பொழிகிறாள். குழந்தைப் பேறு வேண்டுவோர் இந்த அன்னையை வணங்கி ஈடில்லா அப்பேற்றை பெற்று மகிழ்கிறார்கள். பொள்ளாப் பிள்ளையாருக்கு (இவரை பொல்லாப் பிள்ளையார் என்றும் போற்றுகிறார்கள். பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும் இவரது திறத்தால்  மட்டுமல்லாமல்; வழிபடுவோர் உள்ளத்திலும் எந்தப் பொல்லாத்தனமும் நுழையாதபடி காப்பவர் என்ற பொருளிலும்) தனி சந்நதி. துதிக்கை வலப்புறம் திரும்பிய  வலஞ்சுழி விநாயகர் இவர். நம்பிக்கு திருமுறைகளைக் காட்டித் தந்ததால் 'திருமுறை காத்த விநாயகர்' என்றும் போற்றப்படுகிறார், இந்தப் பிள்ளையார். நம்பி  திருமுறை கண்ட வரலாறு, அழகுமிகு ஓவியங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளது. வள்ளி - தெய்வானையுடன் முருகன், திருமூலநாதர், நவகிரகங்கள், நடராஜர், பைரவர், சந்தனாச்சார்யார், நால்வர், சேக்கிழார், இரட்டை சண்டிகேஸ்வரர்  ஆகியோரும் தனித்தனியே சந்நதி கொண்டு இக்கோயிலில் துலங்குகிறார்கள்.திருமுறைகளை விநாயகர் அருளால் மீட்டது மட்டுமல்லாமல், தாமே பத்து நூல்களை இயற்றியுள்ளார் நம்பியாண்டான் நம்பி. திருநாரையூர் விநாயகர்  திருவிரட்டை மாலை, கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம், திருஞானசம்பந்தர் திருவந்தாதி, திருஞானசம்பந்தர் திருச்சண்பை  விருத்தம், திருஞானசம்பந்தர்  திருமும்மணிக்கோவை, திருஞானசம்பந்தர் திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருஞானசம்பந்தர் திருத்தொகை, திருநாவுக்கரசு சுவாமிகள் திருவேகாதசமாலை  மற்றும் திருத்தொண்டர் திரு அந்தாதி ஆகியவை அவை. இவ்வாறு நூல்கள் இயற்றுவதற்கு அறிவு புகட்டிய ஆசிரியராக, இவர் வணங்கிய விநாயகரே  மூலகாரணமானார். தான் படைத்த நிவேதனத்தை உண்ண விநாயகர் வெகுநேரம் எடுத்துக் கொண்டதால், தான் அன்று பாடசாலைக்குத் தாமதமாகப் போக வேண்டியிருக்கும் என்றும்தன்னை ஆசிரியர் கடிந்து கொள்வார் என்றும், அதனால் விநாயகரே தனக்கு ஆசானாக இருந்து போதிக்க வேண்டும் என்றும் நம்பி மனமுருகி வேண்ட, அவ்வாறே  அருள் செய்தார் பிள்ளையார். கோயிலின் எதிரிலேயே நம்பிக்கும் தனிச் சந்நதி உள்ளது. கையில் அபிஷேகக் கலயத்துடன் நின்ற திருக்கோலத்தில்  காட்சியளிக்கிறார் நம்பியாண்டான் நம்பி. சிதம்பரம் - திருச்சி நெடுஞ்சாலையில் சிதம்பரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுமன்னார் கோயில்  அருகே அமைந்திருக்கிறது திருநாரையூர்.

No comments:

Post a comment