KALVISOLAI TNPSC

Wednesday, 5 October 2016

ஆச்சார்ய’ ராம்சந்திர சுக்லா

'ஆச்சார்ய' ராம்சந்திர சுக்லா

நவீன இந்தி இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான 'ஆச்சார்ய' ராம்சந்திர சுக்லா (Acharya Ramchandra Shukla) பிறந்த தினம் இன்று (அப்டோபர் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தின் அகோனா என்ற கிராமத்தில் (1884) பிறந்தார். தந்தை அரசு ஊழியர். 4 வயதில் குடும்பம் ஹமீர்புர் என்ற இடத்துக்கு குடியேறியது. அங்கு ஆரம்பக்கல்வி கற்றார். பின்னர் தந்தை மிர்சாபூருக்கு மாற்றப்பட்டார்.

இவருக்கு 9 வயதானபோது, தாய் இறந்துவிட்டார். அந்த துக்கமும், சிற்றன்னை மூலம் அனுபவித்த துயரமும் சிறுவயதிலேயே இவரைப் பக்குவப்பட வைத்தன. தன்னைப் போல, தாலுகா அலுவலகத்தில் மகன் பணிபுரிய வேண்டும் என்று தந்தை நினைத்தார். மகனோ இலக்கியத்தில் சாதனைப் படைக்க விரும்பினார்.

தந்தையின் வற்புறுத்தலால் அலகாபாத்தில் வக்கீல் படிப்பில் சேர்ந்தார். விருப்பமே இல்லாமல் படித்ததால், தேர்வில் தோற்றார். இவரது ஆர்வம் முழுவதும் இலக்கியத்திலேயே இருந்தது. மிர்சாபூரில் மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே பத்திரிகைகளில் எழுதினார்.

இவரது எழுத்தாற்றலால் கவரப்பட்ட காசி நகரி பிரசாரிணி சபா என்ற இலக்கிய அமைப்பு இவரை 'இந்தி சப்த சாகர்' என்ற இதழின் துணை ஆசிரியராக நியமித்தது. பிறகு அதன் ஆசிரியராக உயர்ந்தார். காசி இந்து பல்கலைக்கழகத்தில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அங்கு முதன்முதலில் கவிதைகள், கட்டுரைகள் எழுதினார். பல ஆங்கிலக் கட்டுரைகளும் எழுதினார். இவர்தான் முதன்முதலாக இந்தியில் இலக்கிய வரலாறு எழுதிய படைப்பாளி. அறிவியல் அடிப்படையில் மிகவும் விரிவாக ஆராய்ந்து இதை எழுதினார்.

இலக்கண பாணியிலான மொழிநடை, சுலபமான மொழிநடை ஆகிய இரண்டிலும் வல்லுநர். இவரது பிரபல படைப்பான 'இந்தி சாகித்ய கா இதிஹாஸ்' 1928-ல் வெளிவந்தது. இன்றும்கூட இந் நூலை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

உணர்ச்சி, மனநலம் பாதிப்பு தொடர்பான உளவியல் பகுப்பாய்வு கட்டுரைகள் இவரது தனி முத்திரை. இவற்றில் கருணை, சிரத்தை, பக்தி, வெட்கம், குற்ற உணர்வு, கோபம், பேராசை, இச்சை ஆகிய உணர்ச்சிகள் மற்றும் இவை தொடர்பான உளவியல் ரீதியிலான எதிர்வினைகள் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.

இந்தி இலக்கியத்தில் முதன்முதலாக அறிவியல் அடிப்படையில் விமர்சனம் எழுதும் முறையைத் தொடங்கிவைத்தது இவர்தான். இவரது பெரும்பாலான கட்டுரைகள் 'சரஸ்வதி' இதழில் வெளிவந்தன. பலரும் விரும்பும் படைப்பாளியாகப் புகழ்பெற்றார்.

'சிந்தாமணி' என்ற படைப்பு இவரது மாஸ்டர் பீஸ் எனப் போற்றப்படுகிறது. இது 2 தொகுதிகளாக வந்தது. இதில் கவிதைகள் மற்றும் கவிஞர்கள் குறித்த விரிவான அலசலும் இடம்பெற்றுள்ளது. சிந்தாமணியின் 3 மற்றும் 4-வது தொகுதிகள் இவரது மறைவுக்குப் பிறகு வெளியிடப்பட்டன.

சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர் 'ஷஷாங்க்' நாவலை வங்க மொழியில் இருந்து மொழிபெயர்த்தார். பல புகழ்பெற்ற ஆங்கில நூல்களை இந்தியில் மொழிபெயர்த்தார். இவரைப் பற்றி ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல நூல்களாக வெளிவந்தன. 'ஆச்சார்யா', 'பண்டிட்ஜி' என்றெல்லாம் போற்றப்பட்ட ராம்சந்திர சுக்லா 57-வது வயதில் (1941) மறைந்தார்.

 

 

No comments:

Post a comment